லண்டன்: பிரிட்டனில் 1976-க்கு பிறகு கடந்த 2020-ல் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக பதிவாகியுள்ளது. இதற்கு கொரோனா பெருந்தொற்று காரணம் என்கின்றனர்.
2020-ல் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் 683,180 குழந்தைகள் பிறந்துள்ளன. 49.5 விநாடிக்கு ஒரு குழந்தை என்ற ரீதியில் பிறந்துள்ளது. அதே சமயம் 689,708 பேர் அதாவது பிறப்பை விட 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். இத்தகவலை பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 1976-க்கு பிறகு தற்போது தான் பிறப்பை விட இறப்பு விகிதம் அதிகத்திருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக பிரிட்டனில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. கோவிடிற்கு முன்பே பிறப்பு விகிதங்கள் 1930-ல் பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட காலத்தை விட குறைவாக இருந்தது. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று இறப்பு எண்ணிக்கையை அதிகரித்ததால் இவ்வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் மக்கள்தொகை மாற்றத்திற்கான மையம், 'கோவிட்டிற்கு முந்தைய காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது அடுத்த 3 ஆண்டுகளும் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரியும்' என கணித்துள்ளது.

மக்கள் தொகை நிலைத்தன்மையை பராமரிக்க பிரிட்டனில் ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தை என்ற அளவில் பிறப்பு விகிதம் தேவை. அதாவது பத்து பெண்களுக்கு 21 குழந்தைகள் தேவை. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஏற்கனவே இது கடந்த ஆண்டு 1.6 ஆகக் குறைந்துவிட்டது. 2023-ல் 1.45 ஆகக் குறையும் என்கின்றனர். மனச்சோர்வு, கஷ்டமான சூழல், பாதுகாப்பின்மை மற்றும் பதட்டம் ஆகியவை குழந்தை பிறப்பு விகிதம் குறைவதற்கு காரணம் என்கின்றனர். மேலும் சம்பாதிப்பதற்கு குழந்தை தடையாக இருக்கும் என்ற மனநிலையும் அங்கு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE