இஸ்லாமாபாத் : ''பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் திரைப்பட இயக்குனர்கள், பாலிவுட் படங்களை 'காப்பி' அடிப்பதை நிறுத்தி, சொந்தமாக சிந்திக்க துவங்க வேண்டும்,'' என, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவுரை வழங்கினார்.
அஞ்சாதீர்கள்
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் நடந்த குறும்பட விழாவில், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: பாகிஸ்தானைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர்கள் ஹிந்தி திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு, அந்த பாணியிலேயே படம் எடுக்கும் தவறை செய்கின்றனர். இது, மற்றொரு நாட்டின் கலாசாரத்தை நாம், 'காப்பி' அடிப்பதை போன்றது.
என் சொந்த அனுபவத்தில் இளம் இயக்குனர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். அசலுக்கு இருக்கும் மதிப்பு, போலிகளுக்கு என்றைக்குமே இருக்காது. எனவே இளம் இயக்குனர்கள் புதிய சிந்தனைகளை நம் திரைப்படங்களில் பயன்படுத்த வேண்டும். தோல்விகளை பார்த்து அஞ்சாதீர்கள். நம்மை நாம் மதித்தால் தான், இந்த உலகம் நம்மை மதிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிரான பாகிஸ்தானின் போக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், அந்நாடு குறித்த பார்வையை உலக அளவில் மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே, இம்ரான் கான் பேச்சு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சர்ச்சை
இதற்கிடையே, அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை, பாக்., பிரதமர் இம்ரான் கான், 'மாவீரர்' என, சமீபத்தில் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.இது குறித்து பாக்., அமைச்சர் பவத் சவுத்ரி கூறுகையில், 'பிரதமர் இம்ரான் கான், வாய் தவறி அப்படி கூறி விட்டார்,'' என, விளக்கம் அளித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE