இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள் பற்றிய தகவல்களையும் சேகரித்து டிஜிட்டல் மயமாக்கும், 'அக்ரி ஸ்டேக்' என்ற, திட்டத்தை மத்திய அரசு துவங்கி உள்ளது.
இந்தத் திட்டமானது, ஒரு தகவல் களஞ்சியமாகும். இதில், ஆதார் போல, ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு தனி குறியீட்டு எண் வழங்கப்படும். அந்த விவசாயிக்கு சொந்தமான நிலம், அவர் பயன்படுத்திய அரசு திட்டங்கள் உள்ளிட்ட விபரங்கள், ஒரே இடத்தில் சேமிக்கப்படும். நிமிட நேரத்தில், இந்த தகவல்களை பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்யலாம். அதன் வாயிலாக, வேளாண் நல திட்டங்களை செம்மையாக செயல்படுத்த முடியும் என்கிறது மத்திய அரசு.
வேளாண் நல திட்டங்களை, செம்மையாக செயல்படுத்துவது மட்டுமே நோக்கமாக இருந்தால், இந்த கட்டுரைக்கான அவசியமே இல்லை. நலத்திட்டங்கள் இடம்பெறும் அதே வாக்கியத்தில், 'விவசாயிகள் கடனுதவி பெறுவது, ஸ்டார்டப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், புதிய செயலிகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றுக்கும், இந்த தகவல்கள் அனைத்தும், ஒரே இடத்தில் கிடைக்கும் கடையாக விளங்கும்.'அதனால், பலன்கள் அடித்தட்டு வரை சென்றடையும்' என, மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணை செயலர் ஆஷிஷ் குமார் பூட்டானி பேசியிருக்கிறார்.
விவசாயிகள் நலன் என்ற பெயரில், தனியார் லாபம் சம்பாதிக்க வழிவகுப்பது ஏற்புடையதா?
இத்திட்டத்தை செயல்படுத்த, ஏப்ரலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன், மத்திய அரசு ஓராண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, உ.பி., குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், ம.பி., மற்றும் ஆந்திரா மாநிலங்களில், 100 கிராமங்களில் சோதனை முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
விவசாயிகள் பற்றிய விவரம், நில ஆவண விபரம், மண் வள அட்டை விபவரம் மற்றும் பயிர் காப்பீடு விபரம், அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்படும். இதன் வாயிலாக, தகவல் களஞ்சியம் உருவாக்கப்படும். அதற்கான செலவை மைக்ரோசாப்ட் நிறுவனமும், அதை சார்ந்த, 'கிராப் டேட்டா' நிறுவனமும் ஏற்குமாம். எதற்காக?
'கிராப் டேட்டா' நிறுவனம், 'விவசாயிகளையும், வியாபாரிகளையும் இணைக்கும் டிஜிட்டல் சந்தை' என, அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன் பொருட்டு, விவசாயிகள் பற்றிய தகவல்களை சேகரிக்கிறது. விவசாயி என்ன சாகுபடி செய்துள்ளார், பயிர் எந்த நிலையில் இருக்கிறது, மகசூல் என்னவாக இருக்கும் என்பது வரை தகவல் சேகரிக்கிறது. மேலும், வியாபாரிகளின் வசதிக்காக, பல்வேறு சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்தும், தகவல் வழங்குகிறது.
இந்த தனியார் நிறுவனங்கள், இதில் ஆர்வம் காட்டுவதற்கு காரணம், அவர்களுக்கு விவசாயிகள் பற்றிய தகவல்கள், லாபம் சம்பாதித்து தரும் என்பது தான். சரி, அதில் என்ன தவறு இருக்கிறது? லாபம் சம்பாதிக்காமல் யாராலும் தொழில் செய்ய முடியாது அல்லவா?
லாபம் சம்பாதிப்பதில் பிரச்னை இல்லை; அதனால், விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என்பது தான் பிரச்னை.
எப்படி பாதிக்கப்படுவர்?
முதலில், தகவல்களை சேகரிக்க, எத்தனை விவசாயிகளிடம் சம்மதம் பெறப்பட்டது? நம் நாட்டில், தனியுரிமை பாதுகாப்புக்கு, சட்டமோ கொள்கையோ கிடையாது. அதனால், தங்களை பற்றிய தகவல்களை சேகரிக்கலாமா, சேகரித்த தகவல்களை, எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதெல்லாம் விவசாயிகளால் முடிவு செய்ய முடியாது.
அவர்களை பற்றிய தகவலை வைத்து, பிறர் லாபம் சம்பாதிக்கையில், அதில் ஒரு பங்கும் அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை.அதேநேரம், அந்த தகவல்களை பயன்படுத்தி, விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை தடுப்பதற்கு, எந்த சட்டமோ, கொள்கையோ இல்லை.
உதாரணத்திற்கு, டிஜிட்டல் வழியில் கடன் வழங்கும் நிறுவனங்கள் இன்று ஏராளம். அவை இடம் பெறும், பல்வேறு தற்கொலை மற்றும் மிரட்டல் செய்திகளை, நாம் வாசித்து இருக்கிறோம். அதுபோல, விவசாயிகளை கடன் வலையில் விழ வைத்து, அவர்கள் நிலத்தை அபகரிக்க முற்படும் நிறுவனங்களிடம் இருந்து, என்ன பாதுகாப்பு இருக்கிறது?
விவசாயிகளின் தகவல்கள் எவ்வளவு நுணுக்கமாக பகிரப்படுமோ, அவ்வளவு நுணுக்கமாக, 'அக்ரி ஸ்டேக்' தகவல் களஞ்சியத்தை பயன்படுத்தஉள்ள நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பற்றிய தகவல்களும் விவசாயிகளுடன் பகிரப்படுமா? பகிரப்படும் என்று, அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
சமச்சீரின்மை
இரண்டாவதாக, எந்த ஒரு பரிவர்த்தனையாக இருந்தாலும், அது சமச்சீராக இருந்தால், அது நியாயமானது. ஆனால், இந்த திட்டத்தில், விவசாயிகளுக்கு கிடைக்கும் நலனை விட, தனியார் நிறுவனங்களுக்கே, அதிக லாபம் கிடைக்கும் சூழல் இருக்கிறது. இவ்வளவு தகவல்கள் தனியார் கையில் சிக்கினால், விவசாயிகளை தங்கள் பிடியில், அவர்களால் எளிதாக கொண்டுவர முடியும். காலப்போக்கில், இந்த வலையில் விழும் விவசாயிகளால், சந்தையை அணுகவே முடியாத சூழல் ஏற்படும். இன்று ஆதார் இல்லாமல் எந்த அரசு சார்ந்த வேலையும் நடக்காது என்ற சூழல் உருவாகி இருப்பதை போலவே, அது நடைபெறும்.
தவறுகள்
மூன்றாவதாக, இந்த தகவல்களின் அடிப்படையிலேயே, அரசாலும், தனியாராலும் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்ற சூழல் உருவாகும் போது, தகவல்களில் ஏற்படும் தவறுகளால் பாதிப்படையும் விவசாயிகளுக்கு, எந்த பாதுகாப்பும் இல்லை.
தகவல்கள் அடிப்படையில், முடிவு எடுப்பது மனிதர்கள் அல்ல. ஏனெனில், அவ்வளவு தரவுகளை வைத்து மனிதர்களால் ஒரே நேரத்தில் கணிக்க முடியாது. ஒரு விவசாயிக்கு கடன் கொடுக்கலாமா, வேண்டாமா; காப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டுமா என்பதை எல்லாம் கணினி மென்பொருள் முடிவெடுக்கும்.
முடிவெடுக்கும் மென்பொருள், 'ஆர்டிபீஷியல் இன்டலிஜென்ஸ்' எனப்படும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் உருவாக்கப்படும். செயற்கை நுண்ணறிவு பற்றிய புரிதலோ, அது தொடர்பான சட்டங்களோ நம் நாட்டில் கிடையாது.
மென்பொருள் எடுக்கும் முடிவுகளை பற்றி விளக்கம் பெற, யாரை அணுக வேண்டும், தவறு ஏற்பட்டால் என்ன செய்வது என்பதெல்லாம், விவசாயிகள் சந்திக்க வேண்டிய புதிய பிரச்னைகளாக இருக்கும். மேலும், நிலமற்ற குத்தகைதாரர்கள் மற்றும் விவசாயத்தை நம்பியுள்ள பலர், இதுவரை அரசு தகவல் தளத்தில் இல்லை. இவர்களது நிலை என்னாகும்?
சந்தை தீர்வு
சந்தை தீர்வு என்றால், பொது பிரச்னை ஒன்றுக்கு வணிக ரீதியில் தீர்வு காண்பது. அதாவது, அந்த பிரச்னையை லாபம் சம்பாதிக்கும் வாய்ப்பாக மாற்றி, தனியார் முதலீட்டை ஈர்ப்பது. பல நெடுஞ்சாலைகள் இப்படித்தான் அமைக்கப்பட்டு உள்ளன. இதே போன்ற சந்தை தீர்வை தான், அக்ரி ஸ்டேக் திட்டம் வாயிலாக, மத்திய அரசு தேடுகிறது.
ஆனால், இது நெடுஞ்சாலையை போல, வாழ்வின் ஒரு சிறு பகுதி அல்ல. விவசாயிகளின் மொத்த வாழ்வாதாரம் தொடர்பான விஷயம். விவசாயிகளை வெறுமே, ஒரு இடுபொருள் சந்தையாகவும், வினியோக சங்கிலியின் ஒரு அங்கமாகவும் தான் நிறுவனங்கள் பார்க்கின்றன. 'பணப்பயிர்' போலவே, பணம் அவர்களது, உழைப்பும் ரத்தமும் நம் என்ற, சூழல் உருவாகும் அபாயம் உள்ளது.
வேளாண்மைக்கு சந்தை தீர்வு தேவையா என்று ஒரு பக்கம் கேள்வி இருக்க; மற்றொரு பக்கம், விவசாயிகளுக்கு தனியுரிமை உள்ளிட்ட விஷயங்களில், எவ்வளவுக்கு எவ்வளவு சட்ட ரீதியான பாதுகாப்பு கொடுக்க முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு கொடுக்க, மத்திய அரசு முன்வர வேண்டும். தனியுரிமை உட்பட தகவல் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
தகவல் நீதியின் முக்கிய அம்சங்களான, எவ்வளவு தகவல் பகிரப்படலாம், தொழில்நுட்பத்துடன் ஈடுபாடு, பாகுபாடின்மை போன்றவற்றையும், தெளிவாக வரையறுக்க வேண்டும். இவற்றை எல்லாம் செய்யாமல், இந்த திட்டத்தை மேலெடுத்து செல்வது, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உலை வைக்கும் செயலாகும். அனைத்திற்கும் மேலாக, மைக்ரோசாப்ட் போன்ற தனியார் நிறுவனங்களிடம், இந்தப் பணி கொடுக்கப்படக் கூடாது.
நல திட்டங்களை செம்மைப்படுத்தும் நோக்கில் மட்டும் அணுகினால், அரசே தன் நிறுவனங்கள் வாயிலாக செயல்படுத்த வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னர், விவசாயிகளிடமும் தனியுரிமை நிபுணர்களிடமும், மாநில அரசுகளிடமும், மத்திய அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும்.
நினைவில் கொள்ள வேண்டிய மேலும் சில விஷயங்கள்
* பில் கேட்ஸ் தான், உலகின் மிகப்பெரும் நிலச்சுவான்தார். அமெரிக்காவில் மட்டும், 2.42 லட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு சொந்தக்காரர். அவரது பார்வை நிலத்தின் மீது இருக்குமா,
விவசாயி நலனில் இருக்குமா? இன்று உலகளவில், மரபணு மாற்றுப்பயிர்கள், விதை இறையாண்மையையும், விவசாய வாழ்வாதாரத்தையும், நுகர்வோர் ஆரோக்கியத்தையும் தகர்க்கிறது என்று தெரிந்தும், அதில் பெரும் முதலீடு செய்துள்ளதால், அதை முன்னிறுத்தி,
இந்திய அரசு உட்பட பல அரசுகளுக்கும் அழுத்தம் கொடுப்பவர் இவர். அவருடைய நிறுவனம், 'அக்ரி ஸ்டேக்' திட்டத்தில் ஈடுபட்டு உள்ளதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
* பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில், இப்படிப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அங்கு, விவசாயிகளின் வருவாய் பெருகியதா, என்ன கேடு விளைந்தது என்பதையும் ஆராய வேண்டும். அங்கிருந்து வெளிவந்த ஆய்வுகள், விவசாயிகளுக்கு நலன் பெருகியதாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* பெரும் நிறுவனங்கள் என்பதால், நம் நிலத்தின் மேல், அவர்கள் டிரோன்களை விட்டு ஆய்வு செய்யலாமா? பெரிய முதலீடு செய்ய முடிவதால், நம் தகவல்களை பெரும் அடுக்குகளில் சேமிக்கலாமா? தகவல்களை வைத்து அவர்கள் என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்பதை நிர்ணயிப்பது, பாதுகாப்பது, ஒழுங்குமுறைபடுத்துவது யார்? சிங்கம் மானை வேவு
பார்ப்பதற்கும், மான் சிங்கத்தை வேவு பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதல்லவா?
* பல இடங்களில், நில உரிமை முழுமையாக பைசலாகாத நிலையில், இந்த திட்டத்தில்
திரட்டப்படும் தரவுகள் வாயிலாக, நில அபகரிப்புகள் ஏற்படலாம். அதிலிருந்து விவசாயிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?
ஆனந்து,
ஒருங்கிணைப்பாளர்,
பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு
தொலைபேசி எண்: 9444166779
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE