சென்னை: எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,களில் நூதன முறையில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் ஈடுபட்டது வெளிமாநில கும்பல் எனவும், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறி உள்ளார்.
ராமாபுரம், வள்ளுவர் சாலையில், எஸ்.பி.ஐ., வங்கி உள்ளது. இதன் அருகே, வங்கி ஏ.டி.எம்., மையமும் செயல்பட்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன், வங்கி மேலாளர் முரளிபாபு, ஏ.டி.எம்., மையத்திற்கு சென்று கணக்கை சரிபார்த்தார். அப்போது, ஏ.டி.எம்., மிஷினில் இருந்து, 1.50 லட்சம் ரூபாய் மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து, ஏ.டி.எம்., மைய கண்காணிப்பு கேமரா பதிவுகள், ஆய்வு செய்யப்பட்டன. அதில், 17ம் தேதி மாலை ஏ.டி.எம்., மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் இருவர், ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, 1.50 லட்சம் ரூபாயை, 'டெபாசிட்' மிஷினில் இருந்து எடுத்து சென்றது பதிவாகி இருந்தது.

அதேபோல், விருகம்பாக்கம், சின்மயா நகரில் உள்ள, எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., மையத்தில், இவர்கள், 50, ஆயிரம் ரூபாய் திருடியது தெரிய வந்தது.மேலும், தரமணி பிரதான சாலையில், எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., மையத்தில், நேற்று முன்தினம், 7 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. சில மணி நேரத்திற்குபின், வேளச்சேரியில் உள்ள, எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்.,மிலும், 5 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், தி.நகர், வளசரவாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, தரமணி என பகுதியில் உள்ள, ஏ.டி.எம்., மிஷின்களில் கைவரிசையை காட்டியதாக பல்வேறு இடங்களிலிருந்தும் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக எஸ்.பி.ஐ., அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். தமிழகம் முழுவதும் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில், மற்ற மாநிலங்களிலும், இதேபோன்று ஏ.டி.எம்., கொள்ளை நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வேறு மாநிலத்தவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பணம் எடுக்க தடை
இந்த கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., மையங்களில்,உள்ள பணம் டிபாசிட் செய்யும் இயந்திரங்களில் பணம் எடுக்க தடை செய்யப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE