அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடியுடனான சந்திப்பு 'மன நிறைவு!'

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
தமிழக முதல்வராக பதவியேற்ற பின், முதல் முறையாக நேற்று டில்லி சென்ற ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின், ''பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினேன். 'தமிழகம் குறித்த எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னிடம் நேரிடையாகச் சொல்லுங்கள்; நம்பிக்கையுடன் இருங்கள்' என, பிரதமர் கூறினார். இந்த சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது,'' என,
PM Modi, CM Stalin, Delhi visit, MK Stalin

தமிழக முதல்வராக பதவியேற்ற பின், முதல் முறையாக நேற்று டில்லி சென்ற ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின், ''பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினேன். 'தமிழகம் குறித்த எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னிடம் நேரிடையாகச் சொல்லுங்கள்; நம்பிக்கையுடன் இருங்கள்' என, பிரதமர் கூறினார். இந்த சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக, முதல்வர் ஸ்டாலின், தன் மனைவி துர்கா சகிதமாக நேற்று காலை டில்லி வந்தார். முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக டில்லி வருவதால், பெரிய அளவில் வரவேற்பு கொடுக்க திட்டமிட்டிருந்தாலும், கொரோனா சூழல் காரணமாக அது தவிர்க்கப்பட்டது.அதற்கு பதிலாக விமான நிலையத்தில் முதல்வரை, டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் பார்லிமென்ட் தி.மு.க., தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்றனர்.பின் நேராக, ஐ.டி.ஓ., பகுதியில், பா.ஜ., தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலை அருகே அமைக்கப்பட்டு வரும், தி.மு.க., அலுவலக கட்டட பணிகளை முதல்வர் பார்வையிடச் சென்றார்.

இங்கு ஏற்கனவே காத்திருந்த ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி.,க்கள் இளங்கோவன் உள்ளிட்டோர் முதல்வரை வரவேற்றனர். கட்டட மாதிரி மற்றும் வரைபடம் போன்றவற்றை ஆர்வத்துடன் விசாரித்தார்.அதுகுறித்த விபரங்களை, முதல்வரின் மருமகன் சபரீசனுக்கு மிகவும் நெருக்கமானவரும், அண்ணாநகர் எம்.எல்.ஏ., மோகனின் மகனுமான கார்த்திக் ஆர்வத்துடன் முன்வந்து, விளக்கியதை காண முடிந்தது.அந்த இடத்தை சில நிமிடங்கள் சுற்றிப் பார்த்த முதல்வர், பின் தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். தமிழக முதல்வர்கள் டில்லி வரும் போது அளிக்கப்படும், தமிழக அரசின் வழக்கமான காவல்துறை மரியாதை, ஸ்டாலினுக்கு தரப்பட்டது.

ஏற்கனவே காத்திருந்த, தி.மு.க., - எம்.பி.,க்கள், தமிழ்நாடு இல்ல உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் தந்த வரவேற்பை முடித்து, நேராக முதல் தளத்தில் இருக்கும் முதல்வருக்கான அறைக்குச் சென்று தங்கினார். இங்கு தி.மு.க., - எம்.பி.,க்களுடன் ஆலோசனை கூட்டம் அரை மணி நேரம் நடந்தது. அவர்கள் வெளியேறியதும், தலைமை செயலர் இறையன்பு, முதல்வரின் செயலர்கள் உதயச்சந்திரன், உமாநாத் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.

மாலையில், பிரதமரைச் சந்திக்கும் போது பேச வேண்டிய விஷயங்கள் குறித்தும், அளிக்கப்பட வேண்டிய மனுவில் உள்ள விபரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அமைச்சர் துரைமுருகனும் உடன் இருந்தார். மதிய உணவு மற்றும் ஓய்வுக்கு பின், மாலையில் தமிழ்நாடு இல்லத்திலிருந்து லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முதல்வர் கிளம்பிச் சென்றார். பிரதமருடனான முதல்வரின் சந்திப்பு, 20 நிமிடங்கள் நீடித்தது.

இந்த சந்திப்புக்கு பின், தமிழ்நாடு இல்லம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது; பிரதமரை முன்கூட்டியே சந்தித்து இருக்க வேண்டும். கொரோனா காலமாக இருப்பதால், அவரை சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. இருப்பினும், இன்று பிரதமருடனான சந்திப்பு, மனநிறைவுடன் கூடியதாக அமைந்தது. முதல்வராக பொறுப்பேற்றதற்காக, பிரதமர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்; அதற்கு நன்றி கூறினேன்.

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக, பிரதமர் உறுதி அளித்துள்ளார். 'தமிழகம் குறித்த எந்த கோரிக்கையாக இருந்தாலும், எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு, என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம்' என, வெளிப்படையாக அவர் கூறினார். தமிழக திட்டங்கள், தேவைகள் குறித்து அவரிடம் மனு அளித்தேன். 'இத்திட்டங்கள் குறித்தெல்லாம் அதிகாரிகளுடன் உரிய முறையில் ஆலோசித்து நல்ல முடிவெடுப்பேன்; நம்பிக்கையோடு இருங்கள்' என்றார். அந்த நம்பிக்கையுடன் தான் நாங்களும் உள்ளோம்.

மத்திய அரசுடனான தமிழக அரசின் உறவு, முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியது போல, 'உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்ற அணுமுறையில் இருக்கும். ஏழு பேர் விடுதலை குறித்து, ஜனாதிபதியிடம் ஏற்கனவே கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கோர்ட்டில் உள்ளது; அது, எந்த ரீதியில் செல்கிறது என்பதை வைத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் சிலவற்றை, மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து தான் நிறைவேற்ற முடியும்.அவ்வாறு நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையை இந்த டில்லி பயணம் தந்துள்ளது. தொடர்ந்து தமிழக அரசு தரும் அழுத்தத்திற்கு, டில்லி தமிழ் ஊடகங்களும் இணைந்து செயல்பட வேண்டும்.தற்போது வைத்துள்ள கச்சத்தீவு உள்பட பல்வேறு கோரிக்கைகளும், முந்தைய ஆட்சிகளில் மத்திய அரசிடம் வைக்கப்பட்டவை என்றாலும், இப்போது, அந்த திட்டங்களின் காரண காரியங்களையும், அவசியத்தையும் விளக்கியுள்ளோம்.

தடுப்பூசிகளை முறையாக, போதுமான அளவில் மத்திய அரசு அனுப்பி விட்டால் பிரச்னையே இல்லை. தடுப்பூசி கையிருப்பை வெளியில் சொல்லக்கூடாது என்கிறது மத்திய அரசு.தடுப்பூசி அனுப்புவதில் உள்ள சிரமங்களையும், மத்திய அரசு அவ்வப்போது கூறுகிறது. அதனால் தான் செங்கல்பட்டில் தடுப்பூசி மையம் செயல்பட அனுமதிக்கும்படி கேட்டுள்ளோம்.

முதியோருக்கான உதவித் தொகையை உயர்த்துவது உட்பட, தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம். டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைக்கப்படும்.தேர்தலுக்கு முன், என் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தற்போது, அதற்கெல்லாம் என் ஒரே பதில், 'ஓட்டுப் போட்டவர்களுக்காக மட்டுமல்ல, எங்களுக்கு ஓட்டுப் போடதவர்களுக்கும் பணியாற்றுவோம்' என்பது தான். தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போடாமல் விட்டு விட்டோமே என, அவர்கள் வருத்தப்படும் அளவுக்கு, மக்கள் நலப் பணிகளை மேற்கொள்வோம்; இது தான் எங்கள் குறிக்கோள். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


ஸ்டாலினின் கோரிக்கைகள் என்ன?பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளித்த கோரிக்கை மனுவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

*மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது. முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை, 156 அடியாக உயர்த்த வேண்டும். காவிரி - கோதாவரி; காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் இந்தாண்டுக்குரிய தண்ணீரை திறக்க வேண்டும்

*கச்சத்தீவை மீட்க வேண்டும்; பாக் நீரிணை பகுதியில், மீனவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

* புதிய மின்சார சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். நிலக்கரி வினியோகத்தில் உள்ள பிரச்னைகளை தீர்க்க வேண்டும்

* ஜி.எஸ்.டி., நிலுவை தொகையை வழங்க வேண்டும். 14வது நிதி ஆணையத்தின் நிலுவை தொகையையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்

* 'நீட்' நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து கட்டப்படுவதோடு, கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்

* தமிழகத்துக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக வழங்க வேண்டும். செங்கல்பட்டு, குன்னுார் தடுப்பூசி நிறுவனத்தை உடனே திறக்க வேண்டும்.உயிர்காக்கும் மருந்தை கூடுதலாக வழங்க வேண்டும். மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும்

* மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். 'மெகா' ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். சேலம் உருக்காலையில் உள்ள கூடுதல் நிலத்தை, பாதுகாப்பு தொழில் பூங்கா அமைக்க வழங்க வேண்டும்

* புதிய தேசிய கல்வி கொள்கையை திரும்பப் பெற வேண்டும். கட்டாய கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கல்வி திட்டங்களுக்கான நிதியை வழங்க வேண்டும்

* சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, சிறப்பு நிவாரண தொகுப்பு வழங்க வேண்டும்

* சென்னை மெட்ரோ ரயில், இரண்டாம் கட்ட திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ரயில்வே நிலத்தை, மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்க வேண்டும்

* இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை தர வேண்டும். சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்

*தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சீரமைக்கப்பட வேண்டும். திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும்

*சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை; சென்னை விமான நிலையம்- செங்கல்பட்டு மேம்பால சாலை பணிகளை விரைவு படுத்த வேண்டும். சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்

*துாத்துக்குடி துறைமுகத்தை விரைவுபடுத்த வேண்டும். சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் அமைக்க வேண்டும்

*சென்னையில் உலகத்தரம் வாய்ந்த, புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும். சேலம், துாத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்தி, நவீனப்படுத்த வேண்டும்

*மகளிருக்கான, 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும். நகர்ப்புற பகுதிகளில் வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்

*தமிழகத்தில் புதிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்த வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

*ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களை கைவிட வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றிருந்தன.


சோனியாவுடன் இன்று சந்திப்பு?


முதல்வர் ஸ்டாலின், பிரதமரை பார்க்க, 'லேண்ட் க்ரூசர்' காரில் பயணித்தார். பிரதமரை சந்தித்த பிறகு, மார்க்., கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., தலைவர்களான சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோரை சந்தித்துப் பேசினார். இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியாவை, முதல்வர் சந்திக்கலாம் என கூறப்பட்டாலும், அதுவும் கடைசி நேரத்தில் தான் உறுதியாகும் என, தெரிகிறது. இரண்டு நாள் பயணத்தை முடித்து, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்ப உள்ளார்.
- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
19-ஜூன்-202106:03:38 IST Report Abuse
g.s,rajan டப்பு காவலா மோடிஜி பைசா திஜியே . ஜி.எஸ்.ராஜன் சென்னை ,
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
18-ஜூன்-202122:12:19 IST Report Abuse
s vinayak ஆக நீட் தேர்வால் உயிர் நீத்த தியாகிகளுக்கு இந்த வருடம் இரங்கல் இருக்காது.
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
18-ஜூன்-202121:26:16 IST Report Abuse
Perumal The persons speaking against ruling party of TN have to bark continuously for 5 years.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X