பொது செய்தி

தமிழ்நாடு

தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் வேகம் பெறுமா? கருணாநிதி துவங்கிய திட்டத்தை இழுத்தடிக்கும் அதிகாரிகள்

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
திருநெல்வேலி: தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டத்தில் இன்னமும் இரண்டு பாலங்கள் கட்ட வேண்டியிருப்பதால் வரும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.திருநெல்வேலி துாத்துக்குடி மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலையில் தென்மேற்கு பருவமழையும் அக்டோபர் நவம்பரில் வடகிழக்கு பருவமழையும் பெய்கிறது.இந்த நீர்
தாமிரபரணி, வெள்ளநீர், கால்வாய், தூத்துக்குடி, திருநெல்வேலி, கருணாநிதி

திருநெல்வேலி: தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டத்தில் இன்னமும் இரண்டு பாலங்கள் கட்ட வேண்டியிருப்பதால் வரும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருநெல்வேலி துாத்துக்குடி மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலையில் தென்மேற்கு பருவமழையும் அக்டோபர் நவம்பரில் வடகிழக்கு பருவமழையும் பெய்கிறது.இந்த நீர் பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் சேமிக்கப்பட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் தாமிரபரணி வழியே 13 ஆயிரத்து 758 மில்லியன் கன அடி நீர் வீணாக கடலுக்கு செல்கிறது.


கனவு திட்டம்


மத்திய அரசின் நீர்வளத் துறை மற்றும் ஆறுகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் 2009ல் தி.மு.க. ஆட்சியில் துவக்கப்பட்டது.வடகிழக்கு பருவமழையின்போது தினமும் 3200 கன அடி வீதம் திருநெல்வேலி துாத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி பகுதிகளுக்கு கால்வாய் மூலம் திருப்பி விடும் திட்டம் இது. தாமிரபரணியில் இருந்து பிரியும் புதிய கால்வாயுடன் பச்சையாறு கருமேனியாறு நம்பியாறு ஆகியவற்றையும் இணைக்கும் திட்டம் இது.

அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் துவங்கி திசையன்விளை அருகே எம்.எல்.தேரி வரையிலும் 75 கி.மீ.க்கு தாமிரபரணி நதி நீரை கொண்டு செல்வதாகும். இதற்காக தாமிரபரணி ஆற்றின் கன்னடியன் கால்வாயில் இருந்து புதிய கால்வாய் தோண்டப்பட்டது.அப்போது 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் துவக்கப்பட்டது. கால்வாய் பணிகள் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டன. வெள்ளங்குளியில் இருந்து பச்சையாறு வரையிலும் முதல் கட்ட பணிகளும் அங்கிருந்து மூலைக்கரைப்பட்டி வரை இரண்டாம் கட்ட பணிகளும் 2011 வரை நடந்தது.

அடுத்து 2011 - 2016 வரை அ.தி.மு.க. ஆட்சியில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால் திட்ட மதிப்பீடு 873 கோடி ரூபாய்க்கு உயர்ந்தது. 2016ல் ராதாபுரம் அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.வான இன்பதுரையின் தொடர் முயற்சியால் மூன்று நான்காவது கட்ட பணிகள் துரிதமாக நடந்தன. கடந்த 2019 பிப். 19ல் முன்னாள் முதல்வர் பழனிசாமி இந்த திட்டத்தின் மூன்றாம் கட்ட பணிகளை துவக்கி வைத்து தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்தார். 2020ல் ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை ஆய்வு செய்தபோது '2021 மார்ச்சுக்குள் திட்டத்தை முடித்து விடுவோம்' என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர். ஆனால் இன்னமும் முடியவில்லை.

தற்போது புதிய அரசு பொறுப்பேற்ற பின் ராதாபுரம் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற அப்பாவு சபாநாயகராக தேர்வானார். எம்.பி. ஞானதிரவியம் நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் ஆகியோருடன் சமீபத்தில் வெள்ளநீர் கால்வாய் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இட்டமொழிக்கு பின் இன்னமும் பணிகள் நடக்க வேண்டியுள்ளது. பொன்னாக்குடியில் நான்கு வழிச்சாலையின் குறுக்கே தண்ணீர் செல்லும் வகையில் பாலம் அமைக்க வேண்டும். இதற்கான செலவுத் தொகை 17 கோடியே 10 லட்சம் ரூபாயை என்.எச்.ஏ.ஐ. எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அரசு வழங்கி விட்டது. இதேபோல செங்குளத்தில் கால்வாய்க்கு மேலாக ரயில்வே பாலம் அமைக்க ரயில்வே துறைக்கு 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டது.

இருப்பினும் வரும் அக்டோபர் மாதத்தில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் நீரை சில தினங்களுக்காவது இந்த கால்வாய் மூலம் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் 2009ல் முதல்வர் கருணாநிதி துவக்கிய திட்டத்தை தி.மு.க. ஆட்சியில் தான் செயல்படுத்தியுள்ளோம் என காட்டுவதற்கு தி.மு.க. ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். ஆனால் நெடுஞ்சாலை ரயில்வே ஆகிய இரண்டு பெரிய பாலங்கள் இன்னமும் டெண்டர் நிலையிலேயே உள்ளன. வரும் வடகிழக்கு பருவமழைக்குள் சாத்தியம் இல்லை என்கின்றனர் நெடுஞ்சாலைத் துறையினர்.

இது குறித்து வெள்ளநீர் கால்வாய் திட்ட கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர் கூறுகையில், ''இந்த திட்டத்தை விரைவு படுத்துகிறோம். பொன்னாக்குடி நெடுஞ்சாலைக்கு கீழாக ஒரு பகுதி பாலமாக கட்டி விடுவோம். வரும் செப்டம்பருக்குள் அனைத்து பணிகளையும் முடித்து தாமிரபரணி நீரை மூன்றாவது திட்டப்பகுதி வரைக்குமாவது கொண்டு வருவோம்'' என்றார்.


latest tamil news57 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும்


தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை பகுதியை சேர்ந்த 32 கிராமங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் வட்டாரத்தை சேர்ந்த 18 கிராமங்களும் பயன்பெறும். 42 ஆயிரம் ஏக்கர் புதியபாசன பரப்பு உட்பட 57 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். 252 குளங்கள் மற்றும் 5220 கிணறுகள் பயன்பெறும். இந்த திட்டத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு புதிய நில எடுப்பு சட்டத்தின்படி இழப்பீடு வழங்கப்படும் என அரசு தெரிவித்தது. ஆனால், அதிகாரிகள் நிலம் வழங்கியோருக்கு உரிய தொகையை வழங்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
17-ஜூன்-202119:36:50 IST Report Abuse
John Miller iluthu adithathu athikarikal illai. Jeyathaan intha thitdathil mannai alli pottaar. adimaikal athai pinthodarnthaarkal.
Rate this:
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
17-ஜூன்-202117:05:43 IST Report Abuse
rsudarsan lic எங்கேடா எப்போது யாரோ ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொன்ன ஞாபகம்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
17-ஜூன்-202116:40:10 IST Report Abuse
r.sundaram கணிப்பாக இந்த வருட முடிவுக்குள் இந்த திட்டம் நிறைவு பெறாது. வேலைகள் நடைபெறுவதற்கான அறிகுறிகளே இல்லை. நான்குவழி சாலையில் அவ்வளவு சீக்கிரமாக பாலம் கட்டி முடிப்பார்களா? நிச்சயமாக இது நிறைவேறாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X