பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட பிரதமர் மோடி வேண்டுகோள்!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட பிரதமர் மோடி வேண்டுகோள்!

Updated : ஜூன் 29, 2021 | Added : ஜூன் 27, 2021 | கருத்துகள் (6)
Share
புதுடில்லி:''கொரோனா தடுப்பூசிகள் பற்றி பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தடுப்பூசி போட்டுக் கொள்வதில் உள்ள தயக்கத்தை, அச்சத்தை கைவிட வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள, தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் ஒரே வழி. கொரோனா தொற்று அடிக்கடி உருமாறி ஆபத்தை ஏற்படுத்துகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.பிரதமர் மோடி, 2014 முதல்,
PM Modi, Corona Vaccine, mann ki baat

புதுடில்லி:''கொரோனா தடுப்பூசிகள் பற்றி பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தடுப்பூசி போட்டுக் கொள்வதில் உள்ள தயக்கத்தை, அச்சத்தை கைவிட வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள, தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் ஒரே வழி. கொரோனா தொற்று அடிக்கடி உருமாறி ஆபத்தை ஏற்படுத்துகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிரதமர் மோடி, 2014 முதல், ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிறன்று வானொலியில், 'மன் கி பாத்' எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி வழியாக மக்களிடம் பேசி வருகிறார்.இந்த மாதத்தின் கடைசி ஞாயிறான நேற்று, மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:கொரோனா தொற்றுக்கு எதிரான மக்களின் போராட்டம் நீடிக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.


நம்பிக்கை கொள்வோம்

தடுப்பூசியை கண்டுபிடிக்க நம் விஞ்ஞானிகள், 24 மணி நேரமும் உழைத்தனர். அதன் பலனாக தற்போது லட்சக்கணக்கானோருக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், இலவசமாக கொடுக்கப்பட்டுள்னன.சமீபத்தில் ஒரே நாளில் 87 லட்சத்துக்கும் அதிகமான 'டோஸ்' தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளோம்.

கொரோனா தொற்றின் பேராபத்து இன்னும் ஓய்ந்துவிடவில்லை. இந்த கொடிய நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் ஒரே வழி.தடுப்பூசிக்கு எதிராக சிலர் தொடர்ந்து வதந்திகளை பரப்பி வருகின்றனர்; அவர்கள் பரப்பட்டும்; அதை நாம் நம்ப வேண்டாம். நாம் அனைவரும் அறிவியலை நம்ப வேண்டும். நம் விஞ்ஞானிகள் மீது நம்பிக்கை கொள்வோம்.

இதுவரை கோடிக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். என் தாய் 100 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அவர் இரண்டு, 'டோஸ்' தடுப்பூசியையும் போட்டுக் கொண்டு உள்ளார். அதனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் உள்ள அச்சம், தயக்கத்தை கைவிட வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சிலர், லேசான காய்ச்சலால் பாதிக்கப்படலாம். அந்த பாதிப்பு சில மணி நேரம் தான் இருக்கும். அதனால் நாம் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால், நமக்கு மட்டுமின்றி, நம் குடும்பம், கிராமத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கிராமங்கள் அனைத்திலும் 100 சதவீதம் தடுப்பூசி போடுவதே நமது இலக்காக இருக்க வேண்டும்.கொரோனா வைரஸ் அடிக்கடி உருமாறி, பேராபத்தை ஏற்படுத்துகிறது. தொற்று தொடர்வதால், தடுப்பூசி போட்டுக் கொள்வதுடன், தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.


'பறக்கும் சீக்கியர்'

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நம் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். திறமை, அர்ப்பணிப்பு, மனதில் உறுதி, நேர்மை எல்லாம் சேரும்போது, ஒரு சாம்பியன் உருவாகிறார். ஒலிம்பிக் போட்டிகள் குறித்து பேசும் போது, 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங்கை நம்மால் மறக்க முடியாது. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, 'டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு உற்சாகமும், ஊக்கமும் அளிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டேன்.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனான பிரவின் ஜாதவ், ஒலிம்பிக்கில் வில் வித்தை போட்டியில் பங்கேற்கிறார்.இந்திய பெண்கள் ஹாக்கி அணியில் பங்கேற்கும் நேகா கோயின் தாயும், சகோதரிகளும், குடும்பத்தை காப்பற்ற, சைக்கிள் தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர். வில்வித்தையில் பங்கேற்கும் தீபிகாவும், வாழ்க்கையில் பல ஏற்றங்கள் மற்றும் தாழ்வுகளை சந்தித்துள்ளார்.

சென்னையில் வசிக்கும் பவானி, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் முதல் இந்திய வாள்சண்டை வீராங்கனை. பவானி, தன் பயிற்சியை தொடர வேண்டும் என்பதற்காக, அவரது தாய், தன் நகைகளைக் கூட அடகு வைத்தார் என்பதை படித்துள்ளேன். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரரும், தங்கள் வாழ்க்கையில் கடுமையான போராட்டங்களை சந்தித்துள்ளனர். நீண்ட காலம் கடுமையாக உழைத்து உள்ளனர். வீரர்கள், அவர்களுக்காக மட்டும் செல்லவில்லை. நாட்டிற்காக செல்கின்றனர்.பருவ மழை காலம் துவங்க உள்ளது. இதனால் தண்ணீரை சேகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு பிரதமர் பேசினார்.


தமிழ்ப்பற்று: பிரதமர் பெருமிதம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் தமிழ் மொழி பற்றி பிரதமர் பேசியதாவது:உலகத்திலேயே பழமை யான தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் அபிமானி நான். மிகவும் தொன்மையான தமிழ் மொழி, இந்தியாவில் உள்ளது என்பது நம் அனைவருக்கும் பெருமை. தமிழ் மொழி மீதான என் அன்பு, பற்று என்றுமே குறையாது; தமிழ் மொழி குறித்து எனக்கு மிகவும் பெருமிதமாக உள்ளது.

சீக்கியர்களின் 10வது குருவான, குரு கோவிந்த் சிங், தமிழ் குறித்து பெருமையாக எடுத்துரைத்து உள்ளார். திருக்குறளும் புகழ்பெற்றது.இவ்வாறு பிரதமர் கூறினார். மக்களிடம் மனமாற்றம்'மன் கி பாத்' நிகழ்ச்சியின் போது மத்திய பிரதேச மாநிலம் பீடல் மாவட்டத்தில் உள்ள துலேரியா கிராமத்தைச் சேர்ந்த இருவருடன், பிரதமர் மோடி பேசினார்.

தடுப்பூசி போடுவதன் அவசியத்தை விளக்கியதுடன், தடுப்பூசி குறித்த சந்தேகங்களை நீக்கினார். பிரதமருடன் பேசிய இருவரில் ஒருவரான ராஜேஷ் ஹிராவே, 43, கூறியதாவது:பிரதமருடன் பேசிய பின் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் புரிந்தது. உடனடியாக நானும், என் குடும்பத்தினரும் மையத்துக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டோம்.எங்கள் கிராமத்தைச் சேர்ந்த, 127க்கும் அதிகமானோரும், பிரதமரின் பேச்சை கேட்ட பின் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X