கிராமங்களை உடனடியாக காக்க வேண்டும்!| Dinamalar

கிராமங்களை உடனடியாக காக்க வேண்டும்!

Updated : ஜூன் 28, 2021 | Added : ஜூன் 26, 2021 | கருத்துகள் (1) | |
உலக மக்களின் வாழ்வையே உள்ளங்கைக்குள் சுருட்டி, ஒரு ஓரமாக முடக்கி வைத்திருக்கும் கொரோனா என்னும் கொடிய அரக்கன், நம் கிராமங்களையும் கபளீகரம் செய்து வருகிறது. அதன் பிடியிலிருந்து நம் கிராமங்களை பாதுகாத்தால் தான், நம் நாடு நாடாக இருக்கும்.இப்போதைய நிலையில், ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்வதும், தடுப்பூசிகள் போடுவதை வேகப்படுத்துவதும் மட்டுமே,
 கிராமங்களை உடனடியாக காக்க வேண்டும்!

உலக மக்களின் வாழ்வையே உள்ளங்கைக்குள் சுருட்டி, ஒரு ஓரமாக முடக்கி வைத்திருக்கும் கொரோனா என்னும் கொடிய அரக்கன், நம் கிராமங்களையும் கபளீகரம் செய்து வருகிறது. அதன் பிடியிலிருந்து நம் கிராமங்களை பாதுகாத்தால் தான், நம் நாடு நாடாக இருக்கும்.

இப்போதைய நிலையில், ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்வதும், தடுப்பூசிகள் போடுவதை வேகப்படுத்துவதும் மட்டுமே, கிராமங்களை பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும்.


நடவடிக்கை

தற்போது இரண்டாம் அலை குறைந்து, ஆகஸ்ட் -- செப்டம்பர் மாதங்களில் மூன்றாம் அலை வரலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஒருவேளை, மூன்றாம் அலை வரும் பட்சத்தில், அது கிராமங்களை கடுமையாகத் தாக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதை அறிந்து, கிராமங்களில் அவர்களாகவே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு சில கிராமங்களில் யாரும் தேவையின்றி வெளியே செல்வதை, இளைஞர்கள் அடங்கிய குழு கண்காணிக்கிறது. முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது பஞ்சாயத்து அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுப்பது பாராட்டத்தக்கதாகும்.பொள்ளாச்சி அருகே உள்ள கிராமங்கள் சில கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, 'டிரோன்'கள் எனப்படும் ஆளில்லா கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் கொட்டமல்லம் கிராமத்தின் 300 குடும்பங்களில், 120க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, 'கிராமத்திற்குள் யாரும் வர அனுமதியில்லை' என எல்லைகள் மூடப்பட்டன. இம்மாவட்டத்தில் மட்டும் 225 ஊராட்சிகள், 'சீல்' வைக்கப்பட்டன.அதுபோல, நீலகிரி மாவட்டம் கூடலுாரில் உள்ள பழங்குடியின மக்கள் வாழும் மலை கிராமங்களில், மரங்களை வெட்டிப்போட்டு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். வெளிநபர்கள் உள்ளே வர அனுமதியில்லை.

கல்வியறிவு குறைவாக இருக்கும் மலை கிராம மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, கொரோனாவை அண்ட விடாமல் விரட்டி அடித்து வருவது வியப்பை ஏற்படுத்திஉள்ளது. மருத்துவ வசதிகள் என்றால் என்ன என்று கேட்கும் குக்கிராமங்கள் எத்தனையோ ஆயிரங்கள் உள்ளன. அவர்களிடையே சிகிச்சை பெற முடியாமல் இறந்து விடுவோமோ என்ற அச்சம் உள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் கிராமங்களை கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதிகளாகக் கருதி, தீவிரக் கண்காணிப்பை நடைமுறைப்படுத்துவதுடன், சமூகப் பொறுப்புணர்வுடன் கிராமங்களை பாதுகாப்பது அரசின் கடமை.அவ்வாறெனில் கிராமங்கள் வாழும்; இல்லையெனில் தொற்றால் வீழும்.

பேரிடர் காலங்களில் பஞ்சாயத்து அமைப்புகள் மூலம் சிறந்த தகவல் தொடர்பு மேலாண்மைத் திறனால், எளிதாக பொது சுகாதாரப் பரிந்துரைகளை அமல்படுத்த முடியும். மஹாராஷ்டிரா அரசு, தொற்று இல்லாத கிராமங்களுக்கு, 50 லட்ச ரூபாய் பரிசு அறிவித்துள்ளது போல, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் கிராமங்களுக்கு சிறப்பு பரிசுகள் அளித்து, தமிழக அரசு ஊக்கப்படுத்தலாம். கிராமம் கிராமமாகச் சென்று தடுப்பூசிப் பணியைப் போர்க்கால அடிப்படையில் விரைவு படுத்த வேண்டும். நகரங்களில் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள இயலும்.அங்கன்வாடி மையங்கள், தொடக்கப் பள்ளிகளில் முகாம்கள் நடத்தலாம். இதனால் தடுப்பூசி பெருமளவில் வீணாவதையும் தடுக்கலாம்.

கடந்த அலைக்கும், தற்போதைய அலைக்கும் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு பல காரணங்கள்:
*சரியான புரிதலின்றி உள்ளூர் அளவில் அவசரமாக முன்னெடுக்கப்பட்ட குடும்ப நிகழ்வுகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமை

*கர்ப்பிணிகளுக்கு தொற்று ஏற்பட்டதற்கு இவ்விழாக்களில் தடுப்பு முறைகளை சரியாகப் பின்பற்றாமை
*தொழிற்சாலைகளுக்கு கிராமங்களில் இருந்து பணியாளர்கள் வந்து சென்றது. ஆரம்ப கட்டத்தில் பரிசோதனை செய்யாமல் இருந்தது
*பாதிக்கப்பட்டவர்களை, தீவிரம் புரியாமல் உறவினர்கள் சென்று பார்த்தது

* உள்ளூர் அளவில் சிறு கடைகள், பால் வாங்குமிடம், உள்ளூர் சந்தை எனப் பல இடங்களில் முக கவசம் அணியாமல் இருந்தது

* காரண காரியம் கருதி வெளியிடங்களுக்குச் சென்று வந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் தனிமையைக் கடைப்பிடிக்காமல் இருந்தது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நகரப் பகுதிகளை விட, அவற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் தொற்று பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. எனவே தான் கட்டுப் படுத்துவதும் சவாலாக உள்ளது.

இந்திய அளவில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 'கிராமப்புறங்களில் பாதிப்பு 53 சதவீதமாகவும், உயிரிழப்பு 52 சதவீதமாகவும் இருக்கிறது' என, தெரிவிக்கிறது. இதனால், கிராமப்புறங்களில் மருத்துவர்களின் தேவை 75 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், தொற்றால் பாதிக்கப்படும் நான்கில் ஒருவர், கிராமவாசியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, நிலைமையின் தீவிரப்போக்கை உணர்த்துகிறது.

கிராமங்களில் பலர், காய்ச்சல் வந்தால் சாதாரணக் காய்ச்சல் என வீட்டிலேயே படுத்து, சுய மருத்துவம் செய்வதும், சமூக வலைத்தளங்களைப் பார்த்து, நாட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதும் தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்களாகும். ஊரகப் பகுதிகளில் கொரோனாவால் இறப்போரின் விபரங்களும், அரசிற்கு சரியாக வருவதில்லை. மருத்துவமனைக்கே வராமல் இறப்பவர்கள் எப்படி கணக்கில் வருவர்? ஊரகப்பகுதிகளில் மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்தாமல், இதைத் தடுப்பது சவாலாகும்.

ஸ்கேன், எக்ஸ்ரே, பரிசோதனை, ஆக்சிஜன் படுக்கை போன்ற வசதிகளை, ஆரம்ப சுகாதார மையங்கள் அனைத்திலும் ஏற்படுத்த வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் போதிய எண்ணிக்கையில் பணியமர்த்தப்பட வேண்டும்.மாநில அளவில் கொரோனா பரவல் சற்று தணிந்து இருந்தாலும் கூட, கிராமப்புற பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்களில் பெரிய சரிவைக் காண முடியவில்லை: பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது.சுதந்திரக் காற்றை சுவாசிக்க கிராமங்களைத் தேடி தஞ்சம் புகுந்தவர்கள், வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து சுற்றத்தாரிடம் அளவளாவி மகிழ்ந்தவர்கள், இன்றைக்கு வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிராமங்களில் 100 பேருக்கு பரிசோதனை செய்தால், அதிகபட்சமாக 35 -- 40 பேருக்கு தொற்று உறுதியாகும் நிலை உள்ளது. மேலும், அங்கு 10 சதவீத மக்கள் தான் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றுகின்றனர்.கிராமங்களின்றி நகரங்கள் இல்லை. சமூகத்தின் பூர்வகுடிகளாக அறியப்படும் மக்களின் உயிரும், வாழ்வாதாரமும் இப்பெருந்தொற்று நோயிலிருந்து மீட்கப்படவேண்டுமானால், கீழ்க்காணும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி, கண்காணிப்பது அரசின் கடமையாகும்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

*கிராமப் பகுதிகளை துாய்மையாக மற்றும் சுகாதாரமாகப் பராமரித்தல்

*முன்களப் பணியாளர்களுக்கு தேவை

*விளம்பரங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

*உள்ளூர் சமூகத்தைச் சூழ்நிலைக்கேற்ப செயல்படத் தயார்படுத்துதல்

*நகரங்களிலிருந்து வந்தவர்கள் பற்றிய பதிவு மற்றும் துல்லியமான தரவுகளைப் பேணுதல்

* அவர்களைக் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துதல்
*சுகாதாரக் குறைபாடு களை சரிசெய்யும் வகையில், முன்கூட்டித் திட்ட மிடல் அல்லது விழிப்புடன் செயல்படுதல்.தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

*தொற்றை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கான முயற்சிகளை எடுத்தல்

*தேவைப்படும் எண்ணிக்கையில் காய்ச்சல் முகாம்களை நடத்துதல்

*கிராம அளவிலோ அல்லது ஒன்றிய அளவிலோ தேவையான தனிமைப்படுத்தும் மையங்களை அமைத்தல்

* தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்குதல்

* மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் உறுதிப்படுத்துதல்

* கிராமங்கள் தோறும் எப்படி போலியோ தடுப்பு மற்றும் ஒழிப்பு முகாம்கள் நடத்தப்பட்டதோ அதுபோல தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டும்
* ஒவ்வொரு கிராமத்திலும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கொரோனா தடுப்பு மேலாண்மைக்கு, குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்
* தடுப்பூசி செலுத்திய பிறகும் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வலியுறுத்தல்
*கிராம அளவில் தன்னார்வலர்களின் சங்கிலித் தொடர் இணைப்பை உருவாக்குதல்
* வீடு வீடாக அறிகுறிகளைக் கண்காணித்தல்

* மாநில அரசால் அறிவிக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல்

*வட்டார அல்லது மாவட்ட அளவில் ஊராட்சித் தலைவர்களை அழைத்து, ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, மக்களின் அச்சத்தைப் போக்கி, தடுப்பூசிப் பணிகளை விரைவுபடுத்துதல்

* கார் ஆம்புலன்ஸ் திட்டம் போல, தகுந்த எண்ணிக்கையில் கிராமங்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், நடமாடும் மருத்துவக் குழுக்கள், தடுப்பூசி செலுத்தும் குழுக்களை ஏற்படுத்திக் கண்காணித்தல்

* உள்ளாட்சி அமைப்புகள், தனக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி பரவலைத் தடுக்க அரசுகள் சுதந்திரம் வழங்குதல்.

மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் இல்லாத கிராமம், குடிசைகளற்ற கிராமம், கழிப்பறை இல்லாத வீடே இல்லாத கிராமம் என்ற வகையில், கிராம நிர்வாகத்தைச் செவ்வனே நிறைவேற்ற, ஊராட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் உறுதிபூண்டால், கொரோனா இல்லாத கிராமங்கள் சாத்தியமே.முன் திட்டமிடலை விரைவாகவும், விவேகமாகவும் மேற்கொள்ளுதல் அவசியம். கடந்த கால அனுபவங்களின் படி, மூன்றாம் அலை பரவலிலிருந்து சாதுர்யமாக தப்பிக்க வேண்டும் அல்லது தகுந்த ஏற்பாடுகளுடன் குறைவான பாதிப்பு என்ற நிலையில் திறமையாக எதிர்கொள்ள வேண்டும்.

கிராமங்கள் மீண்டெழ, கனவு கண்ட காந்தியின் கிராம சுயராஜ்ஜியம் இயக்கமாக மாறியதைப் போல, கிராமப்புற மக்களின் வாழ்க்கை வளம் பெற, நில உடைமைத் தத்துவத்திற்கு புது வடிவம் தந்த வினோபாவின் பூமிதான இயக்கம் போல, இப்போது பெருந்தொற்று மீட்பு இயக்கம் தேவை. அனைவரும் இணைந்து கிராம மீட்பு இயக்கம் அமைப்போம்.

அரசின் பொறுப்பு, கடமை என்பதையும் தாண்டி, மனித குலத்திற்கே சவாலான பெருந்தொற்றை, சுகாதார முறைகளைப் பேணி விரட்டியடித்து, கிராமங்களை பேரழிவிலிருந்து மீட்போம். இது, வெறும் எண்ணமும், பேச்சுமாக இல்லாமல் செயல்வடிவமாக மாறும் வகையில் நாம் ஒவ்வொருவரும் ஓர் இயக்கமாகச் செயல்படுவோம்!
முனைவர் ரா. வெங்கடேஷ்
சென்னை பல்கலைக்கழகம்
தொடர்புக்கு:இ --- மெயில்: rvsh76@gmail.com
மொபைல் எண்: 94447 92188

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X