லக்னோ,: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தான் பெறும் மாத ஊதியமான 5 லட்சம் ரூபாய்க்கு, 50 சதவீதத்திற்கு மேல் வரி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள தான் பிறந்த பரன்க் கிராமத்திற்கு சமீபத்தில் சென்றார். சிறப்பு ரயில் மூலம் ஜனாதிபதி கான்பூர் சென்றார். இந்நிலையில் நேற்று லக்னோவில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:சில ரயில்கள் ஒரு நிலையத்தில் நிற்காமல் சென்றால் நமக்கு கோபம் வருகிறது. ஒரு சிலர், ரயிலை சேதப்படுத்தி தீ வைக்கும் அளவிற்கு வன்முறையில் இறங்கி விடுகின்றனர். கேட்டால், 'அரசு ரயில்தானே' என்பர். அது, வரி செலுத்துவோரின் சொத்து என்பதை அவர்கள் அறிவதில்லை. வரி வருவாய் உள்ள அனைவரும் தவறாமல் வரி செலுத்த வேண்டும்.இந்த நேரத்தில் ஒன்றை சொல்வதில் தவறு இல்லை என நினைக்கிறேன். நாட்டின் முதல் குடிமகன் என்ற வகையில் எனக்கு, மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. அனைவரிடமும், ஜனாதிபதி இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரே என்ற எண்ணம் இருக்கும்.
ஆனால் என் சம்பளத்தில், 50 சதவீதத்திற்கு மேல், அதாவது, மாதம் 2.75 லட்சம் ரூபாய் வரி செலுத்துகிறேன். வரி போக, எஞ்சுகின்ற சேமிப்பை விட, அதிக ஊதியத்தை அரசு அதிகாரிகளும், ஆசிரியர்களும் வாங்குகின்றனர்.இதை எதற்கு கூறுகிறேன் என்றால், நாம் செலுத்தும் வரி வாயிலாகத்தான் நாட்டின் முன்னேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அரசு சொத்தை அழிப்பது, நம் சொத்தை அழிப்பது போன்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE