நித்தம் பூக்கும் புதுமலராய் ஜொலிக்கும் முகம். வானவில்லில் காணாத புது வண்ணம் இவரின் நிறம் என்று இளைஞர்களை வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர் நடிகை ரேவதி. இவர் 'மண்வாசனை' ரேவதி அல்ல. 24 வயதே ஆன புதுவரவு மும்பை ரேவதி.பிறந்தது, படித்தது மும்பை என்றாலும் சரளமாக தமிழ் பேசுவது 'நீங்கள் தமிழகமா' என கேட்க துாண்டும். இவரது தந்தை வெங்கடேஷன் பூர்வீகம் வள்ளியூர். மும்பையில் ரயில்வே பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். ரேவதி, குஜராத் ஸ்போர்ட்ஸ் அகாடமி கல்லுாரியில் பி.ஏ., பட்டம் பெற்றுள்ளார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, மராத்தியில் பேசுபவர். நடிப்போடு தடகளத்திலும் அதகளம் செய்பவர். தடகளத்தில் நேஷனல் சாம்பியன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்...
அவர் நம்மிடம் பேசியதாவது: படிக்கும் போதே நடிப்பில் ஆர்வம். கல்லுாரி முடித்து மாடலிங் செய்ததை பலர் பாராட்டினர். கே.கே பாய்ஸ் (கன்னியாகுமரி பாய்ஸ்) ஆல்பத்தில் இரு தமிழ் பாடல்கள் பாடியுள்ளேன். தமிழ் சினிமா வாய்ப்புக்காக ஆடிஷனில் பங்கேற்றேன். கவுசல்யன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளேன். படப்பிடிப்பு முடிந்துள்ளது. கொரோனாவால் படம் வெளியாகவில்லை. முதல் படம் நல்ல அறிமுகமாக அமையும். நல்ல கதையம்ச படங்களில் நடித்து திறமையை வெளிப்படுத்தணும். கிளாமரில் எல்லை மீறமாட்டேன்.
கார் ஓட்ட பிடிக்கும்
2014 ல் தேசிய விளையாட்டு போட்டியில் 400 மீ., ஓட்டத்தை 58 செகண்ட்டில், 200 மீ., ஓட்டத்தை 25 செகண்ட்டில் ஓடி சாதித்துள்ளேன். 'வெஸ்டன் டான்ஸ்' நல்லா ஆடுவேன். கார் ஓட்டுவது ரெம்ப பிடிக்கும். நீண்ட துாரத்திற்கு நானே ஓட்டுவது அலாதி பிரியம். மும்பையில் இருந்து திருச்செந்துார் முருகன் கோயில் வரை கார் ஓட்டி குடும்பத்துடன் வந்துள்ளேன். எதையும் முடியாது என நினைக்க மாட்டேன். சாதிக்க முடியும் என நினைப்பேன். நாம் எது செய்தாலும் எதிர்மறை கருத்து கூற ஆயிரம் பேர் இருப்பர். அதை நினைத்து முடங்கிட கூடாது. பெற்றோர் ஆதரவு இருந்தால் போதும். நயன்தாராவின் வித்தியாசமான நடிப்பு பிடிக்கும். வயதும், இளமையும் இருக்கும் போது அவரைப்போல் நடிப்பில் சாதிக்கணும்.
கோச் ஆவேன்
சினிமாவிற்கு பின் விளையாட்டு வீரர்களுக்கான கோச்சிங் சென்டர் நடத்தும் எதிர்கால திட்டம் உள்ளது. நேஷனல் போட்டியில் பங்கேற்கும் 14 வயதுக்குட்பட்ட கிட்ஸ்களுக்கு கோச்சிங் தரும் பயிற்சி ஐ.ஏ.ஏ.எஸ். (இன்டர் நேஷனல் அசோசியேஷன் ஆப் அத்தலடிக் பெடரேஷன்) பயிற்சி முடித்துள்ளேன். என் மாணவி தேசிய அளவிலான ேஹலோ இந்தியா போட்டியில் தடைதாண்டுவதில் சாதித்துள்ளார், என்றார்.
இவரை பாராட்ட revativ1996@gmail.comல் தொடர்பு கொள்ளலாம்.
-சிவரவி