புதுடில்லி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமுல் காங்., - எம்.பி., நஸ்ரத் ஜஹான் ருஹி, தன்திருமணம் தொடர்பாக தவறான தகவலை வேட்பு மனுவில் தெரிவித்துள்ளதை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பா.ஜ., - எம்.பி., வலியுறுத்தி உள்ளார்.
திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த லோக்சபா எம்.பி., நஸ்ரத் ஜஹான் ருஹி. இவர் மேற்கு
வங்கத்தில் பிரபலமான நடிகை. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'எனக்கும், நிக்கில் ஜெயின் என்பவருக்கும் வெளிநாட்டில் வைத்து திருமணம் நடந்தது. அதை இந்தியாவில் பதிவு செய்யவில்லை.தற்போது நாங்கள் பிரிந்துவிட்டோம். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாக தான் கருதப்படும். எனவே அதற்கு விவாகரத்து தேவையில்லை' எனக் கூறினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உத்தர பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ., - எம்.பி., சங்கமித்ர மவுரியா, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிஉள்ளார்.
அதன் விபரம்:
நஸ்ரத் ஜஹான் லோக்சபா தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில்,
தன் கணவர் பெயர், நிக்கில் ஜெயின் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர், பதவிப் பிரமாணம் ஏற்கையில் தன் பெயரை, நஸ்ரத் ஜஹான் ருஹி ஜெயின் என தெரிவித்தார்.
இப்படி இருக்கையில், தன் திருமணம் குறித்து நஸ்ரத் தெரிவிக்கும் கருத்து,
முன்னுக்கு பின் முரணாக உள்ளது. தவறான தகவலை தெரிவித்துள்ள அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.