கோவை:சின்னாம்பதி பழங்குடியின பகுதியில் உள்ள, 20 குழந்தைகளுக்காக, தனது வீட்டையே பள்ளிக்கூடம் போல மாற்றி, தினசரி வகுப்பு எடுக்கிறார் அப்பகுதியை சேர்ந்த, முதல் பட்டதாரி சந்தியா.
மாவுத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட, சின்னாம்பதி பழங்குடியின கிராமத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவ்வூரில் உள்ள தொடக்கப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு முடித்தால், 10 கிலோமீட்டர் அப்பால் உள்ள மாவுத்தம்பதி உயர்நிலைப்பள்ளிக்கு தான் செல்ல வேண்டும்.மேல்நிலை வகுப்பு தொடர குனியத்துார், பிச்சனுாருக்கு, பேருந்தில் செல்ல வேண்டியிருப்பதால், பலர் பள்ளிக்கல்வியை முடிப்பதே இல்லை.
இந்நிலையில் ஊரடங்கும் அறிவிக்கப்பட்டதால், படிப்பு வாசனையே அறியாத அப்பெற்றோரின் குழந்தைகள், வீதி வீதியாக விளையாடியபடி, பொழுதை கழித்து வந்தனர். இக்குழந்தைகளை திரட்டி, தனது வீட்டையே பள்ளியாக மாற்றியுள்ளார், அப்பகுதியின் முதல் பட்டதாரியான சந்தியா.இங்கு, காலை 9:00 மணிக்கு துவங்கும் வகுப்புகள், மதியம் 3:00 மணி வரை செயல்படுகிறது. வாசித்தல், எழுதுதல், ஓவியம் வரைதல், கணக்கு போடுவது என, ஒற்றை ஆளாக, தனது கிராம குழந்தைகளை வழிநடத்தி, அமைதியாக புரட்சி செய்து வருகிறார் சந்தியா.
இவரை தொடர்பு கொண்டபோது, ''நான் 2018ல், தனியார் கல்லுாரி ஒன்றில், பி.காம்., முடித்தேன். கடந்தாண்டில் கல்லுாரி படிப்பு முடித்ததும், திருப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்றில், மனிதவள மேம்பாட்டு பிரிவில் பணி கிடைத்தது.கல்லுாரி படித்த போது, மாலை நேர சிறப்பு வகுப்பு எடுத்து வந்தேன். ஊரடங்கு காரணமாக, தற்போது வீட்டிலிருப்பதால், இக்குழந்தைகளுக்கு முழு நேர வகுப்பு எடுத்து வருகிறேன். எங்கள் பகுதியில் எட்டாம் வகுப்பு வரை, குழந்தைகள் படித்து வருகின்றனர்.ஊரடங்கு தளர்வு முடிந்ததும், வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால், எங்கள் பகுதி குழந்தைகளுக்கு, யாராவது வந்து வகுப்பு எடுத்தால், பயனுள்ளதாக இருக்கும். கல்வி மட்டுமே, எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என உறுதியாக நம்புகிறேன்,'' என்கிறார். கோவையின் புதிய கலெக்டர், நிச்சயம் இக்குழந்தைகளை கைவிட மாட்டார் என்று நம்புகிறார் சந்தியா.