அப்லோடு தீர்மானங்களால் பினாமிகள் அலறல்: கஞ்சா குதிரையில் எஸ்ஐ உல்லாசம்| Dinamalar

'அப்லோடு' தீர்மானங்களால் பினாமிகள் அலறல்: 'கஞ்சா குதிரையில்' எஸ்ஐ உல்லாசம்

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021
Share
முகக்கவசம், கையுறை அணிந்துகொண்டு, சித்ராவும், மித்ராவும் நகர் வலம் புறப்பட்டனர். மாநகராட்சி பள்ளி ஒன்றில், தடுப்பூசி போடுவதற்கு, நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, தடுப்பூசி போடுற விஷயத்தில் மாவட்ட நிர்வாகமும், பொது சுகாதாரத்துறையும் இன்னமும் சொதப்பிக்கிட்டே இருக்குப்பா. கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள, வார்டு வாரியா,
 'அப்லோடு' தீர்மானங்களால் பினாமிகள் அலறல்: 'கஞ்சா குதிரையில்' எஸ்ஐ உல்லாசம்

முகக்கவசம், கையுறை அணிந்துகொண்டு, சித்ராவும், மித்ராவும் நகர் வலம் புறப்பட்டனர். மாநகராட்சி பள்ளி ஒன்றில், தடுப்பூசி போடுவதற்கு, நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, தடுப்பூசி போடுற விஷயத்தில் மாவட்ட நிர்வாகமும், பொது சுகாதாரத்துறையும் இன்னமும் சொதப்பிக்கிட்டே இருக்குப்பா. கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள, வார்டு வாரியா, வாக்காளர் பட்டியலை அடிப்படையா வச்சு, முகாம் நடத்தலாம்,''

''ரூரல் ஏரியாவுல கிராமம் கிராமமா போயி, தடுப்பூசி போடலாம். அதை விட்டுட்டு, மருத்துவ குழுவினரை தேவையில்லாமல், மன உளைச்சலுக்கு ஆளாக்குறாங்க. இதுல, அரசியல் நெருக்கடி வேற,''

''என்னக்கா, சொல்றீங்க! தடுப்பூசி குத்துறதிலும் அரசியல் செய்றாங்களா,''

''பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துல, தடுப்பூசி போடுறதுக்கு தி.மு.க.,காரங்க தலையீடு ஜாஸ்தி ஆகிடுச்சாம். முகாமுக்குள் அத்துமீறி நுழையும் உடன்பிறப்புகள், டோக்கனை கொடுக்கச் சொல்லி, நர்சுங்களுக்கு 'டார்ச்சர்' கொடுக்குறாங்க,''

''சிலர், மையத்துக்குள்ளே நுழைஞ்சு, தடுப்பூசியையும், நர்சுங்களையும் வண்டில ஏத்தி நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு கூட்டீட்டுப்போய் ஊசி போடச் சொல்றாங்களாம்,''

''இதே மாதிரி, சூலுார் ஏரியாவுல சூரியக்கட்சிக்காரங்க மட்டுமில்லாம, இலைக்கட்சிக்காரங்களும் பிரச்னை பண்றாங்களாம். டோக்கனை மொத்தமா வாங்கி, வேண்டியவங்களுக்கு உடன்பிறப்புகள் கொடுக்கிறாங்க,''

''அரசியல் கட்சியினரே வரம்பு மீறி செயல்படுறதால, என்ன செய்யறதுன்னு தெரியாமல், சுகாதாரத்துறையினர் விழி பிதுங்கி இருக்காங்க,'' என்றபடி, கார்ப்பரேஷன் ஆபீஸ் நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

செஞ்சிலுவை சங்க ரவுண்டானாவை கடந்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை தாண்டியதும், ''அக்கா, காவல் துறையில உயரதிகாரிகளை மாத்துன மாதிரி, அத்தனை இன்ஸ்பெக்டர்களையும் மாத்தப் போறாங்களாம். 'லிஸ்ட்' ரெடியாம்,''

''இதெல்லாம் தப்பாச்சே, ஆட்சி மாறுனா, அதிகாரிகளை மாத்தணுமா, என்ன? கலவரம், குண்டுவெடிப்புன்னு ஏகப்பட்ட பிரச்னைகளை சந்திச்ச, ஊர். அவற்றை கையாள்றதுக்கு திறமையான அதிகாரிகளா இருக்கணும். கடந்த ஆட்சியில நியமிச்சவங்கன்னு குற்றச்சாட்டு சுமத்தி, மாத்துறதுக்கு பதிலா, திறமைசாலிகளை பயன்படுத்தனும்னு, அனுபவமுள்ள போலீஸ்காரங்க பேசிக்கிறாங்க,''ஸ்டேட் பாங்க் ரோட்டில், தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள் சித்ரா.

ஏ.டி.எம்., அருகே உள்ள ரோட்டோர கடையில், கரும்பு ஜூஸ் ஆர்டர் சொன்ன மித்ரா, ''ரூரல் ஏரியாவை சேர்ந்த ஒரு எஸ்.ஐ., குதிரையில வலம் வர்றாராமே,'' என, நோண்டினாள்.

''அதுவா, துடியலுார் லிமிட்டுல இல்லீகலா மது விற்பனை ஜோரா நடக்குது. மொத்தம், 15 கடை இருக்குதாம். ஒரு கடைக்கு ஒன்றரை லட்சம் ரூபா வசூலிக்கிறாங்களாம். மதுவிலக்கு பிரிவை சேர்ந்த ரெண்டு போலீஸ்காரங்க, இதுக்கு உடந்தையாம்.ஆனைகட்டி வரைக்கும், மது விற்பனை சக்கைப்போடு போடுதாம்; கஞ்சாவும் தங்குதடையின்றி கிடைக்குதாம். மாங்கரையை சேர்ந்த கஞ்சா வியாபாரி வாங்கிக் கொடுத்த குதிரையிலதான், எஸ்.ஐ., உல்லாசமா ஊர் சுத்துறாராம்,''

''அப்படியா, குதிரை ரேஸ் நடக்குறதாவும் கேள்விப்பட்டேனே,'' என்றபடி, ஜூஸை பருக ஆரம்பித்தாள் சித்ரா.

''ஆமாக்கா, போலீஸ்காரங்க ஆதரவு அமோகமா இருக்கறதுனால, கணுவாயில இருந்து ஆனைகட்டி வரைக்கும் குதிரை ரேஸ் நடக்குது,''

''மித்து, சிட்டி லிமிட்டுக்குள்ளேயும், சரக்கு சேல்ஸ் அமோகமா நடக்குதாமே,''

''யெஸ், நீ சொல்றது கரெக்ட்டுதான்! இன்னும் ஊரடங்கு அமலில் இருக்கறதுனால, மதுக்கடையை மூடி வச்சிருக்காங்க. அதனால, இல்லீகலா விக்கிறவங்களுக்கு செம கலெக்ஷன். ஒரு குவார்ட்டர், 800 ரூபாய்க்கு, ஒரு பீர், 500 ரூபாய்க்கு, ஒரு புல் பாட்டில், 7,000 ரூபாய்க்கும் விக்கிறாங்க,''

''அக்கா, உள்ளூர் போலீஸ்காரங்க, கடைக்காரங்களோட 'அண்டர்ஸ்டாண்டிங்ல' போயிடுவாங்க. இப்போ, தெற்கு பகுதிக்கு புதுசா நியமிச்சிருக்கிற உதவி கமிஷனர், ஸ்பெஷல் டீம் அமைச்சிருக்கார். இந்த டீம் போற ஏரியாவுல, ஏகப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்றாங்க. ஆனா, ரோந்து போற போலீஸ்காரங்க, எதையும் கைப்பத்துறதில்லை,''

''இதுல, உடன்பிறப்புகளும் ஒவ்வொரு கடைக்கும் போயி, மாமூல் கேட்க ஆரம்பிச்சிட்டாங்களாம்,''

''ஆமாப்பா, சூரியக்கட்சியை சேர்ந்த பகுதி கழக செயலாளர் ஒருத்தரு, வீட்டுல மது பாட்டில்களை பதுக்கி வச்சு, வியாபாரம் செஞ்சிட்டு இருந்திருக்காரு. விஷயம் கேள்விப்பட்டு, அவரை, ஸ்டேஷனுக்கு துாக்கிட்டு வந்துட்டாங்க. மேலிடத்துல இருந்து அழுத்தம் வந்ததால, வழக்கு பதியாம விட்டுட்டாங்களாம்,''

''ஆளுங்கட்சின்னா சும்மாவா... இதைக்கேளு, ஞாயித்துக்கிழமை, அர்ச்சகர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குற நிகழ்ச்சி, கலெக்டர் ஆபீசுல நடந்துச்சு; அதுல, ஏகப்பட்ட கட்சிக்காரங்க கலந்துக்கிட்டாங்க; அரசு அதிகாரிகளும் கண்டுக்காம விட்டுட்டாங்க,''

''அதெல்லாம் இருக்கட்டும். எம்.எல்.ஏ., வானதியை பற்றி, 'பேஸ்புக்'ல அவதுாறு பரப்புனவங்களை, போலீஸ்காரங்க கண்டுபிடிச்சிட்டாங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.

''அதுவா, ஒருத்தரை பிடித்து விசாரிக்கிறாங்க. இதுக்கு முன்னாடி, தாமரை கட்சியில இருந்தவராம்; இப்போ, இந்து அமைப்புல இருக்காராம். உள்கட்சி விவகாரம் போலிருக்கு. விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு,'' என்றபடி, மீண்டும் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

ரயில்வே ஸ்டேஷனை பார்த்த மித்ரா, ''நம்மூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு நியமிச்சிருக்கிற, வெளிமாநிலத்தை சேர்ந்த அதிகாரிக்கு, சுறுசுறுப்பு பத்தாதாம்,''

''இதுக்கு முன்னாடி வேலை பார்த்த அதிகாரி, கொரோனா முதல் அலை பரவியபோது, ஸ்டேஷன் நுழைவாயிலில் சிறப்பு மையம் அமைச்சு, பரிசோதனை செஞ்சாரு. இப்ப, அந்த மாதிரி செய்யலையாம். ஊழியர்களிடமும் இணைக்கமா இல்லைன்னு சொல்றாங்க,'' என்றாள்.

பேசிக்கொண்டே, டவுன்ஹாலை கடந்து, கார்ப்பரேஷன் வளாகத்துக்குள் நுழைந்த சித்ரா, ''என்னப்பா, புதுசா வந்திருக்கிற கமிஷனர் எப்படி இருக்காரு; செயல்பாடு எப்படி இருக்கு,'' என, கொக்கி போட்டாள்.

''அக்கா, சின்ன வயசுக்காரரா இருக்கறதுனால, ஸ்பீடு அதிகமா இருக்கு. அதிகாலை, 6:00 மணிக்கே கள ஆய்வுக்கு கெளம்பிடுறாரு. தினமும் ஒரு டிபார்ட்மென்ட் இன்ஸ்பெக்சன் செய்றாரு. ஆபீசுல தினமும் ஒரு டிபார்ட்மென்ட் ரெவ்யூ மீட்டிங் நடத்துறாரு,''

''ஹெல்த் டிபார்ட்மென்ட், இன்ஜினியரிங் டிபார்ட்மென்ட்டுல இருக்குறவங்க, கண்டிப்பா, மைக்குல பேசணும்னு சொல்லியிருக்காரு. மைக்கை கண்காணிச்சிட்டே இருப்பேன்னு சொன்ன கமிஷனர், நிர்வாக பொறியாளர் அந்தஸ்துல இருக்குற ஒரு லேடி ஆபீசரை, தான் சொன்ன அறிவுறுத்தல்களை திரும்பச் சொல்லச் சொல்லியிருக்கிறார்,''

''அவரோ, ஏதேதோ சொல்ல, 'மேடம், அதெல்லாம் ரெண்டு நாளைக்கு முன்னாடி, மீட்டிங்ல சொன்னது. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, மைக்குல சொன்னதை சொல்லுங்கன்னு சொல்லியிருக்காரு. மறுமுனையில சத்தத்தை காணோம். உடனே, இன்னொரு அதிகாரியை சொல்லச் சொல்லி, பாடம் நடத்தியிருக்காரு. அதுல இருந்து, ஒவ்வொரு அதிகாரியும், மைக்கை துாக்கிட்டு அலையுறாங்களாம்,''

''அதெல்லாம் இருக்கட்டும், நாலு வருஷமா மூடி மறைச்ச, மாமன்ற தீர்மானங்களை, இணைய தளத்துல 'அப்லோடு' செஞ்சதுனால, பினாமி கம்பெனிக்காரங்க ஆடிப்போயிருக்காங்களாமே,''

''ஆமாப்பா, உண்மைதான்! ஏகப்பட்ட வேலைகளை முறைப்படி, டெண்டர் விட்டு செய்யலை போலிருக்கு. வேலை செஞ்சதுக்கு அப்புறம், முன்அனுமதி பெற்றதாசொல்லி, சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு நிதி ஒதுக்கி, தீர்மானம் நிறைவேத்தியிருக்காங்க,''

''இப்ப, 'அப்லோடு' செஞ்சதிலும், 64 தீர்மானங்கள் 'மிஸ்' ஆகிருக்குன்னு சொல்றாங்க. இன்னும் மூன்றரை வருஷ தீர்மானங்களை, 'அப்லோடு' செய்யணும். ''அதுல, ஏகப்பட்ட வில்லங்கங்கள் வெளிச்சத்துக்கு வரும்னு, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.அதன்பின், ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பிரிவுக்குச் செல்ல, இருவரும் 'லிப்ட்'டில் பயணித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X