மூன்று வகை! தமிழக மாவட்டங்கள் பிரிப்பு: தொற்று சதவீதத்துக்கேற்ப தளர்வு | Dinamalar

மூன்று வகை! தமிழக மாவட்டங்கள் பிரிப்பு: தொற்று சதவீதத்துக்கேற்ப தளர்வு

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (12) | |
சென்னை: தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு, வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நோய் தொற்று பாதிப்பின் அளவுக்கு ஏற்ப, மொத்தமுள்ள மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும், இன்று முதல் பஸ்
 தமிழக,மாவட்டங்கள்,மூன்று வகை!,பிரிப்பு

சென்னை: தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு, வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நோய் தொற்று பாதிப்பின் அளவுக்கு ஏற்ப, மொத்தமுள்ள மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும், இன்று முதல் பஸ் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்புக்கான முழு ஊரடங்கு, இன்று காலை நிறைவடைய உள்ள நிலையில், தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை, வரும் 28ம் தேதி காலை 6:00 மணி வரை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேநேரத்தில், நோய் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் மூன்று பிரிவாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

* முதல் பிரிவில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை என 11 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன

* இரண்டாவது பிரிவில், அரியலுார், கடலுார், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலுார், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்துார், திருவண்ணாமலை, துாத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலுார், விருதுநகர் என, 23 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன

* மூன்றாவது பிரிவில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என, நான்கு மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.


கூடுதல் அனுமதி

முதல் பிரிவில் உள்ள 11 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும். பிரிவு இரண்டில் உள்ள 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு நேரத் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதோடு, கூடுதலாக சில செயல்பாடுகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. அவற்றின் விபரம்:

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்கும் கடைகள்; காய்கறி, பழம் மற்றும் பூ விற்கும் நடைபாதை கடைகள், காலை 6:00 முதல், இரவு 7:00 மணி வரை செயல்படலாம்

* உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பார்சல் சேவை மட்டும், காலை 6:00 முதல், இரவு 9:00 மணி வரை அனுமதிக்கப்படும். ஆன்லைன் வழியே உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள், இந்நேரங்களில் செயல்படலாம்

* இதர மின் வணிக சேவை நிறுவனங்கள்; இனிப்பு மற்றும் காரவகை விற்கும் கடைகள், காலை 6:00 முதல், இரவு 9:00 மணி வரை இயங்கலாம்

* அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்கும்

* அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப் படும். ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, தொடர்ந்து செயல்படலாம். இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்


5:00 மணி வரைகாலை 9:00 முதல், மாலை 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட கடைகள்:

* மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள், ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள்; சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள், பழுது நீக்கும் கடைகள்

* ஹார்டுவேர் கடைகள்; வாகன உதிரிபாகங்கள் விற்கும் கடைகள்; வாகன விற்பனை நிறுவனங்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் கடைகள்

* கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்கும் கடைகள்; வாகன வினியோகஸ்தர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள்; காலணி விற்கும் கடைகள்; கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்

* மிக்சி, கிரைண்டர், 'டிவி' போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்; மண்பாண்டம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை; மொபைல் போன் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்; கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்

* மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுய தொழில் செய்வோர், சேவை கோருபவர் வீடுகளுக்கு சென்று, பழுது நீக்கம் செய்ய, காலை 6:00 முதல், மாலை 5:00 மணி வரை, இ - பதிவுடன் அனுமதிக்கப்படுவர்

* அனைத்து வகையான கட்டுமான பணிகளும் அனுமதிக்கப்படும்

* பள்ளி, கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை தொடர்பான, நிர்வாக பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும்

* காலை 6:00 முதல், மாலை 5:00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்

* திரையங்குகளில், சம்பந்தப்பட்ட தாசில்தார்களின் அனுமதி பெற்று, வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ளலாம்

* வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில், பயணியர், 'இ - பதிவு'டன் செல்ல அனுமதிக்கப்படுவர். கார்களில் டிரைவர் தவிர மூன்று பயணியரும், ஆட்டோக்களில் டிரைவர் தவிர, இரண்டு பயணியர் மட்டும் பயணிக்கலாம்

* வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.


4 மாவட்டங்ளுக்கு கூடுதல் சலுகைகள்

மூன்றாவது பிரிவில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், மற்ற மாவட்டங்களில் உள்ள தளர்வுகளுடன் கூடுதலாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விபரம்:

* குழந்தைகள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் அவை தொடர்புடைய போக்குவரத்து, இ - பதிவு இல்லாமல் அனுமதிக்கப்படும்

* சிறார்களுக்கான கண்காணிப்பு, பராமரிப்பு சீர்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர், இ - பதிவு இல்லாமல் அனுமதிக்கப்படுவர். அனைத்து வகையான கட்டுமானப் பணிகளும்அனுமதிக்கப்படும்

* அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவீதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப் படும். சார் பதிவாளர் அலுவலகங்கள், முழுமையாக இயங்கும். அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்

* ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படலாம். இதர தொழிற்சாலைகள் 50 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படலாம்

* மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுய தொழில் செய்வோர், சேவை கோருவோர் வீடுகளுக்கு சென்று, பழுது நீக்கம் செய்ய, காலை 6:00 முதல், இரவு 7:00 மணி வரை, இ - பதிவுடன் அனுமதிக்கப்படுவர்


7 மணி வரை கடைகள்!

காலை 9:00 முதல், இரவு 7:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் விபரம்:
இரண்டாம் பிரிவில் உள்ள 23 மாவட்டங்களில், மாலை 5:00 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், இரவு 7:00 மணி வரை செயல்படும்.

* இதுதவிர, பாத்திரக் கடைகள், பேன்சி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ, வீடியோ கடைகள், சலவைக் கடைகள், தையல் கடைகள், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள்; மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன

* சாலையோர உணவு கடைகளில் பார்சல் சேவை மட்டும், காலை 6:00 முதல், இரவு 7:00 மணி வரை அனுமதிக்கப்படும் * அழகு நிலையங்கள், சலுான்கள், குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், காலை 6:00 முதல், இரவு 7:00 மணி வரை செயல்படலாம்

* காலை 6:00 முதல், இரவு 7:00 மணி வரை, விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்

* பள்ளி, கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் அனுமதிக்கப்படும்* திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 பேருடன் நடத்த அனுமதிக்கப்படும். படப்பிடிப்பில் பங்கேற்போர் அவசியம், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும்

* திரையரங்குகளில் தொடர்புடைய தாசில்தார் அனுமதி பெற்று, வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளலாம்.


பஸ்களை இயக்க அனுமதி

* நான்கு மாவட்டங்களுக்கு உள்ளேயும், நான்கு மாவட்டங்களுக்கு இடையேயும், பொது பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. இதன்படி 'ஏசி' வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும், பயணியர் அமர்ந்து செல்லலாம்

* மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும், பயணியர் அமர்ந்து பயணிக்கலாம்

* வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில், பயணியர் 'இ - பதிவு' இல்லாமல் செல்லலாம். வாடகை கார்களில், டிரைவர் தவிர மூன்று பயணியர்; ஆட்டோக்களில் டிரைவர் தவிர, இரண்டு பயணியர் பயணிக்கலாம்* வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் 50 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படலாம்.திருமணத்திற்கு, 'ஓகே!'திருமண நிகழ்வுகளுக்கு, பிரிவு இரண்டு மற்றும் மூன்றில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கு இடையே, 'இ - பாஸ்' பெற்று பயணிக்கலாம். திருமணம் நடக்க உள்ள மாவட்டத்தின், கலெக்டரிடம் இருந்து https://eregister.tnega.org என்ற இணையதளம் வழியே விண்ணப்பித்து இ - பாஸ் பெற்றுக் கொள்ளலாம். திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் ஆகிய சுற்றுலா பகுதிகளுக்கு, அவசர காரணங்களுக்காக பயணிக்க, மாவட்ட கலெக்டர்களிடம் இ - பாஸ் பெற்று பயணிக்கலாம். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.


'அவசியமின்றி வெளியே வராதீர்!'

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும், தவிர்க்க வேண்டும்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது; சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது; அடிக்கடி கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினியால் சுத்தம் செய்வது போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டதும், பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறவும்.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு, முழு ஒத்துழைப்பு அளித்து கொரோனா தொற்றை முற்றிலும் அகற்ற உதவ வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


2,000 பஸ்கள் இயக்க முடிவுசென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், 2,000 பஸ்கள் இயக்க முடிவாகியுள்ளது.
கொரோனா தொற்று குறைந்துள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு
மாவட்டங்களில் மட்டும், இன்று காலை 6:00 மணி முதல் பஸ்களை இயக்க, அரசு அனுமதி அளித்துஉள்ளது.

இதன்படி, 50 சதவீத இருக்கைகளில் பயணியர் செல்லும் வகையில், 2,000 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக, பஸ்களை தயார்படுத்தும் பணிகள் நடந்தன.

கட்டுப்பாடுகள் என்ன?

*ஓட்டுனர், நடத்துனர், பயணிர் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். பயணியர், சானிடைசரால் கைகளை சுத்தம் செய்து, பின் படிக்கட்டில் ஏறி, முன் படிக்கட்டில் இறங்க
வேண்டும்
*நடத்துனர்கள் எச்சில் தொட்டு டிக்கெட் கொடுக்கக் கூடாது, 'ஏசி' பஸ்களை இயக்கக்கூடாது. இவை உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'நாங்கள் 60 சதவீத சாதாரண பஸ்களுடன் 1,400 பஸ்களை இயக்க உள்ளோம்' என்றனர்.

விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: திருவள்ளூர், திருத்தணி,
காஞ்சிபுரம், மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம், செங்கல்பட்டு, கல்பாக்கம், கூவத்துார்,
கூடுவாஞ்சேரி, செங்குன்றம், ஆரம்பாக்கம், பொன்னேரி, ஊரப்பாக்கம் பகுதிகளுக்கு,
முதற்கட்டமாக 250 பஸ்கள் இயக்கப்படும். பின், படிப்படியாக 350 பஸ்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X