புதுடில்லி: மாநிலங்களின் கையிருப்பில் 1.50 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சில வாரங்களுக்கு முன் புதிய தடுப்பூசிக் கொள்கையை அறிவித்தார். அதன்படி மாநிலங்களுக்கான தடுப்பூசிகளையும் மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்குகிறது. தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசும், 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளும் பெறுகின்றன. மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியான நபர்கள் அனைவருக்கும் நேரடியாக வந்தாலே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் தடுப்பூசிகள் கையிருப்பு குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இதுவரை 30 கோடியே 54 லட்சத்து 32 ஆயிரத்து 450 ‛டோஸ்' கோவிட் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 29 கோடியே 04 லட்சத்து 04 ஆயிரத்து 264 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 1,50,28,186 தடுப்பூசிகள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE