ருசி கண்ட பூனைகள் முன், பால் கிண்ணம்!| Dinamalar

ருசி கண்ட பூனைகள் முன், 'பால் கிண்ணம்!'

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | |
மித்ரா வீடு முன் நின்றபடியே, 'வா மித்து, ரேஷன் கடை போய், நிவாரணப்பொருள் வாங்கிட்டு வந்துடலாம்... டோக்கனை மறந்துடாதே' என்று அழைத்தாள் சித்ரா. இருவரும் முக கவசம், கையுறை அணிந்து, ரேஷன் கடைக்கு புறப்பட்டனர்.கடையில் கூட்டம் இல்லை; 'அண்ணா எப்டி இருக்கீங்க' என்று நலம் விசாரித்தபடியே, ரேஷன் ஊழியரிடம் டோக்கனை கொடுத்தாள் சித்ரா. டோக்கனை, ஊழியர் உற்றுப்பார்க்க, 'ஏண்ணே... நீங்க
 ருசி கண்ட பூனைகள் முன், 'பால் கிண்ணம்!'

மித்ரா வீடு முன் நின்றபடியே, 'வா மித்து, ரேஷன் கடை போய், நிவாரணப்பொருள் வாங்கிட்டு வந்துடலாம்... டோக்கனை மறந்துடாதே' என்று அழைத்தாள் சித்ரா. இருவரும் முக கவசம், கையுறை அணிந்து, ரேஷன் கடைக்கு புறப்பட்டனர்.கடையில் கூட்டம் இல்லை;

'அண்ணா எப்டி இருக்கீங்க' என்று நலம் விசாரித்தபடியே, ரேஷன் ஊழியரிடம் டோக்கனை கொடுத்தாள் சித்ரா. டோக்கனை, ஊழியர் உற்றுப்பார்க்க, 'ஏண்ணே... நீங்க கொடுத்த டோக்கன்தானே... இப்டி பாக்கறீங்க' என்று கேட்டாள்.

'அத ஏம்மா கேக்கறீங்க, போன வாரம் அங்கேரிபாளையத்துல ஒரு ரேஷன் கடைல, 70 பேருக்கு டோக்கன் கொடுத்தா, 140 பேர் வரிசை கட்டி நின்னாங்களாம்... அப்பகுதில இருக்கற ஆளும் கட்சி பொறுப்பாளரு ஒருத்தர், 70 டோக்கன் கொடுத்து அனுப்பிச்சிருக்காருனு, தெரிஞ்சுதாம்... மனுசன நிம்மதியாக வேலை பார்க்க விட்டாலே போதும்... பிரச்னை இல்லாம இருக்கும்' என்று சலித்துக்கொண்டார், ஊழியர்.

'அடக்கொடுமையே... இப்படி வேற நடக்குதா' என கூறி, சித்ரா நகர, 'ஏன் குமாரு, ஒடம்பு சரியில்லைனு கேள்விப்பட்டேன்; எப்படி இருக்க?' என்று, அங்கு வந்த இளைஞரிடம் நலம் விசாரிக்க துவங்கினார், ரேஷன் ஊழியர்.இதுவா கெத்து?


'இப்படித்தான் மித்து, பல்லடத்துல, காளிபேரு கொண்ட ஊர்ல இருக்க ரேஷன் கடைல, நிவாரணம் தர்றத, லோக்கல் பொறுப்பாளரு, துவக்கி வச்சிட்டு போயிருக்காரு; பின்னாடியே வந்த யூனியன் சேர்மன் கோஷ்டி, அவங்க பங்குக்கு இன்னொரு நாலு பேத்துக்கு பொருட்களை கொடுத்து, கெத்து காட்டியிருக்காங்க' என்றாள் சித்ரா.

'இதுல என்னக்கா கெத்து; இன்னொரு கூத்து சொல்றேன் கேளுக்கா... நெருப்பெரியற பேர் கொண்ட ஊர்ல இருக்க, அஞ்சு ரேஷன் கடைலேயும், தன்னோட தலைமைல தான் நிவாரண பொருள் கொடுக்கோணும்னு, கிளை பொறுப்பாளர் ஒருத்தரு கண்டிப்பா சொல்லிட்டாராம். ஒவ்வொரு கடையா நிகழ்ச்சிய முடிச்சுட்டு, அஞ்சாவது கடைக்கு அவரு போனப்போ, பதினொன்றரை மணி ஆயிருச்சாம். அதுவரைக்கும், மக்கள் வெயில்ல காத்துட்டு இருந்திருக்காங்க,'' என்றாள் மித்ரா.

'அரசு நிகழ்ச்சியெல்லாம் 'ஜோதி'மயமா இருக்கோணும்னு, கட்சிக்காரரு ஆசைப்படறாரு போல' எனக்கூறி சிரித்தாள் சித்ரா.'சோளப்பொறி'


அருகே இருந்த மர நிழலில், இருவரும் ஒதுங்கினர். ரேஷன் கடையை ஒட்டியிருந்த சுகாதார மையத்தில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள, பலர் காத்து நின்றனர்.'பரவால்ல சித்ராக்கா... நெறைய பேரு தடுப்பூசி போட்டுக்கிறாங்க... ஏற்றுமதி நிறுவனத்தினர் தங்களோட தொழிலாளருக்கு தடுப்பூசி போடறதுல ரொம்ப ஆர்வம் காட்றாங்க' என்றாள் மித்ரா.

'ஏற்றுமதி நிறுவனங்கள் ஐம்பது சதவீத தொழிலாளரோட இயங்க அரசு அனுமதி அளிச்சிருச்சு... ஆனா, உள்நாட்டு ஆடை நிறுவனங்கள் இயங்க அனுமதிக்காததாலே, அவங்களுக்கு பெரிய வருத்தம். தயாரிக்கிறது ஆடைகள்தான்; அவங்க வெளிநாடு அனுப்பறாங்க... நாங்க தமிழ்நாட்டுலயும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பறோம்; எல்லாமே வர்த்தகம்தானேன்னு ஆதங்கப்படறாங்களாம்' என்றாள் சித்ரா.

'வாக்காளர் பட்டியல் அடிப்படைல, தடுப்பூசி போடலாங்கற கலெக்டரோட ஐடியாவை நிறைய பேரு வரவேற்கிறாங்க... ஆனாலும், தேவைக்கேத்த அளவு தடுப்பூசி வந்தா தானே, எல்லோரையும் திருப்திப்படுத்த முடியும். யானைப்பசிக்கு சோளப்பொறி அளவுலதான் மருந்து சப்ளை இருக்கு' என்று ஆதங்கப்பட்டாள் மித்ரா.இது எப்படி இருக்கு!


'சரி மித்து, கிளம்பலாம். பஞ்சாயத்து ஆபீசுக்கு வேற நாளைக்கு போக வேண்டியிருக்கு''அக்கா... இந்த டிபார்ட்மென்ட்ட கவனிக்கிற பெரிய ஆபீசரு, தப்பு செய்றவங்களை கண்டுக்கவே மாட்டேங்கறார்ன்னு பேசிக்கிறாங்க. ஊழல் செய்றவங்கள 'சஸ்பெண்ட்' பண்ணிட்டா, இருக்கிற வேலைய யார் கவனிப்பாங்கன்னு கேக்குறாராம்,' என்றாள் மித்ரா.

'இப்படி இருந்தா தப்பு பண்றவங்களுக்கு கொண்டாட்டம் தான்,' என சித்ரா கூற, ஸ்கூட்டரை கிளப்ப மித்ரா தயாரானாள்; எதிரே வந்த ஒரு முதியவர், 'ஏம்மா... இங்க 'சந்திரகுமாரு'ன்னு ஒரு ஆபீசர பாக்கோணும்,' என கேட்க, எதிரே இருந்த அலுவலகத்தை கைகாட்டி, 'அங்கே போய் கேளுங்கய்யா' என கூறி, ஸ்கூட்டரை கிளப்பினாள்.

சாலையோரம் தென்பட்ட 'ஆவின்' பாலகம் முன் ஸ்கூட்டரை நிறுத்திய மித்ரா, ஒரு லிட்டர் 'ஆவின்' பாலை வாங்கி வந்து, பையில் வைத்தாள்.'ஆவின் பால் விலைல, மூணு ரூபாய் குறைச்சுட்டோம்ன்னு அரசாங்கம் சொல்லுச்சு. ஆனா, கிராமத்து பக்கம் இருக்கற கடைக்காரங்க விலைய குறைக்கவே இல்லையாம்' என்றாள் சித்ரா.'ஆவின் அதிகாரிங்கதான் இதை சோதனை செய்யணும்... ஆனா அவங்களுக்கு நேரம் இல்லை போல' என்றாள் மித்ரா.கல்லா கட்ட ஆசை


இருவரும், சித்ரா வீடு வந்து சேர்ந்தனர். ஹாலில் இருந்த ேஷாபாவில் அமர, தெருவுக்குள் போலீஸ் ஜீப் ஒன்று வேகமாக சென்றது.'என்னக்கா போலீஸ் ஜீப்பெல்லாம் போகுது; எதுவும் பிரச்னையா' என்றாள் மித்ரா.'தெரியலை மித்து. சிட்டிக்கு புதுசா வந்திருக்குற அதிகாரி, ரொம்ப 'ஆக்டிவா' இருக்காராம். புகாரை கேள்விப்பட்டவுடனே, அங்க போய் நிக்கிறாராம். அது மாதிரி புகார் எதுவும் வந்திருக்கலாம்' என்று விவரித்தாள் சித்ரா.

'அக்கா. ரூரலுக்கு புதுசா வந்திருக்கற அதிகாரியும் ரொம்ப கண்டிப்பானவராம். போன வாரம், 280 போலீஸ்காரங்களுக்கு, 'டிரான்ஸ்பர்' கொடுத்துருக்காரு. ஏற்கனவே ஒரு ஸ்டேஷன்ல வேலை பாத்து, தப்பு பண்ணி, 'பனிஷ்மென்ட்'ல வேற ஸ்டேஷனுக்கு போனவங்களுக்கு, அவங்க விரும்பிக்கேட்ட பழைய ஸ்டேஷன்லயே 'போஸ்டிங்' போட்டு கொடுத்திருக்காராம். திரும்பி அவங்க தப்பு பண்ணாம இருக்க இது கடைசி வாய்ப்புனு வேற சொல்லியிருக்காரு. ருசி கண்ட பூனை முன்னாடி பால் கிண்ணத்தை வச்சா சும்மா இருக்குமான்னு, மத்த போலீஸ்காரங்க பேசிக்கிறாங்க,'' என கூறி சிரித்தாள் மித்ரா.

'நீ சொல்றதும் சரிதான். சிட்டிக்குள்ளேயும், 'டிரான்ஸ்பர்' ஆர்டர் தயாராயிட்டு இருக்குதாம். கல்லா கட்ட வசதியான போலீஸ் ஸ்டேஷனா பாத்து 'போஸ்டிங்' வாங்க, அரசியல்ரீதியா அழுத்தம் கொடுக்க நிறைய பேரு, முயற்சிக்கிறாங்களாம். ஆபீசரம்மா என்ன பண்ண போறாங்கன்னு தெரியல' என்றாள் மித்ரா.இதுதானா நடவடிக்கை!


'லிங்கேஸ்வரர் ஊர்ல, ஜெயில்ல இருந்தவரோட 4 லட்சம் ரூபாயை 'சுட்ட' ஒரு போலீஸ்காரரை, பெரிய ஆபீசரு, சஸ்பெண்ட் பண்ணாருல்ல. அதே மாதிரி, சிட்டிக்குள்ள, போலி சி.எஸ்.ஆர்., போட்டு மோசடி செஞ்ச ஒரு போலீஸ்காரரையும் 'சஸ்பெண்ட்' பண்ணாங்க. அவங்க மேல எப்.ஐ.ஆர்., போட்டிருந்தா, அந்த மாதிரி தப்பு பண்ற மத்த போலீஸ்காரங்க பயத்தோட இருந்திருப்பாங்கன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.

'ஈயம் பூசின மாதிரியும் இருக்கோணும்; பூசாத மாதிரியும் இருக்கோணும்ங்கற மாதிரிதான் இந்த நடவடிக்கை' என கூறி சிரித்த மித்ரா, ''ரூரல் பக்கம், இப்பெல்லாம் 'சில்லிங்' சரக்கு விக்கறவங்க, அடக்கி வாசிக்கிறாங்களாம். இருந்தாலும், சிலரு கள்ளு வித்துக்கிட்டு இருக்காங்களாம்,'' என்றாள்.

'என்னமோங்க்கா... 'குடி'மகன்கள் இருக்கறவரைக்கும் இந்த மாதிரி தொடரத்தான் செய்யும்' என்றாள், மித்ரா, புன்னகைத்தவாறே.


'தீயா வேலை செய்ற குமாரு''சிட்டிக்குள்ள சூரிய கட்சி எம்.எல்.ஏ., எங்கே போனாலும் பின்னாடி கரைவேட்டி ஆளுங்க போறாங்க... எம் பேர சொல்லி யாரு வந்தாலும், அதிகாரிங்க பயந்துட்டு எதுவும் செஞ்சு தர வேணாம்; மக்களுக்கு தேவையானதுனா நானே என்னோட லெட்டர்பேடுல கையெழுத்துபோட்டு முறைப்படி கேப்பேன்னு சொல்லிருக்காரு. சொல்றதெல்லாம் சரிதான்... ஆனா, கரைவேட்டி ஆளுங்க சும்மா இருப்பாங்களா... எம்.எல்.ஏ., சொன்னாதான் கேக்கப்போறாங்களா' என்றாள் சித்ரா

.'நீங்க சொல்றது உண்மைதாங்கா... இலை கட்சி எம்.எல்.ஏ., 'தீயா வேலை செய்ற குமாரு' மாதிரி ஆசைப்படுறாரு... அதிகாரிகள் ஒத்துழைப்பு அவசியம்னு புரிஞ்சுருக்காரு. புதுசா வந்த கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர், எஸ்.பினு எல்லாரையும் நேர்ல பாத்து பூங்கொத்து கொடுத்து, அறிமுகமாயிட்டு வந்துருக்காரு' என்றாள் மித்ரா.

'சும்மா, குறையே சொல்லிட்டு இருக்காம, அதிகாரிகளை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., தெரிஞ்சு வச்சுக்கறது ஆரோக்கியமானதுதானே' என்று சித்ரா கூற, இருவரிடமும் கலகலப்பு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X