சென்னை :''சட்டசபையில், ஜனநாயக முறைப்படி விருப்பு வெறுப்பின்றி உறுப்பினர்கள் பேச நேரம் ஒதுக்கப்படும்,'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.தமிழக சட்டசபை கூட்டத்தொடர், நாளை மறுதினம் துவங்குகிறது. கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து, முக்கிய துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.சபாநாயகர் அப்பாவு தலைமை வகித்தார். துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறடா கோவி செழியன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின், சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி:சட்டசபை கூட்டத் தொடரை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. அது, பரிசீலனையில் உள்ளது.
கட்டாயம் அது நிறைவேற்றப்படும். 'நீட்' தேர்வு குறித்த பாதிப்புகளை ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு ஆராய்ந்து பரிந்துரைகளை அளிக்கும். பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்த போது, இது தொடர்பாக வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வு குறித்து விரைவில் நல்ல முடிவு வரும். சட்டசபையில் ஜனநாயக முறைப்படி, விருப்பு வெறுப்பின்றி நேரம் ஒதுக்கப்படும். முதல்வர் அறிவித்த 14 வகை மளிகை பொருட்களை, அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் வழங்கும்படி முதல்வர் கூறியுள்ளார். அதே ஜனநாயகம் சட்டசபையிலும் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதன்பின் சபாநாயகர் அப்பாவு, நேற்று ராஜ் பவனில் கவர்னர் பன்வாரி லால் புரோஹித்தை சந்தித்தார். சட்டசபையில் நாளை மறுதினம் உரையாற்ற வரும்படி முறைப்படி அழைப்பு விடுத்தார்; அவரும் அதற்கு சம்மதித்தார்.