திருச்சி:கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் போலீஸ் வேடத்தில் மோசடியில் ஈடுபட்டு தமிழகத்தையே உலுக்கிய சிவகாசி ஜெயலட்சுமியிடம் திருச்சி எல்பின் நிறுவனம் 2.45 கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றி வருவதால் அவர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு போலீஸ் வேடமிட்டு நகைக் கடைகளில் நகை வாங்கி மோசடி போலீஸ் வேலை வாங்கித் தருவதாக மோசடி பல போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பு என தமிழகத்தையே கலக்கியவர் 'போலீஸ் அழகி' என அழைக்கப்பட்ட சிவகாசி ஜெயலட்சுமி. அப்போது இருந்த அ.தி.மு.க. ஆட்சியில் சில அமைச்சர்களுடனும் இணைத்து பேசப்பட்டார். 2012ம் ஆண்டு வரை மோசடி வழக்குகள் தொடர்பாக நீதிமன்றம் சென்று வந்தார். பல வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டு சிறை தண்டனையும் அனுபவித்து விட்டார்.
வழக்குகள் முடிந்து மதுரையில் ஜெயலட்சுமி 'செட்டில்' ஆனார்.இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த 'எல்பின்' நிறுவனம் 2019ம் ஆண்டு விருதுநகரில் நடத்திய கருத்தரங்கில் ஜெயலட்சுமி பங்கேற்றார்.அந்நிறுவன உரிமையாளர்கள் அழகர்சாமி ரமேஷ் அறிவித்த கவர்ச்சிகரமான திட்டங்களால் கவரப்பட்டு ஜெயலட்சுமி அவரது உறவினர்கள் நண்பர்கள் என 700 பேரிடம் 2.45 கோடி ரூபாய் வசூலித்து எல்பின் நிறுவனத்தில் 2019ல் டிபாசிட் செய்துள்ளார்.அவர்கள் ஒரே ஆண்டில் 3.45 கோடியாக தருவதாக கூறி உள்ளனர்.
இதன்படி கடந்த ஆண்டு வர வேண்டிய பணம் வரவில்லை.ஜெயலட்சுமி பலமுறை எல்பின் நிறுவனத்தை தொடர்பு கொண்டும் முறையாக பதில் அளிக்கவில்லை.இதனால் அவர் மூலம் பணம் கொடுத்தவர்கள் ஜெயலட்சுமிக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்இதையடுத்து நேற்று காலை திருச்சி மன்னார்புரத்தில் உள்ள எல்பின் நிறுவனம் முன் ஜெயலட்சுமி காத்திருப்பு போராட்டத்தை துவக்கினார். அவரிடம் எல்பின் நிறுவனம் சார்பில் பேச்சு நடத்தப்பட்டது.
ஆனால் 'பணம் கொடுத்தால் மட்டுமே அந்த இடத்தை விட்டு செல்வேன்' எனக் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.சில நாட்களுக்கு முன் திருச்சியைச் சேர்ந்தவர்களிடம் 2.50 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக திருச்சி மாநகர போலீசில் எல்பின் நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE