கோவை:கோவையில் கல்லுாரி மாணவிகளுடன் பழகி புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த வாலிபர் மற்றும் அவரது தாய் கைது செய்யப்பட்ட நிலையில், வாலிபரின் அடாவடி 'வீடியோ'க்கள் வெளியாகி உள்ளன.
கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்த 19வது மாணவி, தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் கல்லுாரி படிப்பை பாதியில் கைவிட்ட கேசவகுமார்(எ) விஜய சேதுபதி,24 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின், இருவரும் நெருங்கி பழகியதுடன், போட்டோ எடுத்து கொண்டனர்.அவ்வப்போது மாணவியிடம் குடும்ப கஷ்டத்தை சொல்லி வாலிபர் பணம், நகைகளை பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் மாணவி பணம் கொடுப்பதை நிறுத்தியபோது, வாலிபரின் உண்மையான சுயரூபம் தெரிந்தது.
பணம் கொடுக்கவில்லை என்றால் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டினார். இதன் பின்னணியில், வாலிபரின் தாய் மற்றும் ஒரு கும்பலே உடந்தையாக இருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்த மாணவி, தற்கொலை செய்து கொண்டார்.சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, கேசவகுமார் மற்றும் அவரது தாய் மங்கயர்க்கரசி, 46 ஆகியோரை கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது கேசவகுமாரின் சில 'அடாவடி' வீடியோக்கள் வெளியாகி உள்ளன.அந்த வீடியோக்களில், கல்லுாரி மாணவர்கள் சிலரை ஒரு அறையில் அடைத்து வைத்து கும்பலாக சேர்ந்து தாக்குவதும், அவர்கள் காதலிக்கும் மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை கேட்டு மிரட்டுவதும் பதிவாகியுள்ளது. இவர்கள் ஒரு பெரிய கும்பலாக செயல்பட்டு வந்ததும், இந்த கும்பலிடம் பல்வேறு கல்லுாரி மாணவிகள் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
மேலும், பெரிய பட்டா கத்தியுடன் ரோட்டில் வலம் வருவது, கல்லுாரி மாணவர்களை ரோட்டில் கும்பலாக தாக்குவது போன்ற வீடியோ பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. கேசவகுமார், ஏற்கனவே தான் இரண்டு முறை சிறைக்கு சென்று வந்ததாகவும், போலீசில் புகார் அளித்தால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும், கல்லுாரி மாணவியின் பெற்றோரை மிரட்டி உள்ளார்.இதன்பின் தான் பயத்தில் அந்த மாணவி தற்கொலை செய்தார். தற்போது வெளியாகியுள்ள வாலிபரின் வீடியோக்கள் அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE