ரிஷிவந்தியம்,-ரிஷிவந்தியம் அருகே வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதால் இருவர் மீது விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள் பகண்டைகூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ரிஷிவந்தியம் அடுத்த சீர்ப்பாதநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் எழிலரசன், 26; டிரைவர். பெரியக்கொள்ளியூரைச் சேர்ந்தவர் சீனுவாசன் மகன் முருகன். இருவரும் கடந்த 18ம் தேதி புஷ்பகிரி குளத்திற்கு அருகே மது அருந்தினர்.சிறிதுநேரத்திற்கு பிறகு, எழிலசரன் மதுபோதையில் கீழே விழுந்து கிடப்பதாக அவரது மாமனார் சங்கரிடம், முருகன் தெரிவித்துள்ளார்.உடன், எழிலரசனை மீட்டு சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.புகாரின் பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப்பதிந்தனர்.இந்நிலையில் தனது கணவர் எழிலரசன் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவருடன் மது அருந்திய முருகன் மற்றும் தமிழழகனை ஆகியோரை விசாரிக்க வேண்டும் என எழிலரசன் மனைவி அபிநயா, தாய் முத்தம்மாள் மற்றும் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் பகண்டைகூட்ரோடு மும்முனை சந்திப்பில் நேற்று மதியம் 1:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த திருக்கோவிலுார் டி.எஸ்.பி., திருமேனி, இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அசோக் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில், மதியம் 2:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE