தமிழகத்தில் 16வது சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் துவங்கியது. இதில், பல்வேறு முக்கிய அம்சங்களும் இடம்பெற்றது. கவர்னர் உரை குறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கவர்னர் உரையில் எப்போதுமே அரசின் முன்னோடி திட்டங்கள் இடம்பெறும். ஆனால் இன்றைய கவர்னர் உரையில் அப்படிப்பட்ட முன்னோடி திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் நேரத்தில் அறிவித்தார்கள். அப்போது அறிவித்துவிட்டு, அதற்கு மாறாக இப்போது கமிட்டியை அமைத்துள்ளனர். ரத்து செய்யப்படும் என கூறிவிட்டு, சுகாதாரத்துறை அமைச்சர் இன்னும் நீட் தேர்வு முடிவுக்கு வரவில்லை, மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுமாறு குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறி நடைமுறைப்படுத்தினோம். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை.

கல்விக்கடன், நகைக்கடன் உள்ளிட்டவைகள் குறித்தும் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை. அதேபோல், பெட்ரோல், டீசல் விலைக் குறைக்கப்படும் என அறிவித்தார்கள், குடும்பத் தலைவிக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்கப்படும், முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும், கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் இப்படி பல திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால், கவர்னரின் உரையில் இது குறித்து எதுவும் இடம்பெறவில்லை.
கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்த அரசு தவறிவிட்டது. அதிமுக ஆட்சியில் அதிகபட்சமாக 7 ஆயிரமாக தான் தினசரி பாதிப்பு இருந்தது, ஆனால், திமுக ஆட்சியில் பல மடங்கு அதிகரித்தது. ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் மிகப்பெரிய குளறுபடி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE