சென்னை: 'தமிழகத்தில் தமிழர்களை தவிர மற்ற மாநிலத்தவர்களுக்கு எந்த அடிப்படையில் வேலை தரப்பட்டது என்பது பற்றி விரிவான ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தியாகராஜன் சட்டசபையில் கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்தியா ஒரு தேசம். எந்த மாநிலத்தில் பிறந்தாலும் வேறு எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் போய் கல்வி கற்க முடியும்; வேலை செய்ய முடியும்; பணம் சம்பாதிக்க முடியும்; வாழ முடியும். இது தான் இந்திய திருநாட்டின் தனிச் சிறப்பு.இதில் 'என் மாநிலம் என் மக்கள் எங்கள் மாநில வேலைவாய்ப்புகள்; எங்கள் மாநில இளைஞர்களுக்கு மட்டுமே போய்ச் சேர வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதோ பேசுவதோ குறுங்குழு வாதம் அன்றி வேறில்லை. அது ஒருவகையில் தற்காப்பு வாதம்' என்றும் தெரிவிக்கின்றனர் சமூகவியல் ஆய்வாளர்கள்.
தமிழகத்துக்கு பிற மாநில இளைஞர்கள் வருவது போல் நம் இளைஞர்களும் பிற மாநிலங்களுக்குப் போய் பணியாற்றுகின்றனர்.அங்கேயுள்ள மாநில அரசுப் பணிகளில் அவர்கள் தொடர்ந்து மிளிர்ந்து வருகின்றனர்.
இந்தியா மட்டுமல்ல உலகமே இன்று விரிந்துள்ள பெரும் சந்தை. இந்திய வம்சாவளியில் வந்துள்ள கமலா ஹாரிஸ் கூட அமெரிக்காவின் துணை அதிபர் ஆக முடிந்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது. நாடுகளுக்கு உள்ளேயே தற்காப்பு வாதம் இல்லாதபோது மாநிலங்களுக்கு இடையே இத்தகைய அணுகுமுறையை கடைப்பிடிப்பதில் என்ன அர்த்தமுள்ளது என்று கேள்வி எழுப்பப்படுகிறது.இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே நம் பணியாளர் தேர்விலும் நியமனத்திலும் ஓர் ஒழுங்கு பின்பற்றப்படுகிறது.

அதன்படி 1955ல் உருவாக்கப்பட்ட குடிமைப் பணிகள் விதிகளில் உள்ள சிறப்புப் பிரிவுகளின் அடிப்படையிலேயே பிற மாநில பணியாளர்கள் தேர்வும் நியமனமும் நடைபெற்று வருகிறது. அதேபோல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டம் 2016 உள்ள பிரிவுகள் 20 மற்றும் 21 இந்த விஷயத்தை மேலும் தெளிவுபடுத்துகின்றன. பிரிவு 20ன்படி பத்தாம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் பொது அறிவில் 35 மதிப்பெண் பெற்றிருப்பதே அடிப்படையாக கொள்ளப்படுகிறது.
மேலும் 'பணியில் உள்ள நபர்கள் தமிழில் போதிய அறிவின்றி அவருடைய தமிழ் அறிவானது தமிழில் இந்த உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள தேர்வுகளை எழுதுவது குறித்த தரநிலையில் இல்லை என்றால் அந்த தேர்வுகளை தெலுங்கு மலையாளம் கன்னடம் உருது அல்லது ஹிந்தி போன்ற ஏதாவது ஒரு மொழிகளில் எழுதலாம்.பணி மாறுதலினால் அல்லது பதவி உயர்வினால் அவர்களின் பணி அமர்த்தத்திற்கு தமிழில் தேர்ச்சி பெற அவசியம் இல்லை' என்கிறது அரசுப் பணியாளர் விதிகள்.இதே பிரிவில் பதவியில் நியமிக்கப்படுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள இன்னொரு விதி சுவாரசியமானது.
மாநிலத்தில் பதவி ஒன்றிற்கு பணியமர்த்தம் செய்யப்படுவதற்கான நபர் ஒருவர் அல்லது இந்தியக் குடிமகன் ஒருவர் நேபாள குடிமகனாக பூடானின் குடிமகன் ஒருவராக இந்தியாவில் நிரந்தரமாக குடியேற வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் பாகிஸ்தான் பர்மா இலங்கை அல்லது கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளாகிய கென்யா உகாண்டா ஐக்கிய குடியரசாகிய தான்சானியா சாம்பியா மாளவி ஸெய்ரா மற்றும் எத்தியோபியாவில் இருந்து வந்த இந்திய வம்சாவளியினராக இருக்க வேண்டும்.
அதாவது பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்காக தகுதியோடு பணிசெய்ய வரும்போது அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள விதிகள் இவை.வெளிமாநிலத்தவர்கள் அன்னியர்களல்லர்; அவர்களும் நம்மவர்களே. நம்மவர்களும் வேறு மாநிலத்தில் வேற்று நபர்கள் அல்லர்; அங்கே அவர்களும் அம்மாநிலத்துக்கு வளம் சேர்ப்பவர்களே. இந்த ஒற்றுமை சிந்தனை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்த ஆட்சியாளர்களுக்கு இருந்துள்ளது.
அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு மாநிலத்தின் பணியாளர் விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.இதனைச் சீர்திருத்தம் செய்கிறேன் என்று இறங்குவது தேசிய நலனுக்கும் இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் வேட்டு வைப்பது போன்றதாகும் என்று கருதுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.