சென்னை:''ஒன்றியம் என்ற வார்த்தையை பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற் காகத் தான் அதை பயன்படுத்துகிறோம்; பயன்படுத்துவோம்; பயன்படுத்திக் கொண்டே இருப் போம்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நடந்த விவாதம்:சட்டசபை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்:
திடீரென மத்திய அரசை, ஒன்றிய அரசு என்கிறீர்கள். ஆங்கிலத்தில் சில வார்த்தைகளுக்கு அப்படியே பொருள் எடுக்கக் கூடாது. ஆங்கிலத்தில், 'டேக் யுவர் சேர்' என்றால், 'இருக்கையை எடுத்துக் கொள்ளுங்கள்' என அர்த்தம் அல்ல; 'இருக்கையில் அமருங்கள்' என பொருள் படும். இடத்துக்கேற்ப பொருள் மாறுபடும்.
திடீரென ஒன்றிய அரசு என்று கூறும்படி, யார் சொன்னது என்று தெரியவில்லை. சொல்லில் குற்றம் இல்லை. ஆனால் எந்த நோக்கத்தோடு, எந்த பொருளோடு சொல்லப்படுகிறது என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்:
'ஒன்றிய அரசு' என சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கின்றனர். அது உள்ளபடியே முழுக்க முழுக்க தவறு. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.
நம் அரசியலமைப்பு சட்டத்தின் முதல் வரி, 'இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்' என்று தான் உள்ளது. அதைத் தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை. ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல. மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பது தான் அதன் பொருள்.
இன்னும் சிலர், அண்ணாதுரை சொல்லாததை, கருணாநிதி சொல்லாததை, நாங்கள் சொல்லி வருவதாக குறிப்பிட்டு, அதை விமர்சனம் செய்கின்றனர்.தி.மு.க.,வின், 1957ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், 'இந்திய யூனியன்' என்று தான் அடையாளம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1963 ஜன., 25ல், ராஜ்யசபாவில் அண்ணாதுரை பேசுகையில், 'அரசின் இறைமை என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன; அரசியல் இறையாண்மையானது, பொதுமக்களிடம் நிலைத்துள்ளது என, அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது.
'சட்டம் சார்ந்த இறையாண்மையானது, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும், அதன் அங்கங்களுக்கும் இடையே, அதாவது மாநிலங்களுக்கும் பிரித்து தரப்பட்டுள்ளது' என்று தான் பேசியிருக்கிறார். 'சமஷ்டி' என்ற வார்த்தையை, ம.பொ.சி., பயன்படுத்தி உள்ளார். 'வெளியேறுக மிகுதியான அதிகாரக் குவிப்பு; வருக உண்மையான கூட்டாட்சி' என, மூதறிஞர் ராஜாஜி எழுதியிருக்கிறார்.
எனவே, ஒன்றியம் என்ற வார்த்தையை பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத் தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம்; பயன்படுத்துவோம்; பயன்படுத்திக் கொண்டே இருப்போம்.
நயினார் நாகேந்திரன்:
உங்கள் விளக்கத்தை ஏற்கிறேன். மாநிலங்களில் இருந்து இந்தியா வரவில்லை. இந்தியாவில் இருந்து தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவிற்கு தான் சுதந்திரம் பெறப்பட்டது.
அமைச்சர் பொன்முடி:
தவறாகக் கூறுகிறீர்கள். இந்தியா என்பது கூட்டாட்சி தான். மாநிலங்களின் கூட்டாட்சி. இந்தியா வில் இருந்து மாநிலங்கள் பிரியவில்லை.
சபாநாயகர் அப்பாவு:
முதல்வர் விளக்கமாகக் கூறிவிட்டார். இத்துடன் இந்த விவாதம் போதும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE