சென்னை :''கலைவாணர் அரங்கில், கவர்னர் உரை மட்டுமின்றி, பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும்,'' என, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
கொரோனா பரவலை தொடர்ந்து, கோட்டையில் உள்ள பாரம்பரியம் வாய்ந்த சட்டசபை அரங்கில் கூட்டம் நடத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.அதற்கு மாற்றாக, சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில், சமீபத்தில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களும், இங்கு பதவி ஏற்றனர். வரும், 21ம் தேதி காலை, 10:00 மணிக்கு, இங்கு மீண்டும் சட்டசபை கூட்டம் நடக்க உள்ளது.அதில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, உரை நிகழ்த்த உள்ளார். இதற்காக, கலைவாணர் அரங்கின், மூன்றாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், தற்காலிக சட்ட சபை அமைக்கும் பணிகளில், பொதுப்பணித் துறையினர்தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பட்ஜெட் தாக்கலும் இங்கு தான்
சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர், நேற்று அங்கு வந்து பணிகளை பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினர்.பின், சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:கவர்னர் உரை மட்டுமின்றி, பட்ஜெட் தாக்கலும் இங்கு நடக்கவுள்ளது. சட்டசபை நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட அனைவரும், கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
தலைமை செயலகம், எம்.எல்.ஏ.,க்கள் விடுதி போன்ற இடங்களில், கொரோனா பரிசோதனை இன்று துவங்குகிறது.கொரோனா, 'நெகட்டிவ்' சான்று மட்டுமின்றி, உரிய அடையாள அட்டையுடன் வருபவர்கள் மட்டுமே, கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.