சென்னை:'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும் என அறிவித்து விட்டு, தற்போது, 'நீட்' தேர்வு உண்டு என்பது, சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்பதையே காட்டுகிறது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:'நீட்' தேர்வு மற்றும் பயிற்சிகள், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியிருப்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது. நீட் தேர்வுக்கான அறிவிப்பு 2010 டிச., 21ல் வெளியிடப் பட்டு, அதே மாதம் 27ம் தேதி, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அப்போது, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்ததாக, அமைச்சர் தவறுதலாக கூறியுள்ளார். அப்போது, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் இருந்தது. மத்தியில் தி.மு.க., அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி நடந்தது.
எனவே தி.மு.க., ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்பதற்கு, இதை விட ஒரு ஆதாரம் தேவையில்லை. அடுத்து 2011ல், தி.மு.க., தலைவர், சென்னை உயர் நீதிமன்றம் சென்று, தடையாணை பெற்றதாக அமைச்சர் கூறியுள்ளார்.மத்திய அரசின் அங்கமாக இருந்து சட்டம் போட்டு விட்டு, நீதிமன்றத்தை நாடியது முறைதானா என்பதை, அமைச்சர் சிந்திக்க வேண்டும்.
நீட் தேர்வு அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டதும், அதை திரும்ப பெற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லது மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கி கொண்டிருக்க வேண்டும்.அப்போதே, ஆதரவு வாபஸ் ஆயுதத்தை பயன்படுத்தி இருந்தால் நீட் தேர்வு என்ற பிரச்னையே இருந்திருக்காது.இந்த ஆண்டு கொரோனா காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்வு இருக்காது என, மாணவ - மாணவியர் நினைத்த நிலையில், தேர்வுக்கு ஆன்லைனின் பயிற்சி என்ற அறிவிப்பு, மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதை, அரசின் கவனத்திற்கு கொண்டு வர, அறிக்கை வெளியிடப்பட்டது.அதைத் தொடர்ந்து, 'இந்த நிமிடம் வரை நீட் தேர்வு உண்டு' என, அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என, தேர்தல் பிரசாரத்தின் போது அறிவித்து விட்டு, தற்போது தேர்வு உண்டு என்று கூறுவது, சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்பதையே காட்டுகிறது.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நீட் தேர்வுக்கு எதிராக அ.தி.மு.க., தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது விட்டு விட்டு, இப்போது தி.மு.க., பேசுவது, கொம்பை விட்டு வாலை பிடிப்பதற்கு சமம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE