மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்

Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (27)
Share
தஞ்சாவூர்: 'தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.டெல்டா மாவட்டங்களில் குறுவை, தாளடி மற்றும் சம்பா சாகுபடியின் போது, அறுவடை செய்யப்படும் நெல், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் நிலையங்களில் போதுமான சிமென்ட்
தஞ்சாவூர், மழை, நெல், நெல்மூட்டைகள், விவசாயி

தஞ்சாவூர்: 'தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை, தாளடி மற்றும் சம்பா சாகுபடியின் போது, அறுவடை செய்யப்படும் நெல், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் நிலையங்களில் போதுமான சிமென்ட் தரைத்தள வசதியும், குடோன் வசதியும் இல்லாததால், கொள்முதல் செய்யப்படும் நெல்லை, திறந்த வெளியில் மண் தரையில் குவியலாக கொட்டி வைக்கின்றனர்.சில இடங்களில் மூட்டைகளாக அடுக்கி, தார்ப்பாய் போட்டு மூடி வைக்கின்றனர். இதனால், அவை மழையில் நனைந்து வீணாவது தொடர்கதையாக உள்ளது.


latest tamil news



திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில், இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை, திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. தஞ்சாவூர் அருகே, அன்னப்பன் பேட்டை, சடையார்கோவில், பொன்னாப்பூர் உள்ளிட்ட இடங்களில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன.திருச்சி மாவட்டம் முழுதும், பல கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் கொட்டி வைத்திருந்த 25 டன் நெல்மணிகள் நனைந்து சேதமடைந்தன.

விவசாயிகள் கூறியதாவது: மழை காரணமாக, நெல்லில் ஈரப்பதம் அதிகரிப்பதால், உலர வைத்து, துாசியை அகற்றிய பின் தான் விற்க முடியும். இதற்கு, டன்னுக்கு 4,000 ரூபாய் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டும்.டெல்டா மாவட்ட விவசாயிகள், ஆண்டு தோறும் இந்தப் பிரச்னையை சந்தித்து வருகிறோம். எனவே, தமிழக அரசு இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


latest tamil news




கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறுகையில், 'நாளொன்றுக்கு 900 மூட்டைகள் வரை கொள்முதல் செய்கிறோம். லாரிகள் அதிகம் இயக்கப்படாததால் நெல் மூட்டைகள் தேங்கி, மழை பெய்யும் போது நனைந்து விடுகின்றன,'' என்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X