கை கட்டி வேலை செய்ய பிடிக்காது: ஆபாச மதன் போலீசாரிடம் வாக்குமூலம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கை கட்டி வேலை செய்ய பிடிக்காது: 'ஆபாச மதன்' போலீசாரிடம் வாக்குமூலம்

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (36)
Share
சென்னை--'எனக்கும், என் மனைவிக்கும் யாரிடமும் கை கட்டி வேலை செய்ய பிடிக்காது. அதனால், ஆபாச பேச்சு வாயிலாக கோடிகளை குவித்தோம்' என, 'பப்ஜி' மதன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.சேலத்தைச் சேர்ந்தவர் மதன், 29. இவரது மனைவி கிருத்திகா, 25. இருவரும், தடை செய்யப்பட்ட பப்ஜி எனும் 'ஆன்லைன்' விளையாட்டை, ஆபாச பேச்சுகளுடன், தங்களின், 'யுடியூப்' சேனல்களில் நேரடி

சென்னை--'எனக்கும், என் மனைவிக்கும் யாரிடமும் கை கட்டி வேலை செய்ய பிடிக்காது. அதனால், ஆபாச பேச்சு வாயிலாக கோடிகளை குவித்தோம்' என, 'பப்ஜி' மதன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.



latest tamil news


சேலத்தைச் சேர்ந்தவர் மதன், 29. இவரது மனைவி கிருத்திகா, 25. இருவரும், தடை செய்யப்பட்ட பப்ஜி எனும் 'ஆன்லைன்' விளையாட்டை, ஆபாச பேச்சுகளுடன், தங்களின், 'யுடியூப்' சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்து, பல கோடிகளை குவித்தனர். இவர்கள் மீது 300க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்தனர்.'செட்' ஆகாதுசென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மதன், கிருத்திகா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில், மதனை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து, நேற்று மீண்டும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர்.

போலீசாரிடம் மதன் அளித்துள்ள வாக்குமூலம்:நானும், என் மனைவியும் பொறியியல் பட்டதாரிகள். காதலித்து திருமணம் செய்தோம். எங்களுக்கு எட்டு மாத குழந்தை உள்ளது. எனக்கும், கிருத்திகாவுக்கும் யாரிடமும் கை கட்டி வேலை செய்ய பிடிக்காது. காலை 10:00 மணிக்கு போய், மாலை 5:00 மணிக்கு வீடு திரும்பும் வேலையெல்லாம் நமக்கு, 'செட்' ஆகாது.சொந்தமாக தொழில் செய்ய வேண்டும். கோடிகளை குவிக்க வேண்டும். அதன் வாயிலாக ஜாலியாக வாழ வேண்டும். இது தான் எங்கள் பாலிசி. எனக்கு அறிவுரை சொன்னால் சுத்தமாகவே பிடிக்காது. நானும் யாருக்கும் அறிவுரை சொல்ல மாட்டேன்.சென்னை அம்பத்துாரில் ஓட்டல் துவங்கினேன்; படுத்துவிட்டது; தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதனால் என் மனைவி தான், யுடியூப் சேனல் துவங்கலாம் என கூறினார்.அதிலும் தனித்து தெரிய வேண்டும் என முடிவு செய்தேன். பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டிற்கு சிறுவர்கள், இளைஞர்கள், பெண்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்தேன்.


அடிமைப்படுத்தினோம்

அதற்காக, அதிநவீன தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி, பப்ஜி விளையாட்டிற்கு ஆபாசமாக பின்னணி குரல் கொடுத்து, யுடியூப் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்தோம். பெண்களை கவர, என் மனைவியும் ஆபாசமாக பேசினார்.எங்களுக்கு பின்னால், எட்டு லட்சம் பேர் திரண்டனர். இவர்களை எங்களின் ஆபாச பேச்சுக்கு அடிமைப்படுத்தினோம். இதன் வாயிலாக கோடிகளை குவித்தோம். இரண்டு 'ஆடி' கார்கள், சொகுசு பங்களாக்கள் வாங்கினோம். எங்கள் வயதை மீறி வருமானத்தை குவித்தோம்.குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக வேண்டும் என்ற இலக்குடன், தினமும் 18 மணி நேரம் யுடியூப் சேனல்களுக்காக உழைத்தோம்.சில பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, எங்களை பற்றி புகழ்ந்து பேசி, 'வீடியோ' வெளியிட வைத்தோம்.ஏழைகளுக்கு உதவி செய்வது போல நடித்து, சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என, பலரிடம், பல லட்சம் ரூபாய் வரை குவித்தோம். பணம் தான் எங்களின் பிரதான நோக்கம். அதற்காக நாங்கள் கையில் எடுத்த ஆயுதம் தான் ஆபாச பேச்சு.இவ்வாறு, மதன் வாக்குமூலம் அளித்துள்ளார். மதனிடம் விசாரணை முடிந்த நிலையில் அவர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் வரும் ஜூலை 7 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X