ஆசிரியர் பணி என்பது, அபரிமிதமான சக்தி வாய்ந்த பணி. அத்தகைய ஆசிரியர் பணியை வெட்கித் தலை குனியும்படி, ஒரு சில ஆசிரியர்கள் மாற்றிஉள்ளனர்.காலம் காலமாக மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது ஆசிரியர் பணி. ஆசிரியர் இல்லம் சென்று அவருக்கு பணிவிடை செய்து, கல்வி பயின்ற குருகுல கல்வி முறை, பல மாற்றங்களுக்கு உட்பட்டு இன்று, ஆசிரியர்கள் மாணவர் வீடுகளுக்கு சென்று கல்வி கற்பிக்கும், 'பிரைவேட் டியூஷன்' முறைக்கு வந்து விட்டோம்.
அதற்கு ஒரு படி மேலே, கொரோனா தொற்று தாக்கத்தின் காரணமாக மாணாக்கர்கள், ஆசிரியர்கள் இரு பிரிவினரும் பள்ளிக்கு செல்ல இயலாத நிலையில், 'ஆன்லைன்' வகுப்பு மூலம், ஆசிரியர் தன் வீட்டில் இருந்தபடி கல்வி பயிற்றுவிக்கும் சூழ்நிலை உள்ளது.
பல ஆன்லைன் வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், ஒரு சில விஷமத்தனமான ஆசிரியர்களால் அதற்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.
தேவை மாற்றம் -
ஆசிரியர் பயிற்சிக் கல்லுாரிகள், கல்வி மற்றும் உடற்கல்வி பயிற்சிக் கல்லுாரிகள் தமிழகம் எங்கும் பல்லாயிரம் ஆசிரியர்களை ஆண்டுதோறும் உருவாக்கி வருகின்றன.இக்கல்லுாரிகளை கண்காணித்து, கட்டுப்படுத்தும் பல்கலைக் கழகங்களும் பணியாற்றி வருகின்றன.பல்கலைக் கழகங்களும், தன்னாட்சி பல்கலைக் கழகங்களும், நிகர்நிலை பல்கலைக் கழகங்களும், தன்னாட்சி கல்லுாரிகளும் பாடத் திட்டங்களை உருவாக்குவதற்கும், அவற்றை மாற்றி அமைப்பதற்கும் அதிகாரம் பெற்று செயலாற்றி வருகின்றன.பாடத் திட்டங்களில் போதிக்க வேண்டிய பாடங்கள், போதிக்கும் முறை ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஆனால், மாணவ - மாணவியரிடம் ஆசிரியர்கள் எப்படி பழக வேண்டும்; தொட்டு பேசாமலும், வார்த்தைகளால் மனதை புண்படுத்தாமலும் எப்படி கற்றுக் கொடுக்கலாம் என்ற விதிமுறைகள் பாடத் திட்டங்களில் இல்லை.
தேவை மனமாற்றம்
ஆசிரியர்களை ஆண்டவனுக்கு நிகராக நினைத்த சமுதாயம், நம் சமுதாயம். ஆனால், இன்றோ வக்கிர புத்தி கொண்ட ஒரு சில ஆசிரியர்களால் கேவலமாக விமர்சிக்கப்படுகிறது.ஆசிரியர் பணியில் பணியாற்றி வரும் ஒவ்வொருவரும், 'மாணவர்களை பரிவோடும், பண்போடும் நடத்துவோம்' என உறுதிமொழி எடுத்துவிட்டு வந்தால் மட்டும் போதாது.உண்மையில் அவர்களை பண்போடும், பரிவோடும் நடத்தும் வகையில் சிறப்போடு நடந்து காட்ட வேண்டும். மற்ற மாணவர்களுக்கு முன்னால் சக மாணவரை பழிப்பதும், குற்ற உணர்வை ஏற்படுத்துவதும் எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களுக்கு ஏற்புடையதல்ல.'அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்' என்று சொன்னதெல்லாம் அந்த காலம்.
அடிக்காமலேயே அவர்களை கற்க வைக்கலாம் என்பது இந்த காலம்.போட்டியில் சிறப்பாக ஆடாத விளையாட்டு வீரரை, மைதானத்தில் பலர் முன்னால் அடித்து, சரியாக ஆடச் சொல்லும் விளையாட்டு ஆசிரியரை சமுதாயத்தில் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?சரியாக படிக்கவில்லை என்பதால், கொதிக்கும் வெயிலில் மண் தரையில் முட்டி போட வைக்கும் வகுப்பாசிரியரின் வக்கிர புத்தியை யார் தான் ஏற்றுக் கொள்வர்?தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடத்தில், 'நீ பிற்காலத்தில் என்னவாக போகிறாய்...' என்ற கேள்வியை முன்வைத்தால், 90 சதவீத மாணவர்கள் ஆசிரியராகத் தான் விருப்பம் என சொல்வர்.அந்த வயதில் அவர்களுக்கு ஆசிரியர்களின் மேல் உள்ள நல்ல எண்ணமே காரணம்.
நாளடைவில் அவர்களது கனவு டாக்டராக, பொறியாளராக மாறிப் போனாலும், ஆசிரியர்கள் அதே பணியில் தான் இருந்தனர், இருக்கின்றனர், இனியும் இருப்பர். எனவே தான், ஆசிரியர்களை பல மாணக்கர்களை உயர்த்தும் உன்னத ஏணிப் படிகள் என்றே இன்றும் உவமைப் படுத்தப்படுகின்றனர்.அத்தகைய ஆசிரியர் பணியில் உள்ளவர்கள், அது வகுப்பறையாக இருந்தாலும், விளையாட்டு திடலாக இருந்தாலும் பண்போடு நடந்து கொள்ளும் மனப்பக்குவம் தேவை.இதை ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு நான் பொதுவாக வைக்கிறேன். ஆண், பெண் இரு பால் மாணவ - மாணவியருக்கு சிறு வயதிலிருந்தே, இங்கே தொடுவது தவறு; இப்படி பேசுவது தவறு போன்றவற்றை கற்பிக்க வேண்டும்.
பெண் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்பித்த இக்கல்வி, ஆண் பிள்ளைகளுக்கு கற்பிக்காமல் விட்ட தவறை, நாம் அனைவரும் உணர வேண்டும்.ஆண் பிள்ளைகள் இத்தகைய தவறுகளை வாழ்நாளில் எங்கும், எப்போதும் செய்யக் கூடாது என இளம் வயதிலேயே கற்றுத் தர வேண்டும்.'ஏடு துாக்கி பள்ளியில் இன்று பயிலும் சிறார்கள் தான், நாடு காக்கும் தலைவராய் நாளை விளங்கப் போகிறார்' என்ற மகா கவியின் வரிகளை நாம் மறந்தே விட்டோம்.பாரதி சொன்ன தலைவர் இருபால்; அரசியல் தலைவர் மட்டுமல்லாமல் நிறுவனத்தில், விஞ்ஞானத்தில், கல்வியில், குடும்பத்தில், பல்வேறு துறைகளிலும் தலைவர்களைக் குறிப்பிட்டுத் தான் எழுதி வைத்தார்.ஏதோ தலைவர் என்றால், அது அரசியல்வாதிகளும் மட்டுமே என நாம் தான் தவறாக புரிந்து கொண்டோம்.
பள்ளியில் படிக்கும் மாணவர்களை நன்னடத்தை மிகுந்த நல்ல மனிதனாக, நாளைய தலைவர்களாக உருவாக்கும் பொறுப்பு, முக்கியமாக ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதை அனைத்து ஆசிரியப் பெருமக்களும் உணர வேண்டும்.திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்பதை போல, நல்ல ஆசிரியர்களாக இருப்பதும், இருக்கப் போவதும் அவரவர் மன மாற்றங்களினாலே.பள்ளி நிர்வாகத்திற்கும் மனமாற்றம் தேவைப்படுகிறது. இப்போது வெளிப்படும் பல குற்றச்சாட்டுகள் இன்றோ, நேற்றோ அல்லது அதற்கு முன்தினமோ நடந்த நிகழ்வுகள் அல்ல. பல நாட்களுக்கு முன், பல மாதங்களுக்கு முன், பல ஆண்டுகளுக்கு முன் நடந்த பிரச்னைக்குரிய நிகழ்வுகள். அவை பள்ளி நிர்வாகத்தில் கவனத்திற்கு வந்ததோ அல்லது வரவில்லையோ என்பது தெளிவாக இல்லை.இன்றைக்கு வெளிப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளை வைப்பவர்களும், இதே குற்றச்சாட்டை பள்ளி அல்லது கல்லுாரி நிர்வாகத்திடம் தெரிவித்ததாகவும், நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் வைக்கின்றனர்.கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் இதில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். பள்ளிக்கு அவப்பெயர் வந்துவிடுமோ என, பிரச்னைகளை மூடி மறைக்க முயலாமல் தவறு செய்பவர்களை தண்டிக்கவோ, திருத்தவோ செயல்பட வேண்டும்.
அது மாணவர்களாக இருந்தாலும் சரி அல்லது ஆசிரியர்களாக இருந்தாலும் சரி, குறைந்தபட்சம் சில காலம் தற்காலிக நீக்கம் அவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.மாறாக மாணவர்களை மிரட்டி பணிய வைத்து பிரச்னைகளை தீர்த்துக் கொள்வது அந்த நேரத்திற்கு வேண்டுமானால் தீர்வாக இருக்கலாம். ஆனால், அது அணைந்து போகாத தணலாக இருந்து, பின்னாளில் கொழுந்துவிட்டு சுட்டெரிக்கும் தீயாய் மாறி விடும் என்பதை மறந்து விடக் கூடாது.முறையற்ற செயல்பாடுகளை முளையிலேயே கிள்ளி விடும் பொறுப்பு, எல்லா கல்வி நிர்வாகத்திற்கும் உண்டு.கட்டுப்பாடான கல்வி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நிர்வாகத்தின்மீது மிகுந்த நம்பிக்கை என்றும் உள்ளது.
பெற்றோர் மனமாற்றம்
பெற்றோரும் பள்ளி களில் சேர அனுமதி கிடைத்தவுடன் ஏதோ, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற கர்வத்துடன் வாழத் துவங்கி விடுகின்றனர். தன் பிள்ளைகள் நன்றாக படிக்கின்றனரா; ஒழுங்காக பள்ளிக்கு செல்கின்றனரா; அவர்களுக்கு ஏதேனும் பள்ளியில் பிரச்னைகள் உள்ளதா என்பனவற்றில் முக்கியத்துவம் காட்டுவதில்லை.'உன் நண்பர்கள் யார் என்று சொல், நீ யார் என்று நான் சொல்கிறேன்' என்று யாரோ ஓர் தத்துவஞானி சொன்ன வார்த்தைகள் தான் எனக்கு ஞாபகம் வருகிறது.எத்தனை முறை நம் பிள்ளைகளிடம், அவர்களது நண்பர்களை நம் வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லியிருக்கிறோம்... நீ அவனிடம் சேராதே; இவளோடு சேராதே என்ற தடைகள் அவர்களை முறைப்படுத்தாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.ஒரு நாளின், 24 மணி நேரத்தில், 8 மணி நேரம் தான் பள்ளியில் இருப்பர். மீதம், 16 மணி நேரம் வீட்டில் பெற்றோரோடு தான் வாழ்கின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள்.
பிள்ளைகள் எப்படி வர வேண்டும் என்ற உங்கள் கனவுகள் நியாயமானவை. அதே சமயம் பிள்ளைகளுக்கும் கனவு காணும் உரிமை உள்ளது; அவர்களும் எதிர்காலத்தை வடிவமைக்கும் உரிமை பெற்றவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.எனக்கு தெரிந்த பல பெற்றோர், பிள்ளைகளை கட்டாயப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை சிதறடித்துள்ளனர். இந்த குழந்தைகள் பெற்றோரிடம் மனம் திறந்து பேசுவதில்லை; எந்த பிரச்னையையும் கொண்டு செல்வதில்லை.பள்ளிப் பருவத்தில் பிள்ளைகளோடு அன்புடனும், நட்புடனும் இருந்தால் அவர்களது பிரச்னைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வர். நெருக்கம் குறைந்து இடைவெளி அதிகமாகும் போது, உறவின் பலம் குறைந்து விடுகிறது.'நீ போ' என்று சொல்பவன் தலைவன் அல்ல! 'வா போகலாம்' என்று சொல்பவனே நல்ல தலைவன். ஆம். பிள்ளைகளுக்கு பிரச்னையென்றால் வா போகலாம் என உரைக்கும் குடும்பத் தலைவனை தான் எல்லா பிள்ளைகளும் விரும்புவர்.அப்படிப்பட்ட பெற்றோரிடம் தான் பிள்ளைகளும் தங்களின் நிறைகளை, குறைகளை பேசுவர்.
எனவே, மன மாற்றம் என்பது எல்லாரிடத்திலும் தேவைப்படுகிறது. மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் சுற்றத்தார், உறவினர் இப்படி எல்லாரிடமும் தேவைப்படுகிறது.நல்ல மாற்றத்தை நோக்கி நாம் செல்வோம்; நல்ல மாற்றத்தை விரும்பாதவர்களுக்கு அறிவுரை சொல்வோம். அதையும் மீறி மாறாமல் இருந்தால், நீதியும் சட்டமும் மூலம் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்!தொடர்புக்கு: முனைவர் எம்.எஸ்.நாகராஜன்சமூக ஆர்வலர் msnagoo@gmail.com