முதல்வர் ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனை வழங்க, ஐந்து பேர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி பேசும் தி.மு.க., அரசு, இந்த குழுவில் மூன்று பிராமணர்களை நியமித்திருப்பது சரியா என்பது குறித்து விமர்சனம் எழுந்து உள்ளது.
அதன் விபரம்:
ஸ்ரீராம் சேஷாத்ரி, ஆடிட்டர்:
'திராவிட இயக்கத்தின் வழி வந்தவர்கள் நாங்கள். ஒரு நாளும் பிராமணர்களையும், பிராமண சித்தாந்தத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்' எனக்கூறி வருபவர்கள், இன்றைக்கு தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த, உலக அளவில் புகழ்பெற்ற பொருளாதார வல்லுனர்கள் இடம் பெற்ற குழுவை அமைத்திருக்கின்றனர். அந்தக் குழுவில் இடம் பெற்று இருப்போரில், மூவர் பிரமாணர்கள். ஆக, இதற்கெல்லாம் மட்டும் பிராமணர்கள் வேண்டுமா என்ற, கேள்வி எழுகிறது.சமூக நீதி பேசக்கூடிய தி.மு.க., ஆட்சியில் தான் இப்படி நடக்கிறது. அவர்களுக்கு வேண்டும் என்றால், தேர்தலுக்காக பீஹார் பிராமணர் பிரஷாந்த் கிஷோரை அழைத்து வருவர்.

ஆட்சிக்கு வந்ததும், பொருளாதார யோசனை வேண்டும் என்றதும், பிராமணர்களையே தேடிப் போவர். இது தான், திராவிட இயக்க சிந்தனை.தமிழகத்தை பற்றி நன்றாகத் தெரிந்த ஒரு பொருளாதார வல்லுனர் கூட, அவர்களுக்கு ஆலோசனை சொல்ல கிடைக்கவில்லை. பொருளாதாரத்தில் மேம்பட்ட சிந்தனைகளும், யோசனைகளும் உடைய எத்தனையோ, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தமிழக அரசிலேயே இருக்கின்றனர். அவர்களில் ஒருவரையும், இந்த அரசு நம்பத் தயாரில்லை. இந்தக் குழுவில் இருக்கும் பொருளாதார வல்லுனர்களுக்கு இடையே, மாறுபட்ட சிந்தனைகள் உள்ளன. அவர்கள் ஒன்றுபட்டு, எப்படி அரசுக்கு ஆலோசனை சொல்வர் என்பதும் கேள்விக்குறி.
ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியில் இருந்த போதும், எதிர்க்கட்சியாக இருந்த போதும், தமிழகத்தில் தொழில் செய்ய வந்தவர்களுக்கு, பல வழிகளிலும் இடைஞ்சல் கொடுத்துள்ளனர். அதனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்கும் சூழலில், தமிழகத்தில் தொழில் துவங்க முன்வருவதற்கு தொழில் அதிபர்கள் அச்சப்படுகின்றனர். போட்ட முதலீட்டை எடுக்க முடியுமா என்ற அச்சம் துவக்கத்திலேயே இருப்பதால், அவர்கள் தமிழகம் தவிர்த்து, வேறு இடங்களில் தான் முதலீடு செய்ய விருப்பமாக இருக்கின்றனர்.
அதோடு, தமிழகத்தின் கடன் சுமை, 6 லட்சம் கோடி ரூபாய்.இந்நிலையில், பொருளாதாரத்தை மேம்படுத்த, உலகளாவிய நிபுணத்துவம் பெற்ற வல்லுனர் குழுவை அமைத்திருக்கிறோம் என்று படம் போட்டு காட்டுவதன் மூலம், தொழில் செய்ய நம்பிக்கையோடு, தமிழகம் நோக்கி தொழில் அதிபர்கள் வருவர் என்ற எண்ணத்தில் கூட, இந்தக் குழு அமைக்கப்பட்டு இருக்கலாம். ஏற்கனவே, இதே போலவே பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கும், ஐந்து பேர் குழுவுக்கும் இடையே, நிறைய முரண்பாடுகள் உருவாகும்.ஏனென்றால் ஜெயரஞ்சன், ஐந்து பேர் குழுவில் இருக்கும் சிலரை, 'பொருளாதாரமே தெரியாதவர்' என, கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
ரமேஷ் சேதுராமன், தொழில் துறை ஆலோசகர்:
தி.மு.க., என்றாலே அப்படித் தான். பேச்சுக்கும், செயலுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அவர்கள் பிராமணர்களை திட்டுவர்; ஆனால், ஆடிட்டராக, வழக்கறிஞராக, ஒரு பிராமணரையே வைத்துக் கொள்வர்.இது தான், கருணாநிதி காலத்தில் இருந்தே பின்பற்றப்படும் நடைமுறை. அதைத்தான், அவரது புதல்வரும் தொடருகிறார்.பொருளாதார ஆலோசனை கூற, ஐந்து பேர் குழுவை அமைத்திருக்கும் தி.மு.க., அரசு, திராவிட இயக்க சிந்தனை உள்ளவர்கள் எவருக்கும், பொருளாதாரம் தெரியாது என்பதை ஒப்புக் கொள்கிறதா? அப்படியென்றால், ஜெயரஞ்சன் யார்; அவர் தலைமையிலான குழு, கொடுக்கும் பொருளாதார கருத்துகளை, அரசு ஏற்க போகிறதா இல்லையா?தமிழகத்தில் பொருளாதாரம் படுபாதாளத்தில் கிடக்கிறது. அதை துாக்கி நிறுத்தும், எந்த விஷயத்தையும் செய்ய, தி.மு.க., அரசுக்கு தெரியாது.
பொருளாதார வீழ்ச்சியை மறைக்க, இப்படிப்பட்ட குழுக்களை அமைத்து 'சீன்' போடுகின்றனர். அவர்கள் செய்யும் எல்லாமே வேடிக்கையாக இருக்கிறது.இந்திய அரசுக்கு தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்து, ஆலோசனை சொன்னவர்,ரகுராம் ராஜன். அதேபோல,அரவிந்த் சுப்பிரமணியனும். இவர்கள் ஆலோசகர்களாக இருந்த போது தான், இந்திய பொருளாதாரம் சரிவடைந்தது.பொருளாதார சரிவை சரி செய்ய முடியாத இவர்கள், உடனே, வெளிநாட்டுக்கு போய் விட்டனர். பொருளாதாரத்தை சீர்குலைத்த இந்த ஓடுகாலிகள், இப்போது தமிழக அரசுக்கு ஆலோசனை சொல்ல வருகின்றனர்.இந்திய அரசுக்கே, பொருளாதார ஆலோசகர்களாக இருந்தவர்கள், இன்று ஒரு மாநிலத்துக்கு பொருளாதார ஆலோசனை கூறும் குழுவில் உறுப்பினராக இணைவது, அவர்களுக்கான தகுதி இறக்கம் என்பது கூட தெரியாமல் தான், அவர்கள் தமிழகத்துக்கு வருகின்றனர்.அதனால், அந்தக் குழு பெரிதாக எதையும் செய்துவிடப் போவதில்லை. அவர்களுக்கு செலவழிக்கும் அரசுத் தொகை வீணாகப் போகிறது.
எஸ்.எஸ்.ஸ்ரீராம், பொருளாதார ஆலோசகர்:
பிராமணர்கள் பற்றி தி.மு.க., சொல்லிக் கொண்டிருந்தது எல்லாம் வெற்று பிரசாரம் என்பது தொடர்ந்து வெளிச்சத்துக்கு வருகிறது.தமிழக அரசுக்கு பொருளாதார வழிகாட்டல் செய்ய ஐந்து பேர் குழு அமைத்துள்ளனர். அதில், மூவர் பிராமணர்கள் என்றால், இது தான் சமூக நீதியா என்ற கேள்வி எழுகிறது. மொத்தத்தில் தி.மு.க.,வின் சாயம், பிராமண துவேஷத்திலும் வெளுத்து விட்டது.உலக அளவில் உயர்ந்த இடத்துக்கு சென்று, வெற்றியடைந்து, புகழ் அடையும் பிராமணர்கள் என்றால், அவர்களை உடனே போற்ற துவங்கி விடும் தி.மு.க., அவர்களை கூப்பிட்டு, தங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ளும். அப்படித்தான், ஸ்ரீகாந்த் மற்றும் விஸ்வநாதன் ஆனந்தை அவர்கள் மதிப்பது.
அப்படிப்பட்டவர்களை பிராமணர்களாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். உடனே, அவர்களை திராவிடர்கள், தமிழர்கள் என்று சொல்லி விடுவர்.ஐந்து பேர் குழுவில் இருப்பவர்கள், அறிவார்ந்த பொருளாதார மேதைகள் என எடுத்துக் கொண்டால், உங்களுக்கு பொருளாதார அறிவைச் சொல்ல, கூடவே இருக்கும் ஒரு திராவிடனால் கூடமுடியாதா? அந்தளவுக்கு அறிவு பஞ்சம் இருப்பவர்கள் தான், கூடவே இருக்கும் திராவிடர்களா? இதெல்லாம் நிஜம் என்றால், உங்களுக்கு பிராமணர்களைக் கண்டால் மட்டும், ஏன் இளக்காரமாக இருக்கிறது?ஐந்து பேர் குழுவில் இருப்போர், இலவசங்களுக்கு எதிரானவர்கள்.
இங்கே இருப்பவர்கள் இலவசத்தை வைத்துத் தான் ஆட்சி என்னும் வண்டியை ஓட்டுகின்றனர். அதனால், ஐந்து பேர் குழு அளிக்கும் பரிந்துரைகளை அரசு ஏற்குமா என தெரிய வில்லை.அதுமட்டுமல்ல, இரண்டு பொருளாதார அறிஞர்கள் ஒன்று சேர்ந்தாலே, பல கருத்துகளை பல கோணங்களில் வெளிப்படுத்துவர். இங்கே பல பொருளாதார அறிஞர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே, ஜெயரஞ்சன் தலைமையிலும் ஒரு குழு இருக்கிறது. இதெல்லாம் எத்தனை கருத்துகளைச் சொல்லுமோ... அதெல்லாம் ஒருங்கிணைந்து வருமா என்பதெல்லாம், சந்தேகமாகத் தான் இருக்கிறது. இதையெல்லாம் கடந்து, தமிழகத்துக்கு தரமான பொருளாதார ஆலோசனைகளை, அந்தக் குழுக்கள் கொடுக்குமானால் வரவேற்கலாம்.
-- நமது நிருபர் -