தமிழக சட்டசபையில் கவர்னர் ஆற்றிய உரையில், 'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தை நீக்கப்பட்டது தொடர்பாக, உளவு அமைப்புகள் அனுப்பியமூன்று பக்க ரகசியஅறிக்கையால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின், சட்டசபையின் முதல் கூட்டம், கவர்னர் உரையுடன் சமீபத்தில் துவங்கியது.கவர்னர் உரையின் இறுதியில் வழக்கமாக, 'ஜெய் ஹிந்த்' எனப்படும் நாடு வெல்லட்டும் என்ற வார்த்தை இடம்பெறும்.ஆனால், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில், அந்த வார்த்தை நீக்கப்பட்டிருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, சென்னையில் உள்ள மத்திய உளவு அமைப்புகள், மூன்று பக்கங்கள் அடங்கிய ரகசிய அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பியுள்ளன.'கவர்னர் உரையில் முதலில் ஜெய் ஹிந்த் வார்த்தை இடம்பெற்றிருந்தது. ஆனால், தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் அதை நீக்கி, முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, அமித் ஷாவுக்கு அதிர்ச்சியை விட கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி சட்டசபை கூடும் போதெல்லாம் சபையில் ஜெய் ஹிந்த் என கோஷமிடும்படி, கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அறிவுறுத்தப் பட உள்ளதாக தெரிகிறது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- புதுடில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE