சென்னை--மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 'போக்சோ' வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபா, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள, சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73. இவர், பள்ளி வளாகத்தில் உள்ள சொகுசு பங்களாவில் வசிக்கிறார். கிருஷ்ணரின் அவதாரம் என தன்னை கூறி வந்த சிவசங்கர் பாபா, மாணவியர் அனைவரும் கோபியர்கள் என கட்டிப் பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் என, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும், வசதி குறைவான குடும்பத்தைச் சேர்ந்த மாணவியர், கணவரை பிரிந்து குடும்பம் நடத்தும் பெண்களின் குழந்தைகளை குறிவைத்து, சொகுசு பங்களாவில் வெளிநாட்டு மது மற்றும் 'சாக்லேட்' கொடுத்து சீரழித்து விட்டார் என்ற, குற்றச்சாட்டும் உள்ளது.இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டார்.

இதைஅடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், டில்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை, ஜூன் 16ல் கைது செய்து, செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.மறுநாள், சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். குணமடைந்ததால், நேற்று சிவசங்கர் பாபா 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
முன்னதாக இவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார், சிவசங்கர் பாபாவை நேற்று புழல் சிறையில் அடைத்தனர். இவரை, ஏழு நாட்கள் காவலில் விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார், செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE