திருப்பூர்:திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி, முறைகேடாக தங்கிய வங்க தேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், அம்மாபாளையம் ராக்கியா பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்; நகல் எடுக்கும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு வீட்டை, ஏப்., மாதம் ஷிமுல் காஜி, 30, என்பவருக்கு வாடகைக்கு விட்டார். ஆதார் கார்டில் ஈரோடு மாவட்ட முகவரி இருந்தது.அவர், வங்க தேசத்தவர் என பின் தெரிந்தது.
இது குறித்து, ஷிமுல் காஜியிடம் கேட்டபோது, அவருடன் சேர்ந்து, அவரது நண்பர்கள் சைபுல் இஸ்லாம், 40, மன்னன் மோலல், 31, ஆகியோரும் சேர்ந்து, மணிகண்டனிடம் வாக்குவாதம் செய்தனர். அவரை தாக்கி மிரட்டல் விடுத்தனர்.அவர் அளித்த புகார்படி, திருமுருகன்பூண்டி போலீசார் மூவரையும் பிடித்து விசாரித்தனர். வங்க தேசத்தைச் சேர்ந்த மூவரும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பது தெரிந்தது.
கொலை மிரட்டல், சட்டவிரோதமாக தங்கியது உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டனரா, குடும்பத்தினருடன் தங்கியிருந்தனரா என விசாரணை நடக்கிறது.