பெங்களூரு-கொரோனா மூன்றாம் அலை பீதிக்கிடையில், 'டெல்டா பிளஸ்' எனும் உருமாறிய கொரோனா கர்நாடகாவுக்குள் நுழைந்துள்ளது. இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளதால், மாநிலம் முழுதும், அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக ஆங்காங்கே பரிசோதனை நடத்தும்படி சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா முதலாம் அலையை விட, இரண்டாம் அலையால் கர்நாடக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.விரைவில், மூன்றாம் அலை உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும், குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் என்றும் மருத்துவ நிபணர்கள் எச்சரித்துள்ளனர்.நடவடிக்கைஇதற்கிடையில், டெல்டா பிளஸ் எனும் உருமாறிய கொரோனா கர்நாடகாவுக்குள் நுழைந்துள்ளது. பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களில் தலா, ஒருவருக்கு இந்த வகை தொற்று ஏற்பட்டுள்ளது.மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா உட்பட நாட்டின் சில மாநிலங்களில் 'டெல்டா பிளஸ்' கொரோனா அதி வேகமாக பரவுகிறது.
கர்நாடகாவிலும் வேகமாக பரவும் ஆபத்து நிலவுகிறது.இது குறித்து, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர், மைசூரில் நேற்று கூறியதாவது:உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனா கர்நாடகாவுக்குள் நுழைந்திருப்பது உண்மை தான். மாநிலம் முழுதும், அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக ஆங்காங்கே, 5 சதவீதம் பேருக்கு பரிசோதனை நடத்தும்படி சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், பொது மக்கள் அலட்சியமாக இருக்காமல், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.இருவருக்கு புதிய வகை ஏற்பட்டுள்ளதால், அவர்களை தனிமைப்படுத்தி, தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்.
அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில், விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆலோசனைஇதற்கிடையில், பெங்களூரிலும் ஒருவருக்கு புதிய வகை தொற்று ஏற்பட்டிருப்பதால், மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா, சுகாதார பிரிவு அதிகாரிகளுடன், நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.பின், அவர் கூறியதாவது:டெல்டா பிளஸ் எனும் உருமாறிய கொரோனா பரவல் ஆரம்பித்துள்ளதால், மாநகராட்சி எல்லைக்குள், 'ஜினோம் சீக்வென்சிங்' எனும் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பதற்கான பரிசோதனை நடத்தப்படும்.

கொரோனா தொற்று பல வகைகளில் உருமாறுகின்றன. இந்நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து, கர்நாடகாவுக்குள் நுழைபவர்களுக்கு, கொரோனா 'நெகடிவ்' சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவது குறித்து, சுகாதார துறையிடம் கோரியுள்ளோம்.அவர்கள் அனுமதியளித்தவுடன் கட்டாயமாக்கப்படும். தேவைப்பட்டால் மாநகராட்சி சார்பிலும் பரிசோதனை நடத்தப்படும்.சாதாரண கொரோனாவுக்கும், உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அதற்கான சிகிச்சை முறை என்ன என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.