புதுடில்லி: உள்நாட்டு தேவையை அதிகரிக்க மக்களுக்கு நேரடியாக பணம் கொடுப்பதுடன், ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான ஊக்குவிப்பு தொகுப்பினையும் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) வலியுறுத்தியுள்ளது.
சி.ஐ.ஐ.,யின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நரேந்திரன் தனது செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஊக்குவிப்பு நிதியளிக்க அரசுக்கு வாய்ப்பு இருக்கிறது. பற்றாக்குறை அளவை ஜி.டி.பி.,யில் 8 சதவீதமாக விரிவுபடுத்தினால் சுமார் 2.6 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக செலவிட முடியும். கோவிட் தொற்றால் பாதிப்படைந்துள்ள உள்நாட்டு தேவையை அதிகரிக்க ஜன் தன் கணக்குகள் மூலம் நேரடி பணப்பரிமாற்றம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது போன்றவற்றை அரசு செய்ய வேண்டும். தனியாரின் முதலீட்டு சுழற்சி விரைவாக மீண்டும் தொடங்க இந்நடவடிக்கை அவசியம்.

வீட்டு கடன் வட்டியை குறைக்க வேண்டும்
இந்திய பொருளாதாரம் நுகர்வு சார்ந்த பொருளாதாரமாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவிகிதத்திற்கும் மேலாக உள்ளது. வருமானம், வாழ்வாதாரம் ஆகியவற்றின் மீதான கோவிட் தொற்றின் இரண்டு அலைகளின் தாக்கமும் நுகர்வோர் தேவையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, எரிபொருள் மீதான கலால் வரியைக் குறைத்தல், குறிப்பிட்ட கால வரி நிவாரணம், வீடு வாங்குபவர்களுக்கு வட்டி குறைப்பு, ஜி.எஸ்.டி விகிதங்களில் குறுகிய கால குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பொதுத் துறை வங்கிகளில் மறுமுதலீடு
பொதுத்துறை வங்கிகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.20,000 கோடி உடன், கூடுதலாக அதே அளவு மறுமுதலீடு தேவை. வங்கிகளின் வாராக் கடன்களில் முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், தொற்றுநோய் நிதி நிறுவனங்களுக்கு ஒரு பின்னடைவாக இருக்கும். பொதுத்துறை வங்கிகள் இந்திய தொழில்துறைக்கு மிகப்பெரிய கடன் ஆதாரமாக தொடர்கின்றன. பொருளாதாரம் மீண்டு வருவதால், வங்கிகள் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

எம்.எஸ்.எம்.இ.,க்களுக்கு சிறப்பு கவனம்
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ) சிறப்பு கவனம் அளிக்கப்பட வேண்டும். அவர்களின் நிதி சிக்கலைத் தணிக்க கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ரூ.3 லட்சம் கோடி ரூபாய் கடன் உத்தரவாத திட்டம், ரூ.5 லட்சம் கோடியாகவும், 2022 மார்ச் வரையும் நீட்டிக்கப்பட வேண்டும். மேலும் இத்திட்டத்தை அதிக நிறுவனங்களை கொண்டுள்ள சில்லறை மற்றும் இயந்திர பாகங்கள் துறைக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.
முறைசார் துறையில் வேலைவாய்ப்பை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தன்னிறைவு இந்தியா திட்டத்தை 2022 மார்ச் 31 வரை நீட்டிக்க வேண்டும். சி.ஐ.ஐ., ஆனது புதிய தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, வடிவமைப்பு, அறிவுசார் சொத்துக்கள் உருவாக்குதல் மற்றும் தொழில்நுட்ப மேலாண்மைக்கான 3 புதிய தேசிய மையங்களை அமைக்க உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE