சென்னை: 'சட்டசபை தேர்தலில் குற்றச்சாட்டுக்கு உள்ளான மாவட்ட செயலர்கள் சிலர், தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்' என, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில், அவர் பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில், பெரிய வெற்றியை பெற முடியவில்லை. இருப்பினும், ஆட்சியை பிடித்துள்ளோம். அடுத்த தேர்தலில் இமாலய வெற்றி பெறும் அளவிற்கு, மக்கள் சேவையில் மாவட்ட செயலர்கள் ஈடுபட வேண்டும். எதிர்கட்சியாக நாம் இருந்த போது, எந்த விமர்சனமும் வரவில்லை. ஆளுங்கட்சியாக இருப்பதால், சிறு துரும்பு பிரச்னையையும், பெரிய பூதாகரமாக்கி விமர்சிப்பர். அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது.
சட்டசபை தேர்தலின் போது, சில மாவட்ட செயலர்கள் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். மக்கள் நலனில் அக்கறை காட்டி பணியாற்ற வேண்டும். உங்களுடன் பணியாற்றும் நிர்வாகிகளும், புகாருக்கும், குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் நடந்து கொள்ள வேண்டும்.ஒன்பது மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முழுமையான வெற்றி பெற வேண்டும்.
சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்த தொகுதி பங்கீட்டை நிறைவேற்றி தர முடியாத நிலை ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்து, அவர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து இட பங்கீடு வழங்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் பேசியதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
ஜனவரியில் நகராட்சி தேர்தல்?
'அ.தி.மு.க., ஆட்சியில், வார்டுகள் வரையறையில் குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்கு முன் வார்டுகள் மறுவரையறை, சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும். இது தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
'மேலும், 5,000 முதல் 20 ஆயிரம் வாக்காளர்கள் உடைய வார்டுகளை பிரித்து, புதிய வார்டுகளை உருவாக்க வேண்டும்' என்பது போன்ற கோரிக்கைகளை மாவட்ட செயலர்கள் எழுப்பினர்.
விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு செப்டம்பரில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்து, நகர ஊராட்சி தேர்தலை, ஜனவரியில் நடத்தவும், கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.