இந்திய நிகழ்வுகள்
பசு பாதுகாவலர் கொலை
வல்சாத்: குஜராத்தின் வல்சாத் மாவட்ட கிராமம் வழியாக, இறைச்சிக்காக 11 பசுக்கள் சமீபத்தில் சரக்கு வேனில் மஹாராஷ்டிராவுக்கு ஏற்றிச் செல்லப்பட்டன. அவர்களை தடுக்க முயன்ற பசு பாதுகாப்பு சங்க உறுப்பினர் ஹார்டிக் கன்சாரா, 29, வேன் ஏற்றி கொல்லப்பட்டார். வேன் உரிமையாளர், டிரைவர், பசுக்களை ஏற்றி சென்றோர் என, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 பேர் அடித்துக் கொலை
அகர்தலா: வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் கோவாய் மாவட்டம் நமஞ்சோய்பரா கிராமத்தில், சைபுல் இஸ்லாம், 18, உட்பட மூன்று பேர், ஐந்து மாடுகளை நேற்று அதிகாலை வேனில் ஏற்றிச் சென்றனர். அவர்கள் மாடுகளை திருடிச் செல்வதாக சந்தேகம் அடைந்த பொதுமக்கள் தாக்கியதில், மூவரும் பலியாகினர்.
ஆயுதங்கள் பதுக்கல்: 2 பேர் கைது
மால்டா: மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில், பெற்றோர், சகோதரி, பாட்டி ஆகியோரை கொன்ற ஆசிப் முகமதுவை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் கூறியதன் அடிப்படையில் அவரது கிராமத்தில், தங்கள் வீடுகளில் ஏழு கைத்துப்பாக்கிகள், 80 தோட்டாக்கள் பதுக்கி வைத்திருந்த இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்; ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காதலை ஏற்க மறுத்த பெண் கழுத்தை அறுத்து கொலை
கடப்பா-ஆந்திராவில், காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.கடப்பா மாவட்டத்தின் சிந்தலாசெருவு கிராமத்தைச் சேர்ந்த சரண், 21, அதே கிராமத்தைச் சேர்ந்த சிரிஷா, 19, என்பவரை காதலித்து உள்ளார். அவரது காதலை ஏற்க சிரிஷா மறுத்துவிட்டார். சமீபத்தில் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் புல் அறுக்கச் சென்ற சிரிஷாவை பின் தொடர்ந்த சரண், ஆளில்லா இடத்தில் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார்.இதையடுத்து, சிரிஷாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், சரணை சரமாரியாக தாக்கிஉள்ளனர். தகவல் அறிந்த போலீசார், சரணை கைது செய்தனர். தாக்குதலில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக நிகழ்வுகள்
தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து
தஞ்சாவூர்-தஞ்சாவூர் அடுத்த சைதாம்பாள்புரத்தில், தனியாருக்கு சொந்தமான தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. நேற்று வழக்கம் போல தொழிற்சாலையில், தேங்காய் மட்டையில் இருந்து நார் பிரித்தெடுக்கும் பணிகள் நடந்தன. மதியம்2:00 மணி அளவில் திடீரென தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.தஞ்சாவூர் தீயணைப்பு வீரர்கள் வந்து, மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தென்னை நார்கள் மற்றும் மட்டைகள் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள், தேங்காய் மட்டைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் போன்றவை எரிந்து சேதமடைந்தன.
காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தவர் கைது
மதுரை: அலங்காநல்லுார் அருகே கன்றுக்குட்டியை விற்றதற்காக காலில் விழுந்து மன்னிப்பு கேட்க செய்தவர், கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லுார் அருகே மேலபனங்காடியைச் சேர்ந்தவர் கண்ணன் 45; சாலை பணியாளர். ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த இவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த நாகலட்சுமி, 37, என்பவரின் கன்றுக்குட்டியை இறைச்சி கடையில் 7,500 ரூபாய்க்கு விற்றார்.இதையறிந்த நாகலட்சுமி சத்தம் போட, கன்றுக்குட்டியை மீண்டும் ஒப்படைப்பதாக கண்ணன் உறுதியளித்தார்.இதற்கிடையே நாகலட்சுமி, தம்பி நாகராஜன், 33, மற்றும் உறவினர்கள், கிராம கோவில் முன், கண்ணனை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தனர். இது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவ, அலங்காநல்லுார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நாகராஜன் கைது செய்யப்பட்டார்.
கண்ணன் கூறுகையில், ''எங்கள் கன்று என தவறாக நினைத்து விற்று விட்டேன். மீண்டும் ஒப்படைப்பதாக கூறியும், என்னை தாக்கி காயப்படுத்தினர்.''முதுகு தண்டுவட தேய்மானத்தால் 'பிளேட்' வைத்துள்ள என்னை விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தனர். எனக்கு நடந்த சம்பவமே கடைசியாக இருக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
மாவட்டம் தாண்டி மாமூல் போதை ஏட்டு 'சஸ்பெண்ட்'
பெரம்பலுார்-குடிபோதையில் மாவட்டம் தாண்டி மாமூல் வசூலில் ஈடுபட்ட ஏட்டு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.பெரம்பலுார் மாவட்டம் குன்னம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றுபவர் ரவிச்சந்திரன், 53. இவர், நேற்று முன்தினம் மாலை, கடலுார் மாவட்டம், திட்டக்குடியில் போலீஸ் சீருடையில், குடிபோதையில் வாகனங்களை மறித்து அபராதம் விதித்தார்.மேலும், அங்குள்ள கடைகளில் மாமூல் வசூலித்ததுடன், பொருட்களை வாங்கி, பணம் தராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொதுமக்கள், திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் தெரிவித்தனர்.போலீசார் அங்கு சென்று, ஏட்டு ரவிச்சந்திரனிடம் விசாரித்தபோது, அவர்களை முதலில் மிரட்டியவர், பின், தன்னை விட்டு விடுமாறு கெஞ்சினார். பெரம்பலுார் எஸ்.பி., மணி, ஏட்டு ரவிச்சந்திரனை 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டார்.

நடிகையுடன் குடும்பம் நடத்திய சர்ச்சை: முன்னாள் அமைச்சர் கைது
சென்னை-நடிகையுடன் குடும்பம் நடத்தி, அவரை மூன்று முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததுடன், அவரின் அந்தரங்க படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 43; டாக்டர். அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர், இ.பி.எஸ்., முதல்வராக இருந்தபோது, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தார்.இவர் மீது, நடிகை சாந்தினி, 36, என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மே 28ல் அளித்த புகார்: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, திருமணமாகாத என்னுடன், மணிகண்டன் ஐந்து ஆண்டுகள் குடும்பம் நடத்தினார்.
கட்டாயப்படுத்தி மூன்று முறை கருக்கலைப்பு செய்ய வைத்தார். மாதவிடாய் நாட்களிலும், உறவு வைத்து கொடுமைப்படுத்தினார். எனக்கு தெரியாமல் எடுத்த, என் அந்தரங்க படங்களை, இணையத்தில் வெளியிடுவேன் என, கொலை மிரட்டல் விடுக்கிறார்.இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.இது குறித்து, அடையாறு மகளிர் போலீசார் விசாரித்து, மணிகண்டன் மீது, கட்டாய கருகலைப்பு, நம்பிக்கை மோசடி, பாலியல் பலாத்காரம் உட்பட, ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து தேடி வந்தனர்.
இதற்கிடையில், முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மணிகண்டன் மனு தாக்கல் செய்தார். மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து, தலைமறைவாக இருந்த மணிகண்டனை பிடிக்க, இன்ஸ்பெக்டர்கள் வீரக்குமார், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில், இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்த மணிகண்டன், நண்பர்கள் மகேஷ், இளங்கோ உதவியுடன், பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள, மிகப்பெரிய 'ரிசார்ட்' ஒன்றில், ஜூன் 11ல் இருந்து தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் இவரது மொபைல் போன் டவர், ரிசார்ட் பகுதியை காட்டியது. தனிப்படை போலீசார் விரைந்து சென்று கண்காணித்தனர்.நேற்று காலை 8:00 மணியளவில், முகத்தை மறைத்தபடி மணிகண்டன், 'வாக்கிங்' சென்றார். ஆனால், நேர் வகுடு எடுத்துள்ள அவரது தலைமுடியை மறைக்க தவறவிட்டார். இதனால், மணிகண்டனை அடையாளம் கண்ட போலீசார், அவரை கைது செய்தனர்.
போலீசாரை பார்த்ததும் பதறிய மணிகண்டன், 'நான் செய்தது பெரிய விஷயமா; என்னை விட்டு விடுங்கள் சார்...; அந்த பெண்ணும், மேலும் சிலரும் என்னிடம் பல கோடி ரூபாய் பறிக்க முயற்சித்தனர்' என, கெஞ்சினார். சென்னை வரும் வரை, இதையே திரும்ப திரும்ப மணிகண்டன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். கைதான மணிகண்டன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது
வடவள்ளி;வீரகேரளத்தில், கஞ்சா விற்பனை செய்தவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எஸ்.ஐ., சேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீரகேரளம் மயானத்தின் அருகே தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த குணா, 21 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார், பொள்ளாச்சியில் உள்ள சிறையில் அடைத்தனர்.
குடோனில் திடீர் தீவிபத்து: 6 ஆடு பலி; 2 பைக் சேதம்
பொங்கலுார்:பொங்கலுார் நாச்சிபாளையம் ஊராட்சி தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 59; வீட்டருகே உள்ள வேஸ்ட் குடோனில், ஆறு ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இரண்டு பைக்குகளையும் நிறுத்தி இருந்தார்.நேற்று அதிகாலை, 2:00 மணியளவில் குடோனில் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு நிலையத்தினர் வருவதற்குள், அங்கு கட்டியிருந்த ஆறு ஆடுகளும் உடல் கருகி இறந்தது.இரண்டு பைக், வேஸ்ட் துணி ஆகிய அனைத்தும் எரிந்தது. அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரேஷன் அரிசி காரில் கடத்தல்
திருப்பூர்:திருப்பூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுபல்லவி தலைமையிலான போலீசார், காங்கயம் ரோடு இச்சிபாளையம் பிரிவில், காங்கயம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில், 650 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.காங்கயம், மானுாரை சேர்ந்த பனியன் தொழிலாளி மகேஷ்குமார், 36, பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை சேகரித்து, கால்நடை தீவன தயாரிப்புக்கு அரிசியை விற்று வந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 650 கிலோ அரிசி, காரை பறிமுதல் செய்தனர்.
சிறுமியருக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் 3 பேர் கைது
கிண்டி : சிறுமியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, முதியவர் உட்பட, மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
நீலாங்கரையைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 67; திருமணமாகாதவர். இரு தினங்களுக்கு முன், வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த, 6 வயது சிறுமிக்கு, சாக்லெட் வாங்கிக் கொடுத்து, வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அடையாறு மகளிர் போலீசார், ஜெகநாதனை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.சோழிங்கநல்லுாரைச் சேர்ந்தவர், 16 வயது சிறுமி. கடந்த மாதம், பெற்றோர் வெளியே சென்றதால், வீட்டில் தனியாக இருந்துள்ளார். தஞ்சாவூரில் இருந்து, சிறுமியின் தாயாரைப் பார்க்க வந்த கனகராஜன், 31 என்பவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, தலைமறைவானார். கிண்டி மகளிர் போலீசார், கனகராஜனை நேற்று முன்தினம், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
கண்ணகி நகரை சேர்ந்த, 14 வயது சிறுமி, சில நாட்களுக்கு முன் மாயமானார். கிண்டி மகளிர் போலீசார் விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், 22, என்பவர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை மகாபலிபுரம் அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு, சில நாட்கள் தங்கியிருந்து, சிறுமியிடம் பாலியல் உறவு கொண்டுள்ளார். போலீசார், மோகன்ராஜை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
உலக நிகழ்வுகள்
அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் வளர்ப்பு நாய் உயிரிழப்பு
வில்மிங்டன்-அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் செல்லப் பிராணி நாய், உயிரிழந்தது.அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் ஜோ பைடன் பொறுப்பேற்ற பின், வெள்ளை மாளிகைக்கு தன் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். தன் செல்லப் பிராணிகளான, 'மேஜர் மற்றும் சாம்ப்' என்ற இரண்டு 'ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களையும், அவர் வெள்ளை மாளிகையில் வைத்து வளர்த்து வந்தார். அதில் சாம்ப் என்ற நாய், நேற்று முன்தினம் உயிரிழந்தது. இதை அதிபர் ஜோ பைடன், தன் அதிகாரப்பூர்வ 'டுவிட்டர்' பக்கம் வாயிலாக தெரிவித்தார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:எங்கள் குடும்பத்தின் செல்லப் பிராணிகளான இரண்டு நாய்களில், சாம்ப் என்ற நாய், வீட்டில் உயிரிழந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக, சாம்ப் எங்களின் துணையாக இருந்து வந்தது. மகிழ்ச்சியான தருணங்களிலும், கவலையான நேரங்களிலும் எங்களுடன் சாம்ப் என்றும் இருந்தது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.