சென்னை:மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, மின் நுகர்வோர் சேவை மையத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தமிழகம் முழுதும் உள்ள பொது மக்கள், மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க, சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில், 'மின்னகம்' என்ற, புதிய மின் நுகர்வோர் சேவை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
தானியங்கி முறை
அதை, நேற்று துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், சேவை மையத்தை பொதுமக்கள், 24 மணி நேரமும் தொடர்பு கொள்வதற்காக, 94987 94987 என்ற, மொபைல் போன் எண்ணையும் அறிமுகம் செய்தார். சேவை மையத்தில் ஒரு, 'ஷிப்டு'க்கு, 65 பேர் என, மூன்று ஷிப்டுகளுக்கு, 195 பேர் பணியில் இருப்பர். மின் சேவை தொடர்பான அனைத்து புகார்களையும் மக்கள் தெரிவிக்கலாம்.
மையத்தில் உள்ள ஊழியர்கள், புகார்களை கணினியில் பதிவு செய்வர். அந்த புகார், தொழில் நுட்ப உதவியுடன் தானியங்கி முறையில், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு, துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார் குறித்த தகவல்களை ஒருங்கிணைக்க, மாவட்டங்களில் உள்ள, 44 மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களிலும், 24 மணி நேரமும் செயல்படும் வகையில், தலா மூன்று பேர் வீதம், 132 பேர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
புகார் பிரிவு
புகார்தாரரின் மொபைல் போன் எண்ணிற்கு, புகார் எண்ணும்; புகார் சரி செய்யப்பட்டபின், அதுபற்றிய தகவலும், குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.மின் வாரியம் தொடர்பாக, சமூக வலைதளங்கள் வழியாக பதிவேற்றப்படும் புகார்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க, சமூக வலைதள புகார் பிரிவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிகழ்ச்சியில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை செயலர்தர்மேந்திர பிரதாப் யாதவ், எம்.பி., தயாநிதி, எம்.எல்.ஏ., உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், ''மின் நுகர்வோர்களுக்கு, புதிய சேவை மையம், ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. ஏற்கனவே உள்ள, 1912 என்ற எண்ணுக்கு வரும் அழைப்புகளும், இந்த சேவை மைய எண்ணுடன் இணைக்கப்படும்,'' என்றார்.
வீராங்கனைக்கு ரூ.5 லட்சம்!
தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி, உலக அளவிலான வாள் வீச்சு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை பெற்று வருகிறார். அவருக்கு, மின் வாரியத்தில், விளையாட்டு அலுவலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.ஜப்பான் நாட்டின், டோக்கியோ நகரில் நடக்க உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க, அவர் தேர்வாகி உள்ளார்.
தற்போது, இத்தாலியில் பயிற்சி பெற்று வருகிறார். சேவை மையத்தை துவக்கி வைத்த பின், முதல்வர் ஸ்டாலின், பவானி தேவியை ஊக்கப்படுத்தும் வகையில், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அவரது தாயாரிடம் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE