கடந்த ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.20,000 கோடி இழப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடந்த ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.20,000 கோடி இழப்பு

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (74)
Share
சென்னை: தமிழக மின் வாரியம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளில், கடந்த ஆட்சியில் 2018 - 19ம் ஆண்டில் மட்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டசபையில், 2017 - 18 மற்றும் 2018 - 19ம் ஆண்டு, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளில், மத்திய தணிக்கை துறை நடத்திய தணிக்கை
 ஆட்சி,தமிழகம்,  ரூ.20,000 கோடி, இழப்பு

சென்னை: தமிழக மின் வாரியம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளில், கடந்த ஆட்சியில் 2018 - 19ம் ஆண்டில் மட்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில், 2017 - 18 மற்றும் 2018 - 19ம் ஆண்டு, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளில், மத்திய தணிக்கை துறை நடத்திய தணிக்கை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டுள்ள இழப்பு; அதற்கான காரணம் போன்ற விபரங்கள் விவரிக்கப்பட்டு உள்ளன.
அதன் விபரம்:

தமிழகத்தில், 74 அரசு நிறுவனங்கள், ஒரு சட்டமுறைக் கழகம் என மொத்தம், 75 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மொத்த முதலீடு, 1.97 லட்சம் கோடி ரூபாய். இதில், 88.98 சதவீதம், மின் துறை நிறுவனங்களில் உள்ள முதலீடாகும். கடந்த 2018 - 19ம் ஆண்டில், மின் துறை நிறுவனங்கள், 13 ஆயிரத்து, 176 கோடியே, 20 லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன. மின் துறை அல்லாத, தமிழ்நாடு சிமென்ட் நிறுவனம், தமிழ்நாடு கனிம நிறுவனம், தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், 'டைடல் பார்க்' நிறுவனம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் உள்ளிட்ட, 70 பொதுத்துறை நிறுவனங்கள், 2018 - 19ம் ஆண்டில், 3,789.54 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன.
இது தவிர, அரசு துறைகள் சார்பில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது; இயந்திரங்களை பயன்படுத்தாதது; குத்தகை வாடகையை திருத்தாதது; தவறான ஒப்பந்தங்களை வழங்கியது; முறையான திட்டமிடல் இன்றி பயனில்லாமல் இருக்கும் கட்டடங்கள் போன்றவற்றால் ஏற்பட்ட இழப்புகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு துறையிலும் அரசு ஒதுக்கிய நிதி, மானியம் போன்றவை, பயன்பாடின்றி திருப்பி அனுப்பப்பட்ட விபரங்களும் விளக்கப்பட்டுள்ளன. மின் துறையில் ஏற்பட்டுள்ள இழப்புக்கு, மின் கொள்முதல் மற்றும் உற்பத்தி செலவோடு, பணியாளர் மற்றும் நிதி செலவினங்களின் அதிகரிப்பே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மின் துறை நிறுவனங்களில், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் வசதி மேம்பாட்டு நிறுவனம் மட்டுமே, 83.20 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளது. உடன்குடி மின்சக்தி நிறுவனம், எந்த நடவடிக்கையையும் துவக்கவில்லை.


மின் உற்பத்தி இழப்புஅனல் மின் நிலையங்களில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த தரத்தை காட்டிலும், அதிகமான உள்ளுரை வெப்பம் கொண்ட நிலக்கரியை பயன்படுத்தியதால், 2014 - -19ம் காலகட்டத்தில், 2,317 கோடி ரூபாய் மதிப்பிலான, 56.85 லட்சம் டன் நிலக்கரி கூடுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.தரம் குறைந்த நிலக்கரி பயன்படுத்தியதால், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, 2014 - -19ம் காலகட்டத்தில், 171.57 கோடி ரூபாய் மதிப்பிலான மின் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.


ஆறுகள் மாசுமின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிலங்களில் குவிந்துள்ள சாம்பலை, மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி வெளியேற்றவில்லை. கடந்த 2019 மார்ச் நிலவரப்படி, மூன்று அனல் மின் நிலையங்களில், 62.15 மில்லியன் டன் சாம்பல் குவிந்திருந்தது. தொடர்ந்து சாம்பல் அகழியில் சேகரிக்கப்படுவதால், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆறுகளின் நீர் மாசு அடைகிறது.


நிலக்கரி மேலாண்மைநிலக்கரியை இறக்கம் செய்ய, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தனியார் நிலக்கரி முனையத்தை பயன்படுத்தியதால், 41.68 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது. வட சென்னையில் இருந்து, மேட்டூர் வரை, நிலக்கரியை ரயிலில் அனுப்பியதில் போக்குவரத்து இழப்பாக, 58.37 கோடி ரூபாய் ஏற்பட்டுள்ளது. இதற்கு, ஒப்பந்ததாரரை பொறுப்பாக்கவில்லை.மேலும், சரக்கு பெட்டிகளில், அனுமதிக்கப்பட்ட சுமக்கும் திறன் அளவுக்கு, நிலக்கரியை ஏற்ற தவறியதால், பயனற்ற சரக்கு கட்டணமாக, 101.35 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


அதிக தொகைதமிழக மின் துறை, மின்சாரம் கொள்முதல் செய்ய, எட்டு தனியார் மின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தது. இதில், 1 யூனிட் மின்சாரம் 4.91 ரூபாய்க்கு வழங்க, அந்த நிறுவனங்களுடன் சமன் செய்யப்பட்டது.ஆனால், ஒப்புக் கொண்ட கட்டணத்தை விட, கூடுதலான கட்டணம் கொடுத்து, 3,710 கோடி யூனிட் மின்சாரம் வாங்கியதில், 712 கோடி ரூபாய் கட்டணம் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.


ரூ.424 கோடி செலவுதனியார் நிறுவனமான ஜி.எம்.ஆர்., பவர் கார்ப்பரேஷனிடம் இருந்து, 15 ஆண்டுகள் மின் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம், 2014 பிப்ரவரியில் முடிந்தது. இந்த நிலையத்திலிருந்து பெறும் மின்சாரம், அதிக விலையிலானது.ஒப்பந்தத்தை நீட்டிக்கக் கோரி, ஜி.எம்.ஆர்., கோரிக்கை வைத்தது. இதையடுத்து, 2015 பிப்ரவரி வரை ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், 1 யூனிட், 5.42 ரூபாய் வரை, சந்தையில் கொள்முதல் செய்யப்பட்டது.ஆனால், ஜி.எம்.ஆர்., நிறுவனத்திடமிருந்து, 1 யூனிட் மின்சாரம், 12.74 ரூபாய் வீதம், 73.74 கோடி யூனிட் மின்சாரம் வாங்கியதில். 424.43 கோடி ரூபாய் கட்டணம் அதிகமாக செலுத்தப்பட்டு உள்ளது. இந்த வகையில் அரசுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்படுத்தி உள்ளதாக, மத்திய தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X