தமிழக பா.ஜ.,வை மறுசீரமைக்க முடிவு: தோல்விக்கு காரணமானவர்கள் நீக்கம்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பா.ஜ.,வை மறுசீரமைக்க முடிவு: தோல்விக்கு காரணமானவர்கள் நீக்கம்?

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (39)
Share
சென்னை: சட்டசபை தேர்தலில் வேலை செய்யாத நிர்வாகிகளை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி விட்டு, தமிழக பா.ஜ.,வை மறுசீரமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முக்கிய தலைவர்கள் ஆலோசித்துள்ளனர்.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ., 20 தொகுதிகளிலும்; கன்னியாகுமரி லோக்சபா தொகுதியிலும் போட்டியிட்டது.உயர்நிலை குழு கூட்டம்மத்தியில் ஆட்சியில்
பாஜ, தமிழக பாஜ, bjp,

சென்னை: சட்டசபை தேர்தலில் வேலை செய்யாத நிர்வாகிகளை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி விட்டு, தமிழக பா.ஜ.,வை மறுசீரமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முக்கிய தலைவர்கள் ஆலோசித்துள்ளனர்.


சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ., 20 தொகுதிகளிலும்; கன்னியாகுமரி லோக்சபா தொகுதியிலும் போட்டியிட்டது.


உயர்நிலை குழு கூட்டம்



மத்தியில் ஆட்சியில் இருப்பதுடன், தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்று இருந்ததால், இரட்டை இலக்கில் எம்.எல்.ஏ.,க்களை வெற்றி பெற பா.ஜ., இலக்கு நிர்ணயித்தது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள், பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலில், தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திருநெல்வேலி, நாகர்கோவில், மொடக்குறிச்சி, கோவை தெற்கு ஆகிய நான்கு தொகுதிகளில், பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க தமிழக பா.ஜ.,வின் உயர்நிலை குழு கூட்டம், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது.

அதில், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா.தமிழக பா.ஜ., தலைவர் முருகன், மாநில அமைப்பு செயலர் கேசவ விநாயகம்,துணை தலைவர் வி.பி.துரைசாமி, மாநில பொது செயலர்கள் கரு.நாகராஜன், கே.டி.ராகவன் பங்கேற்றனர். மேலும், எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருடன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.


ஆலோசனை




latest tamil news




பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:தேர்தல் முடிந்ததும் தோல்வி குறித்து, மே 11ல் ஆலோசிக்க திட்டமிடப்பட்டது. அம்மாதம், 10ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்த திட்டமிட்டது. சிலர், நேரில் ஆலோசிக்கலாம் என கூறினர். அந்த கூட்டத்தை, தி.நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலயத்தில் நடத்தினால் விவாதிக்கப்படும் தகவல்கள் வெளியில் கசிந்து விடலாம் என்பதற்காக, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொகுதி பங்கீட்டின் போது, கேட்ட தொகுதிகளை அ.தி.மு.க., ஒதுக்கவில்லை. அக்கட்சியிடம் இருந்து கேட்ட தொகுதிகளை கேட்டு பெறாதது ஏன்; வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடிக்கு யார் காரணம் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.அ.தி.மு.க.,வில் முக்கிய நிர்வாகிகள் பலரும், பா.ஜ., தொகுதிகளில் தேர்தல் பணியில் தீவிரம் காட்டவில்லை. இது தொடர்பாக, அக்கட்சி தலைமைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.எனவே, அக்கட்சியுடன் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணியை தொடர வேண்டுமா என்பது குறித்து விவாதிக்கப் பட்டது.அ.தி.மு.க., சார்பில் மத்திய அமைச்சர் பதவி கேட்டால் வழங்கக்கூடாது என்று சிலர் தெரிவித்தனர்.


மக்கள் நல பணி



மக்களிடம் செல்வாக்குள்ள பா.ஜ., நிர்வாகிகள் அல்லது பெரிய கட்சிகளில் முக்கிய பதவிகளை வகித்து பா.ஜ.,வில் சேர்ந்தவர்களுக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கி மத்திய அமைச்சராக்கலாம்.அவர்களை மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய வைத்து மக்கள் நல பணிகளை மேற்கொள்வதுடன், கட்சியை வளர்க்கலாம் என, ஆலோசிக்கப்பட்டது. தேர்தலில் வேலை செய்யாதவர்களை, பா.ஜ., பொறுப்புகளில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியை பலப்படுத்தும் வகையில் இளைஞர்களை அதிகளவில் சேர்த்து, தமிழக பா.ஜ.,வை மறு சீரமைப்பு செய்ய திட்டமிப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X