உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
அ.அப்பர் சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
செங்கல்பட்டில் உள்ள, மத்திய அரசின் தடுப்பூசி வளாகம் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பது, ஆச்சரியத்துடன் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை 35 ஆயிரம் உயிர்களை இழந்துள்ளோம்; 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மூன்றாம் அலை அடுத்தடுத்த மாதங்களில் உருவாக, அதிக வாய்ப்புள்ளது என்றும், 'டெல்டா பிளஸ்' எனும் கொடிய வீரியமுள்ள கொரோனா பரவி வருகிறது என்பதும், நம்மை ஆழ்ந்த கவலை கொள்ளச் செய்துள்ளது.இந்நிலையில், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தின் செயல்பாடு உடனடியாக துவங்கப்பட வேண்டும்.மத்திய அரசு உடனடியாக அதற்கான அனுமதி அளித்து, தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணியை துரிதப்படுத்த வேண்டும். மூன்றாம் அலை வீசுவதற்கு முன், தமிழக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு விட வேண்டும்.

இவ்விஷயத்தில் கால தாமதம் செய்வது, மிகவும் தவறான போக்கு. தமிழகத்திற்கு 10 கோடிக்கும் மேல் தடுப்பூசிகள் தேவைப்படும் என்ற நிலையில் காத்திருக்காமல், தி.மு.க., அரசு உடனடியாக மத்திய அரசை அணுகி, அனுமதி பெற வேண்டும்.தமிழக பா.ஜ., தலைவர்கள், இது போன்ற செயல்களுக்கு துரிதமாக உதவி செய்து, மக்கள் நலன் மீதுள்ள அக்கறையை நிரூபிக்கலாம்.கடந்த 2001ல், மயிலாடுதுறை பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருந்த ஜெகவீரபாண்டியன், முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க, அப்போதைய பிரதமர் வாஜ்பாய், விவசாய துறை அமைச்சர் உக்கம்தேவ் நாராயண் யாதவ் ஆகியோரை சந்தித்தார்.நீண்ட காலமாக வழங்கப்படாத, தமிழக கரும்பு விவசாயிகளின் நிலுவை தொகை 89 கோடி ரூபாயை, மத்திய அரசிடம் வலியுறுத்தி பெற்று கொடுத்தார். அதற்காக ஜெகவீரபாண்டியனை, அனைத்து கட்சியினரும் சட்டசபையிலேயே பாராட்டினர்.அதை போல இன்றைய பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களும், பிரதமர் மோடியை சந்தித்து, செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்பட அனுமதி பெற்று தர வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE