சென்னை : 'உச்ச நீதிமன்றத்தின் காவிரி இறுதி தீர்ப்புக்கு எதிராக, மேகதாது அணை கட்டும் முடிவை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: 'மத்திய அரசு அனுமதி வழங்கியதும், மேகதாது அணை கட்டப்படும்' என, கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒருதலைபட்சமாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அறிவித்திருப்பது, மிகவும் கண்டனத்திற்குரியது.
இத்திட்டம், தமிழக விவசாயிகள் நலனுக்கு விரோதமானது.உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு அடிப்படையில், தமிழகத்திற்கு கிடைக்கும், காவிரி நீரின் அளவை குறைத்திடும் எனக்கூறி, தமிழக அரசு மிக கடுமையாக இத்திட்டத்தை எதிர்த்து வருகிறது.தமிழக சட்டசபையில், ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பிரதமரிடம் தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் நேரடியாக 2015 மார்ச் 28ல் தீர்மானத்தை வழங்கி, எதிர்ப்பு தெரிவித்தனர்.உச்ச நீதிமன்றத்தில் புதிய அணை கட்டுவது தொடர்பாக, தமிழக அரசு தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்போது, பிரதமரை டில்லியில் நேரில் சந்தித்த போதும் 'மேகதாது அணை கட்ட, அனுமதி வழங்கக் கூடாது' என, வலியுறுத்தி உள்ளேன்.உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தன்னிச்சையாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது, இரு மாநில நல்லுறவுக்கு, எவ்விதத்திலும் உகந்த நிலைப்பாடு அல்ல.
இது, தமிழகத்தையும், தமிழக விவசாயிகளையும், வஞ்சிக்க முயற்சிக்கும் செயல். எனவே, தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்கும், உச்ச நீதிமன்றத்தின் காவிரி இறுதி தீர்ப்புக்கும் எதிரான, மேகதாது அணை கட்டும் முடிவை, கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும். மேகதாது அணை கட்ட, மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என, தமிழகம் சார்பில் என் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE