சென்னை :தகவல் தொழில்நுட்ப புதிய விதிகளை எதிர்த்து, 'டிஜிட்டல் நியூஸ்' வெளியீட்டாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அமைச்சர் அறிவித்தார். அதன்பின், இந்த விதிகள் அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டது.
ஆன்லைனில் வெளியாகும் செய்தி உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்த, விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகள், ஆன்லைன் வெளியீட்டாளர்களை கட்டுப்படுத்தும்.
உள்ளடக்கம் குறித்து வரும் புகார்களை விசாரிக்க, குழு அமைக்கப்பட்டுள்ளது.'சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதமான புதிய விதிகள், கருத்து சுதந்திரத்துக்கு எதிராக உள்ளன; ரகசிய உரிமையை, அரசியலமைப்பு சட்டத்தை, தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறுவதாக உள்ளது' என, உயர் நீதிமன்றத்தில், கர்நாடக இசை கலைஞரான டி.எம்.கிருஷ்ணா மனு தாக்கல் செய்தார்.
புதிய விதிகளை எதிர்த்து, டிஜிட்டல் நியூஸ் வெளியீட்டாளர்கள் சங்கம் மற்றும் பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். மனுவில், 'புதிய விதிகளால், எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே, சில விதிகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார்.மனுவுக்கு, 15 நாட்களில் பதில் அளிக்க, மத்திய அரசுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டு, ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவுடன் இதையும் சேர்த்து, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தது.மேலும், 'மனுதாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கருதுவதற்கு, போதிய அடிப்படை உள்ளது என, தெரிவிக்கப்பட்டது. தற்போது வரை எதிர் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஒட்டுமொத்த உத்தரவு பிறப்பிக்க முடியாது. 'குறிப்பிட்ட விதிகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்தால், இடைக்கால நிவாரணம் கோரி அணுகலாம்' என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.