அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பெண் போலிசுக்கு சலுகை என்பது பிற்போக்குத்தனம்'

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (18+ 92)
Share
Advertisement
முதல்வர் பயணம் செய்யும் போது, பாதுகாப்பு என்ற பெயரில், சாலை ஓரங்களில் போலீசார் நிறுத்தப்படுகின்றனர். அதில், பெண் போலீசாரும் இடம் பெறுவர். 'இனிமேல், இதுபோன்ற பந்தோபஸ்து பணிகளுக்கு, பெண் போலீசாரை பயன்படுத்தக் கூடாது' என, முதல்வர் உத்தரவுப்படி, அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும், டி.ஜி.பி., சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.இந்த அறிவிப்புக்காக, பெண்ணியவாதிகள் பலரும்,
Lady Police, Thilakavathi IPS, Thilakavathi

முதல்வர் பயணம் செய்யும் போது, பாதுகாப்பு என்ற பெயரில், சாலை ஓரங்களில் போலீசார் நிறுத்தப்படுகின்றனர். அதில், பெண் போலீசாரும் இடம் பெறுவர். 'இனிமேல், இதுபோன்ற பந்தோபஸ்து பணிகளுக்கு, பெண் போலீசாரை பயன்படுத்தக் கூடாது' என, முதல்வர் உத்தரவுப்படி, அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும், டி.ஜி.பி., சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இந்த அறிவிப்புக்காக, பெண்ணியவாதிகள் பலரும், ஸ்டாலினை பாராட்டி வருகின்றனர். ஆனால், 'பாலின அடிப்படையில், பெண் போலீசாருக்கு பணியை பங்கிட்டுக் கொடுக்கும் இத்தகைய அறிவிப்பு, பழமைவாதத்தை புகுத்துவதாகும். இதனால், எதிர்காலத்தில் காவல் துறை பணிக்கு வரும், பெண்களின் எண்ணிக்கை குறையும்' என, தன் அதிருப்தியை தெரிவித்துள்ளார், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.,அதிகாரி திலகவதி.

அவர் மேலும் கூறியதாவது: எல்லாத் துறைகளிலும், ஆண், பெண் என, இரு பாலரும் சமமாகவே பாதிக்கப்படுகின்றனர். அதுபோலவே, காவல் துறையிலும் ஆணும், பெண்ணும் சமம் தான். இரு பாலருக்குமே, பயிற்சி, சம்பளம், வாய்ப்புகள், வீடுகள், கடன் உள்ளிட்ட சலுகைகள் எல்லாம், சமமாகவே கொடுக்கப்படுகின்றன. இப்படி எல்லாமே சமம் என்கிற போது, பெண்ணுக்காக எந்த இடத்திலும், இரக்கத்தை வரவழைத்து, அதற்காக சில சலுகைகளை பெறுவது கூடாது. அது, பெண்களின் வாழ்க்கையில் பின்னடைவையே ஏற்படுத்தும். சலுகை பெற முயற்சிப்பவர்கள், கடமையையும் சரிவர செய்ய மாட்டார்கள்.


விலக்கு


சட்டம் -- ஒழுங்கு பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் போலீசாரை விட, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் குற்றப் பிரிவுகளில், அதிக அளவிலான பெண் போலீசார் உள்ளனர். குறிப்பாக, லஞ்ச ஒழிப்புத் துறையில், நான்கு ஆண் போலீசார் பணியாற்ற வேண்டிய இடத்தில், 10 பெண் போலீசார் பணிபுரிகின்றனர். அதனால், சட்டம் - ஒழுங்கு பிரிவில், ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு, நான்கு பேர் இருக்க வேண்டிய இடத்தில், ஒரு ஆண் காவலர் மட்டுமே பணி புரிகிறார். அவரது வேலை எப்படி சிறப்பானதாக இருக்கும்?வெளி மாநில குற்றவாளிகள், உள்ளூர் குற்றவாளிகள் என, போலீசார் வகை பிரித்து பணியாற்றுகின்றனர்.

வெளியூர்களுக்கு தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க, ஆண் போலீசாரே செல்கின்றனர். பெண் போலீசாரை அழைத்துச் செல்வதில்லை. எப்பவும், மேஜை முன் அமர்ந்து கொண்டு, 'எப்..ஐ.ஆர்.,' மட்டும் எழுதினால் போதும் என, நினைக்கின்றனர்.இந்த நடைமுறை தவறானது; சிறப்பு, 'டீம்'களிலும், பெண் போலீசார் இடம் பெற வேண்டும். காவல் துறையின் அனைத்து பணிகளையும், பெண் போலீசாராலும் செய்ய முடியும் என்ற ரீதியில், அவர்களை தயார்படுத்த வேண்டும். அதை விடுத்து, அவர்களை சிறுமைப்படுத்துவது போன்ற காரியங்களை செய்யக்கூடாது. பெண் போலீசார் மீது பரிவுகாட்டி, அவர்களை துணிச்சலான வேலைகளுக்கு பயன்படுத்தவில்லை என்றால், ஓய்வு பெறும் வரை பெண் போலீசார், சவாலான பணிகளை செய்ய வாய்ப்பே இருக்காது. பாலின அடிப்படையில் வேலைப்பகிர்வு என்பது, காவல் துறைக்கே மிகவும் ஆபத்தானது.

கழிப்பறை பிரச்னை, மாதவிடாய் பிரச்னை, கர்ப்ப கால பிரச்னை போன்றவை, பெண் போலீசார் சந்திக்கும் முக்கிய பிரச்னைகள். இல்லையென்று யாரும் மறுக்கவில்லை.ஆனால், இப்பிரச்னைகளுக்கு என்ன தீர்வு என்று பார்க்க வேண்டும். அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால், பிரச்னை தீர்ந்து விடும். அதை விடுத்து, பெண்களை குறிப்பிட்ட பணியில் இருந்து விலக்கி வைப்பது என்பது எப்படி தீர்வாகும்?முதல்வரின் இந்த சலுகையை, பெண் போலீசார் ஏற்றுக் கொள்ளக்கூடாது. சலுகைகளுக்காக பெண்கள் யாரிடம் போய் நின்றாலும், அவர்களின் கவுரவம் போய் விடும். காலப்போக்கில், சலுகை வழங்கியவருக்கு அடிபணிந்து செல்ல நேரிடும்.


பின்விளைவு


மேலும், தங்களுக்கான மரியாதை, வேலைத்திறன், பணித்திறன் எல்லாவற்றையும், காலப்போக்கில் பெண் போலீசார் இழக்க வேண்டிய சூழல் உருவாகும்.அதனால், பாலின அடிப்படையில், பணியை பங்கிட்டுக் கொடுப்பது, பிற்போக்குத்தனமான பழமைவாதம் தான். அதை புகுத்தவே, இப்படி செய்கின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது.'பெண்களாலும், அனைத்து பணிகளையும் பார்க்க முடியும் என்பதை நிரூபிக்கத்தானே, நிறைய கஷ்டப்பட்டு போலீஸ் துறைக்கு வந்திருக்கிறோம்' என்ற உணர்வு, பெண் போலீசார் அனைவருக்கும் இருக்க வேண்டும்.

அத்துடன், அரசின் அறிவிப்பை, பெண் போலீசார் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என சொல்வதில், முக்கியமான பின் விளைவு ஒன்றும் உண்டு.'எளிதான பணியை செய்யும் உங்களுக்கு, ஏன் இவ்வளவு அதிக சம்பளம்?' என கேட்டு, எதிர்காலத்தில் சம்பள குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டால், பெண் போலீசார் அதை ஏற்றுக் கொள்வார்களா? அப்படி ஒரு நிலை உருவாகாது என, யாராவது உறுதி கொடுக்க முடியுமா?இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்தி, பெண் போலீசார் சந்திக்கும் அசவுகர்யங்களை களையலாம். ஒரு முன் மாதிரி அரசு, அதைத்தான் செய்ய வேண்டும்.போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில், ௨௫ ஆண்டுகளுக்கு முன்னர், பெண் போலீசாரை பயன்படுத்தினோம். இன்றைக்கு அது குறைந்து விட்டது. காரணம், காவல் துறைக்குள் ஊடுருவிய பிற்போக்குத்தனமும், பழமை வாதமும் தான். எக்காரணத்திற்காகவும், பழமைவாதத்தை ஊக்குவிக்கக் கூடாது.

ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் போன்றோர் செல்லும் போது, 'ரூட்' பந்தபோஸ்த்து பணியில் ஈடுபடும் பெண் போலீசார், பல மணி நேரம் ஒரே இடத்தில் இருக்க நேரிடும் போது, சில பிரச்னைகளை சந்திக்கின்றனர். அதற்கு தீர்வாக, ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை, 'மொபைல் டாய்லெட், மொபைல் ரெஸ்டாரென்ட்' வசதிகளை செய்து கொடுத்தால், பிரச்னை தீர்ந்து விடும். இந்த வசதியால், ஆண் காவலர்களும் பயன் பெறுவர். தேவையெனில், மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை, பெண் போலீசாரை சுழற்சி முறையில் மாற்றலாம். அதேபோல, மாதவிடாய் நிகழ்வை காரணம் காட்டி, பணியை பகிர்ந்தளிப்பதும் தவறு தான். மாதவிடாய் சமயத்தில், பெண்களை தனிமைப்படுத்தி உட்காரவைத்த தீண்டாமை கொடுமை, போலீசிற்கு உள்ளும் வந்து விடும். அதனால், 'மொபைல் டாய்லெட்'டில், 'நாப்கின்' மாற்றும் பிற வசதியையும், ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.


விசாரிப்பு


முன்னாள் பிரதமர் ராஜிவ், பிரசாரத்திற்காக ஸ்ரீபெரும்புதுாருக்கு வந்த போது, அவரைக் கொல்ல தனு என்ற பெண், அவரிடம் நெருங்கி சென்றார். அப்பெண்ணை கையை போட்டு தடுத்து நிறுத்தினார், அப்போது பணியில் இருந்த பெண் போலீஸ் அனுசுயா. நானும், காவல் பணியில் இருந்தேன். தடுத்த அனுசுயாவை, ராஜிவ் தடுத்து, 'ரிலாக்சாக' இருக்கச் சொல்லி விட்டார். கொஞ்ச நேரத்தில் குண்டு வெடித்து ராஜிவ் இறந்தார்; அனுசுயாவுக்கு அடிபட்டது. மருத்துவமனையில் சிகிச்சையில் பல மாதங்கள் இருந்தார்.இப்படி முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரும் போது, சந்தேகப்படும்படியாக பெண்கள் நின்றால், அவர்களை, பெண் போலீசார் விசாரிப்பர்; விசாரிக்க வேண்டும்.

தனு போன்ற பெண் குற்றவாளிகளை கண்காணிக்கவும் தான், காவல்துறையில் பெண்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் தான், அங்கு பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனவே, முதல்வர் உத்தரவை ஏற்று, பெண் போலீசாரை எளிதான பணிகளுக்கு கொண்டு சென்றால், இதையெல்லாம் யார் செய்வர் என்ற கேள்வியும் எழும். இவ்வாறு அவர் கூறினார்.

-- நமது நிருபர் - -

Advertisement
வாசகர் கருத்து (18+ 92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
20-ஜூன்-202112:49:38 IST Report Abuse
Nellai tamilan மிகவும் சரியான கருத்து. வேலை செய்யும் இடங்களில் இருக்கும் பிரசனைகளை தீர்க்க முயல வேண்டுமே தவிர பாலின அடிப்படையில் பாரபட்சம் காண்பிக்க ஆரம்பித்தால் அது சரியான நிர்வாகம் அல்ல. பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்று குரல் குடுக்கும் போது அதில் வரும் பிரசனைகளை மட்டும் சந்திக்காமல் ஆண்களிடம் தள்ளி விடுவது தாழ்வுமனப்பான்மையை உருவாக்கும்.
Rate this:
Cancel
nizamudin - trichy,இந்தியா
20-ஜூன்-202109:50:42 IST Report Abuse
nizamudin பெண் காவலர்கள் மீது இந்த ஒரு விஷயத்தில் நல்ல முடிவு எடுத்துள்ளார் முதல்வர் எங்கு பார்த்தாலும் எந்த திசையிலும் காவலர்கள் என்ற போக்கினை மாற்ற வேண்டும்
Rate this:
Cancel
r ganesan - kk nagar chennai,இந்தியா
19-ஜூன்-202118:44:56 IST Report Abuse
r ganesan இந்த மாதிரி சலுகைகள் கொடுப்பது நல்லது இல்லை. தேசீயமயமாக்கப்பட்ட பல வங்கிகளில் கொரோனவை கரணம் கட்டி பல பெண்கள் வேலைக்கு வருவது இல்லை. காசோலைகள் தேங்கி கிடப்பதாக சொல்லுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X