சென்னை: கவர்னர் உரையில் ஜெய்ஹிந்த் தவிர்க்கப்பட்டது சர்ச்சையான நிலையில், தமிழக காங்கிரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ‛ஜெய்ஹிந்த் என சொல்வதில் பெருமை' எனப் பதிவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின், சட்டசபையின் முதல் கூட்டம், கவர்னர் உரையுடன் சமீபத்தில் துவங்கியது.கவர்னர் உரையின் இறுதியில் வழக்கமாக, 'ஜெய் ஹிந்த்' எனப்படும் நாடு வெல்லட்டும் என்ற வார்த்தை இடம்பெறும். ஆனால், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில், அந்த வார்த்தை நீக்கப்பட்டிருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சட்டசபையில் திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை, வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளது என்ற தொனியில் பேசினார்.

கவர்னர் உரையில் ஜெய்ஹிந்த் வார்த்தை தவிர்க்கப்பட்டதற்கு பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், திமுக.,வோ இதுவரை எதுவும் பேசவில்லை. இந்நிலையில், திமுக.,வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஜெய்ஹிந்த் வார்த்தைக்கு ஆதரவளிப்பது போல் பதிவிட்டுள்ளது. தமிழக காங்கிரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா, ஜெய்ஹிந்த் முழக்கமிடும் வீடியோவை பகிர்ந்து, ‛ஜெய்ஹிந்த் என சொல்வதில் பெருமை' (ProudToSayJaihind) என்னும் ஹேஸ்டேக்குடன் பதிவிட்டுள்ளனர்.