இந்திய நிகழ்வுகள்
கணவர் மர்ம உறுப்பை துண்டித்து கொன்ற மனைவி
முசாபர்பூர்-உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள முசாபர்பூர் நகரைச் சேர்ந்தவர் மவுலவி வகில் அகமது, 57. இவருக்கு ஏற்கனவே இரு மனைவியர் உள்ளனர்.
இந்நிலையில் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய அவர் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.இதை இரண்டாவது மனைவி ஹஸ்ரா எதிர்த்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு தகராறு முற்றியது; இதையடுத்து அகமதுவின் ஆட்டத்தை அடக்க, ஹஸ்ரா முடிவு கட்டினார்.நள்ளிரவில் அகமது அயர்ந்து துாங்கிய போது, கத்தியால் அவரது மர்ம உறுப்பை வெட்டி எறிந்து விட்டார்.
இதனால் அதிக ரத்தம் வெளியேறி, அகமது இறந்தார். இதை மறைத்து, அகமது இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறி, மறுநாள் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார் ஹஸ்ரா. அகமதுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பக்கத்து வீட்டில் இருந்தவர் போலீசில் தெரிவித்துள்ளார். உடனே போலீசார் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். குற்றத்தை ஒப்புக் கொண்ட ஹஸ்ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தடம் புரண்ட ரயில்
மும்பை: டில்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் - கோவா இடையேயான ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று அதிகாலை, மஹாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள குகைக்குள் சென்றது. அப்போது, ரயில் இன்ஜினின் முன் சக்கரங்கள் தடம் புரண்டன. இதில் பயணியருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என, கொங்கன் ரயில்வே தெரிவித்துள்ளது
கொரோனா கைதி ஓட்டம்
திபு: அசாமின் கர்பி அங்லாங் மாவட்டம் திபுவில், போதைப்பொருள் வழக்கில் கைதான ஒருவர் சிறையில் அடைக்கப்பட்ட பின், கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் திபு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் அங்கிருந்து தப்பினார்; போலீசார் அவரை தேடுகின்றனர்.
எம்.எல்.ஏ., மீது புகார்
சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில் தர்மசாலா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., நெஹ்ரியா-வுக்கும், வட்டார வளர்ச்சி அதிகாரி ஓஷின் சர்மாவுக்கும் இரு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், எம்.எல்.ஏ.,வான தன் கணவர், தன்னை உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்துவதாக ஓஷின் கூறும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மனைவி கூட்டு பலாத்காரம்
புடான்: உத்தர பிரதேசத்தின் புடானில், சமீபத்தில் திருமணம் செய்த, 20 வயது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர், இரு சகோதரர்களுடன் இணைந்து, அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். படுகாயம் அடைந்த இளம்பெண், சிகிச்சையில் உள்ளார். கணவர், சகோதரர்கள் உட்பட குடும்பத்தினர் ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கொலை முயற்சி வழக்கு
கோல்கட்டா: மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் தேவஞ்சன் தேவ் என்பவர், மூன்று போலி தடுப்பூசி மையங்களை நடத்தி வந்தார். அங்கு வரும் மக்களுக்கு, கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக, 'ஆன்டிபயாடிக்' எனப்படும், நோய் எதிர்ப்பு மருந்துகளை தடுப்பூசியாக செலுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, தேவஞ்சன் தேவ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
தமிழக நிகழ்வுகள்

போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா சிறையில் அடைப்பு
சென்னை--மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 'போக்சோ' வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபா, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள, சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73. இவர், பள்ளி வளாகத்தில் உள்ள சொகுசு பங்களாவில் வசிக்கிறார். கிருஷ்ணரின் அவதாரம் என தன்னை கூறி வந்த சிவசங்கர் பாபா, மாணவியர் அனைவரும் கோபியர்கள் என கட்டிப் பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் என, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும், வசதி குறைவான குடும்பத்தைச் சேர்ந்த மாணவியர், கணவரை பிரிந்து குடும்பம் நடத்தும் பெண்களின் குழந்தைகளை குறிவைத்து, சொகுசு பங்களாவில் வெளிநாட்டு மது மற்றும் 'சாக்லேட்' கொடுத்து சீரழித்து விட்டார் என்ற, குற்றச்சாட்டும் உள்ளது.இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டார்.
இதைஅடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், டில்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை, ஜூன் 16ல் கைது செய்து, செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.மறுநாள், சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். குணமடைந்ததால், நேற்று சிவசங்கர் பாபா 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
முன்னதாக இவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார், சிவசங்கர் பாபாவை நேற்று புழல் சிறையில் அடைத்தனர். இவரை, ஏழு நாட்கள் காவலில் விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார், செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய ஆசிரியர் கைது
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தொம்பரகாம்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம், 51; இவர், குட்டூர் அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களின் மதிப்பெண் சான்றிதழை அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதில், மகாலிங்கம் பிளஸ் 2 தேர்வில் 580 மதிப்பெண் மட்டும் எடுத்திருந்த நிலையில், பணியில் சேர்வதற்காக மதிப்பெண் சான்றிதழில், 972 மதிப்பெண் என திருத்தி, கடந்த 1990ல் பணிக்கு சேர்ந்துள்ளது தெரிந்தது. இதையடுத்து, தர்மபுரி டி.இ.ஓ., பாலசுப்பிரமணி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பட்டா வழங்க பேரம்; 3 பேர் கைது
தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சிலம்பணி தேவஸ்தானத்திற்கு சொந்தமான, 14.5 சென்ட் இடம் பல ஆண்டுகளுக்கு முன், அம்மச்சி ஊரணி பகுதியை சேர்ந்த காளிமுத்துவிற்கு பத்திரம் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு பட்டா பெற, காளிமுத்து, ஊர்காவல் படையில் பணிபுரியும் பாலாஜி என்பவர் உதவியை நாடினார். ஒரு வாரத்திற்கு முன் தேவகோட்டை ஆர்.டி.ஓ. பிரபாகரனிடம் பாலாஜி மனு அளித்தார். அந்த மனுவுடன், தேவகோட்டையில் ஏற்கனவே பணிபுரிந்த ஆர்.டி.ஒ., பட்டா வழங்க ஆணை பிறப்பித்தது போல, ஒரு கடிதத்தை இணைத்திருந்தார். கடித தேதியில் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றிய சுரேந்திரன் மாறுதலாகி சென்று விட்டார். தற்போதைய ஆர்.டி.ஒ. பிரபாகரன் மனு, பற்றி விசாரிக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார். தாசில்தார் ராஜரத்தினம் மனுவை ஆய்வு செய்ததில் கடித எண் மற்றும் ஆர். டி. ஓ., கையெழுத்தில் சந்தேகம் ஏற்பட்டது. விசாரணை நடத்தியதில் ஆர்.டி.ஓ உத்தரவு கடிதம் போலியானது என, கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பாலாஜி மற்றும் இருவர் சேர்ந்து போலி கடிதம் தயாரித்தது தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தார். பட்டா வாங்கி தருவதற்காக, 1.5 லட்சம் ரூபாய் பேரம் பேசியுள்ளனர்.
கார் மரத்தில் மோதி தந்தை மகன் பலி
திட்டக்குடி--மரத்தில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐ.டி.கம்பெனி மேலாளர் மற்றும் அவரது மகன் இறந்தனர்.சென்னை தரமணியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 37; டி.சி.எஸ்., - ஐ.டி., நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவர் நேற்று திருச்சி, புத்துார் அகரத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு செல்ல சென்னையில் இருந்து மனைவி அருணாதேவி, 31, மகன் ஆதவா 2; ஆகியோருடன் மாருதி எஸ்கிராஸ் காரில் புறப்பட்டனர். மாலை 3:30 மணிக்கு கடலுார் மாவட்டம் ராமநத்தம் அருகே லக்கூர் கைகாட்டி அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முத்துகிருஷ்ணன் அவரது மகன் ஆதவா அதே இடத்தில் இறந்தனர். அருணாதேவி படுகாயமடைந்தார்.
போலீசாரை தாக்கிய இளைஞர்கள் கைது
வத்தலக்குண்டு--திண்டுக்கல் மாவட்டம் விருவீடு சோதனைச் சாவடியில் போலீசாரை இளைஞர்கள் தாக்கிய வீடியோ நேற்று சமூக சமூகவலை தளத்தில் பரவியது. 3 பேரை கைது செய்த போலீசார், 3 பேரை தேடி வருகின்றனர்.மதுரை மாவட்டம் நல்லுதேவன்பட்டியில் இருந்து இரு பைக்குகளில் ஆறு இளைஞர்கள் ஜூன் 23ல் விருவீடு வந்தனர். சோதனைச்சாவடியில் போலீசாருடன் தகராறு செய்து தாக்கினர். மூவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சோதனைச் சாவடியில் நடந்த தகராறு குறித்த வீடியோ நேற்று பரவியது. இதுகுறித்து நிலக்கோட்டை டி.எஸ்.பி., முருகன் கூறுகையில், ''வீடியோவில் உள்ள மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு: 3 பேருக்கு தீவிர சிகிச்சை
சென்னிமலை:கொரோனாவை குணமாக்கும் என்று கூறி, மர்ம நபர் தந்த மாத்திரை, பெண்ணின் உயிரை பறித்தது. கணவன், மகள் உட்பட மூவர் சிகிச்சை பெறுகின்றனர்.ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சேனாங்காட்டுதோட்டத்தை சேர்ந்த விவசாயி கருப்பணன், 71; மனைவி மல்லிகா, 55; மகள் தீபா, 30; தோட்டத்தில் வேலை செய்யும் பெண் குப்பம்மாள், 65; நால்வரும் நேற்று காலை வீட்டில் இருந்தனர்.காலை 8:00 மணி அளவில், 25 வயது 'டிப்-டாப்' ஆசாமி வந்தார். கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி, ஒரு கருவி மூலம் நான்கு பேரையும் சோதனை செய்துள்ளார்.பின் கறுப்பு நிறத்தில் நான்கு பேருக்கு, தலா ஒரு மாத்திரை தந்தார். பின் அங்கிருந்து சென்றார். நால்வரும் அதைசாப்பிட்டனர்.அரை மணி நேரம் கழிந்த நிலையில், நான்கு பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே மல்லிகா இறந்து விட்டார்.குப்பம்மாள் ஈரோடு அரசு மருத்துவமனையிலும், கருப்பணன், தீபா கோவையில் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

18 கிலோ கஞ்சா பறிமுதல் தாய், மகன் கைது
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், காங்கயம், கரூர் ரோட்டில், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.காங்கயத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற காரை போலீசார் நிறுத்த முயன்றபோது, திடீரென காரை திருப்பி கொண்டு வேகமாக சென்றனர். போலீசார் காரை விரட்டி சென்று, மடக்கி பிடித்தனர்.காரில் இருந்தவர்கள், காங்கயம், சின்னாய்புதுார், திரு.வி.க., நகரை சேர்ந்த ஜெயலட்சுமி, 47, அவரது மகன் கவாஸ்கர் என்பது தெரியவந்தது. காரில், இருந்த மூட்டையில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 18 கிலோ கஞ்சா இருந்தது.இருவரையும் கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றியதோடு, 1.27 லட்சம் ரூபாய் பணம் மற்றும், காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.திண்டுக்கல்லில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, வீட்டில் பதுக்கிவைத்து, காங்கயம், வெள்ளகோவில், கரூர் பகுதியில் சப்ளை செய்து வந்தனர். இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 கிலோ கஞ்சா, டூவீலர் பறிமுதல் : பெண் கைது
எமனேஸ்வரம், :எமனேஸ்வரம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர்ரஞ்சித் குமார். இவர் நேற்று காலை 9:00 மணிக்கு அப்பகுதியில் ஹேமலதா என்ற பெண்ணுடன் டூவீலரில் சென்றார்.வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை பார்த்ததும் ரஞ்சித்குமார் தப்பினார். ஹேமலதா வைத்திருந்த, 4 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது. ஹேமலதா வீட்டில் சோதனையிட்டபோது, அங்கிருந்து 6 கிலோ கஞ்சா பிடிபட்டது.எஸ்.ஐ., முத்துமாணிக்கம், ஹேமலதா, 31,அவரது தந்தை கருப்பையா, 64, ரஞ்சித் குமாரின் தந்தை எபனேசர், 65 மூவரையும் கைது செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE