கட்டண பாக்கி ரூ.2,900 கோடி: கறார் காட்டுமா மின் வாரியம்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்டண பாக்கி ரூ.2,900 கோடி: கறார் காட்டுமா மின் வாரியம்?

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (3)
Share
சென்னை: பொது மக்களிடம் மின் கட்டணம் செலுத்த காட்டும் கெடுபிடியை, மின் வாரியம், பல மாதங்களாக, 2,900 கோடி ரூபாய் நிலுவை வைத்து உள்ள, உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் வாரியம் உள்ளிட்ட, அரசு நிறுவனங்களிடம் காட்டுமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடுகளில் மின் பயன்பாடு கணக்கெடுத்த 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்தவில்லை எனில், மின்சாரம்
 கட்டண பாக்கி ரூ.2,900 கோடி: கறார் காட்டுமா மின் வாரியம்?

சென்னை: பொது மக்களிடம் மின் கட்டணம் செலுத்த காட்டும் கெடுபிடியை, மின் வாரியம், பல மாதங்களாக, 2,900 கோடி ரூபாய் நிலுவை வைத்து உள்ள, உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் வாரியம் உள்ளிட்ட, அரசு நிறுவனங்களிடம் காட்டுமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடுகளில் மின் பயன்பாடு கணக்கெடுத்த 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்தவில்லை எனில், மின்சாரம் துண்டிக்கப்படும். இதனால், வீட்டு நுகர்வோர்கள், குறித்த காலத்திற்குள் மின் கட்டணத்தை செலுத்துகின்றனர். அதே சமயம், ஊராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மின் கட்டணம் செலுத்த 60 நாட்கள் அவகாசம் அளித்தும், அவை, பல மாதங்களாக செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, ஊராட்சிகள் 640 கோடி ரூபாய்; பேரூராட்சிகள் 40 கோடி ரூபாய்; நகராட்சிகள் 160 கோடி ரூபாய்; மாநகராட்சிகள் 410 கோடி ரூபாய் என, உள்ளாட்சி அமைப்புகள் 1,250 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளன.இதுதவிர, குடிநீர் வாரியம் மட்டும், மிக அதிக அளவாக 1,500 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது. வருவாய் துறை உள்ளிட்ட இதர அரசு துறைகள் 150 கோடி ரூபாய் செலுத்தாமல் உள்ளன.

இவ்வாறு, அனைத்து அரசு நிறுவனங்களும், பல மாதங்களாக மின் வாரியத்திற்கு 2,900 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன.ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், நிலுவை கட்டணத்தை விரைந்து செலுத்துமாறு, அரசு துறைகளுக்கு மின் வாரியம் சார்பில் பல முறை கடிதம் அனுப்பப்பட்டும், அதை செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருகின்றன.

ஊரடங்கால் வீடுகளில் மின் பயன்பாடு கணக்கு எடுக்காததால், மே 10ம் தேதி கடைசி தேதியாக உள்ள நுகர்வோர்கள், அபராதமின்றி கட்டணம் செலுத்த, இம்மாதம் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஊரடங்கால் வருமானம் பாதித்ததால் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் அளிக்குமாறு, மின் வாரியத்திற்கு பலரும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், 'கூடுதல் அவகாசம் அளித்தால், இரு இரண்டு மாதங்களுக்கான கட்டணம் சேர்ந்து மொத்தமாக செலுத்தும் போது, நுகர்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்பதால் கூடுதல் அவகாசம் அளிக்கப்படவில்லை' என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

மக்களிடம் காட்டும் கெடுபிடியை, அரசு துறைகளிடமும் காட்டி மின் கட்டணத்தை வசூலிப்பதுடன், கட்டணம் செலுத்தாத இணைப்புகளில் மின்சாரத்தை துண்டிப்பது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X