சென்னை,: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வெளியிட்ட அறிக்கை:
பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவ படிப்புகளில், 7.5 சதவீத இடஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு.பாடப்புத்தகம் முதல் சீருடை வரை இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் கூடுதலாக இரண்டு லட்சம் மாணவர்கள் சேர வாய்ப்புண்டு என, கல்வியாளர்கள் கருதுகின்றனர். அதற்கேற்ப பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் 15 சதவீதம் வரை இடம் அதிகரிக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது.
அதற்கேற்ப பள்ளிகளின் உட்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு.மாணவர்கள் ஆங்கிலத்தை தன்னம்பிக்கையோடு பேசவும், எழுதவும் பயிற்சிகள்; 'ஆன்லைன்' வகுப்புகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். நம் அரசு பள்ளிகளை, தனியார் பள்ளிகளை விட பன்மடங்கு மேம்பட்டதாக மாற்ற முடியும். தமிழக அரசுக்கு இதை செய்யும் ஆற்றல் உண்டு; முதல்வர் இதை சாத்தியமாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.