நிஜத்தைப் பேசாமல் காற்றில் வாள் வீசும் தியாகராஜன்!| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

நிஜத்தைப் பேசாமல் காற்றில் வாள் வீசும் தியாகராஜன்!

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (88)
Share
சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 5 ரூபாயும்; டீசல் விலை லிட்டருக்கு, 4 ரூபாயும் குறைக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. தற்போது, பெட்ரோல் விலை லிட்டர், 100 ரூபாயை தொட்டிருக்கும் நிலையில், 'விலையை குறைப்பேன் என்றீர்களே... ஆட்சிக்கு வந்து, 40 நாட்களுக்கு மேலாயிற்றே, இன்னும் ஏன் விலையை குறைக்காமல்
DMK, Thiagarajan, Fuel

சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 5 ரூபாயும்; டீசல் விலை லிட்டருக்கு, 4 ரூபாயும் குறைக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.

தற்போது, பெட்ரோல் விலை லிட்டர், 100 ரூபாயை தொட்டிருக்கும் நிலையில், 'விலையை குறைப்பேன் என்றீர்களே... ஆட்சிக்கு வந்து, 40 நாட்களுக்கு மேலாயிற்றே, இன்னும் ஏன் விலையை குறைக்காமல் தாமதம் செய்கிறீர்கள்?' என்ற பொதுமக்களின் கேள்விக் கணைகள், தி.மு.க., அரசுக்கு எதிராக பாய்ந்தன.

இந்நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், 'தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும், மதிப்பு கூட்டு வரியான, 'வாட்' வரியை குறைக்க முடியாது' என்றார். அத்துடன், வரியை குறைக்க முடியாதது ஏன் என்பதற்கான நியாயமான காரணங்களை சொல்வதை விடுத்து, மத்திய அரசு மீது பாய்ந்துள்ளார்.

வழக்கம் போல, 'ஒன்றிய' பா.ஜ., எதிர்ப்பு லாவணி பாடிவிட்டால், இவர் சொல்வதெல்லாம் உண்மை என, மக்கள் நம்பி விடுவர் என்ற நம்பிக்கை வேறு, தியாகராஜனின் எகத்தாள பேச்சில் அதிகமாகத் தென்பட்டது.கூடவே, எண்ணற்ற எண்களை வாரிஇறைத்தால், கேட்கும் பொது மக்கள் கண்களில் பூச்சி பறக்கும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருப்பதாகத் தெரிகிறது.

அவரது வாதங்களும், அதற்கான விளக்கங்களும்:

வாதம்: லிட்டர் பெட்ரோலுக்கு, 10 ரூபாயாக இருந்த கலால் வரியை, 32.90 ரூபாயாக உயர்த்தியது மத்திய அரசு.

உண்மை: முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தந்த விளக்கம், இதற்குப் பொருத்தமாக இருக்கும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை சரிந்தபோது, 'அந்தப் பலனை ஏன் நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க மாட்டேன் என்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, அருண் ஜெட்லி, ராஜ்யசபாவில் இதற்கு விளக்கம் கொடுத்தார்.'கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன், மக்களை அடையாது. பெட்ரோல், டீசல் விலை குறைந்து விட்டது என்பதற்காக, சரக்கு போக்குவரத்து கட்டணமோ, காய்கறிகள், மளிகை சாமான்கள் போன்றவற்றின் விலைகளோ குறையப் போவதில்லை. இடையில் உள்ள வியாபாரிகள் கூடுதல் லாபம் சம்பாதிக்கவே பார்ப்பர். 'அதற்குப் பதிலாக, கலால் வரியை உயர்த்தி, அந்தப் பணத்தை, மத்திய அரசின் கஜானாவுக்கு எடுத்துச் சென்றால், அது நேரடியாக மக்களுக்குப் பயன்படும். 'இந்த கலால் வரியின் வாயிலாகவே, தேசிய நெடுஞ்சாலைகளும், கிராமப்புறச் சாலைகளும் அமைக்கப்படுகின்றன. ஒரு பகுதி, கச்சா எண்ணெய் வாங்கும் போது ஏற்படும் இழப்புகளை சமாளிக்க பயன்படுகிறது' என்றார் ஜெட்லி.

வாதம்: மத்திய அரசு வசூலிக்கும் 32.90 ரூபாய் கலால் வரியில், 31.50 ரூபாயை மத்திய அரசே எடுத்துக் கொள்கிறது. 1.40 ரூபாயை மட்டுமே மாநிலங்களுக்கு வழங்குகிறது.

உண்மை: இல்லை. பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் வலைதளத்தில் தேடினால், விபரம் கொட்டிக் கிடக்கிறது. கலால் வரி என்ற இனத்தில், நான்கு அம்சங்கள் இணைந்துள்ளன. அடிப்படை கலால் வரி 1.40 ரூபாய், சிறப்பு கூடுதல் கலால் வரி 11 ரூபாய், வேளாண் தீர்வை 2.50, சாலை மற்றும் உள்கட்டுமான தீர்வை 18 ரூபாய். எனவே, மொத்தம், 32.90 ரூபாய். இதில், 18 + 2.50 = 20.50 ரூபாய் மட்டுமே, மத்திய அரசுக்குப் போகிறது. 11 + 1.40 = 12.40 ரூபாய் மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும், மொத்த நிதிக்குச் செல்கிறது.மேலும், வேளாண் தீர்வையாக, லிட்டர் பெட்ரோலுக்கு வசூலிக்கப்படும், 2.50 ரூபாயும், தேசிய அளவில் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும், 6,000 ரூபாய்க்கே செலவிடப்படுகிறது.

இந்த விவரங்களை எல்லாம், யார் அறியப் போகின்றனர் என்ற தப்புக் கணக்கில், தியாகராஜன் இப்படிச் சொன்னாரா அல்லது இவருக்கே அது தெரியாதோ என்று கருத வேண்டியுள்ளது.

வாதம்: பெட்ரோல் விலை, 98 ரூபாய் என்றால், அதில், 70 ரூபாய் மத்திய அரசுக்கே செல்கிறது.

உண்மை: இந்த, 70 ரூபாயில், பெட்ரோல் உற்பத்தி செலவும், மத்திய அரசின் கலால் வரியும் அடக்கம். பெட்ரோலிய பொருள்களை உற்பத்தி செய்வது, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் என்பதால், அத்தொகையும் மத்திய அரசையே சேரும் என்று பேசுவதில், இரண்டு சாமர்த்தியங்கள் உள்ளன. மொத்த தொகையையும், மத்திய அரசே அள்ளிச் செல்கிறது என்ற குயுக்தியான எண்ணத்தை, மக்கள் மனத்தில் விதைக்க முடியும்; மாநில அரசு மீதான பரிதாபத்தையும் விதைக்க முடியும்.

உண்மையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், மத்திய அரசால் உருவாக்கப்பட்டாலும், தன்னிச்சையாக இயங்குபவை. தத்தமது லாப, நஷ்டத்துக்கு, அந்நிறுவனங்களே பொறுப்பானவை.

வாதம்: 'நீங்க வரி எடுத்துக்குங்க; நாங்க எடுத்துக்கலை' என்று சொல்ல முடியுமா?

உண்மை: ஏன் சொல்லக் கூடாது? சொல்லலாமே! மத்திய அரசு விதிப்பது கலால் வரி. மாநில அரசு விதிப்பதோ, மதிப்புக் கூட்டு வரி. இரண்டும் இரு வேறு வரிகள். ஒன்றை மற்றொன்று சார்ந்ததல்ல. 'மத்திய அரசு குறைத்தால் தான், நான் குறைப்பேன்' என்று சொல்வது, கையாலாகாத வாதம். மாநில அரசு மனது வைத்தால், தாராளமாக வரியை குறைக்கலாம். அப்போது, பெட்ரோல் பங்க்கில் விலை குறையும்.

தி.மு.க., கடந்த மார்ச், 13ம் தேதி தான், தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் தான், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி உறுதிமொழி கொடுத்திருந்தது. பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி, மதிப்பு கூட்டு வரி எல்லாம், அதற்கு முன்பிருந்தே நடைமுறையில் உள்ளவை. இவை எல்லாம் ஏதோ தற்போது தான் அமலுக்கு வந்தது போல, நிதி அமைச்சர் பேசுவதில் அர்த்தமில்லை.
மேலும், மக்களால் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியும். இது, கொரோனா காலம் என்பதால், மாநில அரசின் வரி வருவாய்க்குப் பெரிய வாய்ப்பில்லை. பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரி, மதுபானங்கள் மீதான வரி மற்றும் பத்திரப் பதிவு வாயிலாக வரும் கட்டணங்களே, மாநில அரசுக்கு நேரடியாக வருபவை.

இன்று தமிழகத்தின் நிதி நிலையை பார்க்கும்போது, கொரோனா தடுப்புக்குச் செய்யப்பட வேண்டிய செலவுகள் அதிகமாக உள்ளன. அதனால், 'எங்கள் தேர்தல் உறுதிமொழிகளை, உடனடியாக நிறைவேற்ற முடியாது. நிலைமை சீரான பின் செய்து தருகிறோம்' என்று நிதி அமைச்சர் பேசியிருந்தால், அது கவுரவமாகவும், கம்பீரமாகவும், மாண்புடனும் இருந்திருக்கும். ஆந்திர மாநிலத்திலும் இது தான் நடந்தது.

ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த போது, 'முதியோர் ஓய்வூதியத்தை, 2,000 ரூபாயில் இருந்து, 3,000 ஆக உயர்த்திக் கொடுக்கிறேன்' என, வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்து, மாநில கஜனாவின் இருப்பைப் பார்த்து அதிர்ந்தவர், வெளிப்படையாக மக்களிடம் உண்மையை சொன்னார். 'நிதி நிலைமை இப்போது சரியாக இல்லை. அதனால், கூடுதலாக, 250 மட்டும் சேர்த்துத் தருகிறேன். நிலைமை சீரான பின், மீதித் தொகையை தர முயற்சி செய்கிறேன்' என்றார், ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திர ஓய்வூதியர்கள் அந்த வாதத்தை மரியாதையுடன் ஏற்றனர். அதைப்போல, தமிழக நிதி அமைச்சர் நடந்து கொள்ள வேண்டும். அதற்கு மாறாக, மத்திய அரசை எதிர்த்து காற்றில் வாள் சுழற்றுவது, இயலாமையின் வெளிப்பாடு என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மேலும், இன்றிலிருந்து சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவிருப்பதால், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், பெட்ரோல், டீசல் விலை பிரச்னையை சட்டசபையில் எழுப்பக்கூடும் என்பதற்காகவே, இப்படியொரு தடுப்பாட்டத்தை நிதி அமைச்சர் தியாகராஜன் ஆடியிருக்கிறார் என்று கருதுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X