சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வென்றது நியூசிலாந்து. பைனலில் இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனல் சவுத்தாம்ப்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 217, நியூசிலாந்து 249 ரன்கள் எடுத்தன. முதல் இன்னிங்சில் 32 ரன்கள் பின் தங்கிய இந்திய அணி, ஐந்தாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து, 32 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கோஹ்லி (8), புஜாரா (12) அவுட்டாகாமல் இருந்தனர்.
கோஹ்லி 'அவுட்'
பைனலின் முதல், நான்காவது நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. இதனால் வெற்றியாளரை முடிவு செய்யும் வகையில் ஆறாவது நாளான நேற்று, 'ரிசர்வ் டேயில்' போட்டி நடந்தது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி போட்டியை இந்தியா 'டிரா' செய்யும் என எதிர்பார்க்கப் பட்டது. மாறாக இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டனர். ஜேமிசன் 'வேகத்தில்' கோஹ்லி (13), புஜாரா (15) அவுட்டாகினர்.
தேவையா ரிஷாப்
ரிஷாப் பன்ட், ரகானே இணைந்து அணியை மீட்பர் என ரசிகர்கள் நம்பினர். ரிஷாப் அவ்வப்போது பவுண்டரிகள் அடிக்க இந்திய அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. இந்நிலையில் பவுல்ட் பந்தில் ரகானே (15), வாக்னர் 'வேகத்தில்' ஜடேஜா (16)வெளியேறினார். அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் (41), பவுல்ட் பந்தை தேவையற்ற முறையில் அடித்து நிகோல்சிடம் 'கேட்ச்' கொடுத்தார்.
இதே ஓவரில் அஷ்வினையும் (7) அவுட்டாக்க, இந்தியா மீள முடியாத நிலைக்குச் சென்றது. முகமது ஷமி (13) மூன்று பவுண்டரி அடித்த நிலையில் சவுத்தீயிடம் சிக்கினார். கடைசியில் பும்ரா (0) அவுட்டாக, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்னுக்கு சுருண்டது.

எளிய இலக்கு
இரண்டாவது இன்னிங்சில் 53 ஓவரில் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து அணிக்கு டாம் லதாம், கான்வே ஜோடி துவக்கம் கொடுத்தது. அஷ்வின் சுழலில் லதாம் (9), கான்வே (19) சிக்கினர். ராஸ் டெய்லர் 26 ரன்னில் கொடுத்த 'கேட்சை' புஜாராவும், வில்லியம்சன் கொடுத்த வாய்ப்பை பும்ராவும் கோட்டை விட, 'உலக' டெஸ்ட் கோப்பை கைநழுவியது. நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 45.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் (52), ராஸ் டெய்லர் (47) அவுட்டாகாமல் இருந்தனர்.