ரெய்டு, வசூல் வேட்டையில் ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கள்!| Dinamalar

ரெய்டு, வசூல் வேட்டையில் ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கள்!

Updated : ஜூன் 29, 2021 | Added : ஜூன் 29, 2021 | |
சித்ரா போட்டுக்கொடுத்த 'காபி'யை மித்ரா ருசித்துக்கொண்டிருந்தபோது, திடீரெனமின் தடை.''அக்கா… திருப்பூர்ல அடிக்கடி 'கரன்ட் கட்' ஆகுது... நெறைய பேர், சமூக வலைதளத்துல, இதைப் பத்தி தான் பதிவிடறாங்க'' என்று ஆதங்கப்பட்டாள், மித்ரா.''தேர்தல் நேரத்துல 'கரன்ட் கட்' பண்ணினா மக்களோட அதிருப்தியை சம்பாதிக்க வேண்டியிருக்கும்னு, ஆறு மாசமா எந்தவொரு பழுதையும்
 ரெய்டு, வசூல் வேட்டையில் ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கள்!

சித்ரா போட்டுக்கொடுத்த 'காபி'யை மித்ரா ருசித்துக்கொண்டிருந்தபோது, திடீரெனமின் தடை.

''அக்கா… திருப்பூர்ல அடிக்கடி 'கரன்ட் கட்' ஆகுது... நெறைய பேர், சமூக வலைதளத்துல, இதைப் பத்தி தான் பதிவிடறாங்க'' என்று ஆதங்கப்பட்டாள், மித்ரா.

''தேர்தல் நேரத்துல 'கரன்ட் கட்' பண்ணினா மக்களோட அதிருப்தியை சம்பாதிக்க வேண்டியிருக்கும்னு, ஆறு மாசமா எந்தவொரு பழுதையும் சரிசெய்லையாம்; இப்ப அந்த வேலைய செய்றதா மின் வாரிய ஊழியருங்க சொல்றாங்க''சித்ரா சொல்வது, மித்ராவுக்கு சரியென்று பட்டது.


லஞ்ச பட்டியல்''வெள்ளகோவில்ல மின் இணைப்பு தர்றதுக்கு, ஒரு அதிகாரி, வீட்டு இணைப்புக்கு, அஞ்சாயிரம், கடைகளுக்கு, பத்தாயிரம், தொழிற்சாலைக்கு ஐம்பதாயிரம்னு கேக்கறாருனு, ஒருத்தரு 'ஆடியோ மெசேஜ்' மூலமா, சமூக வலைதளங்கள்ல புகாரை பரப்பி விட்டுட்டாரு. மின் வாரியத்தினர் 'ஷாக்' ஆகிட்டாங்களாம்'' என்று, அடுத்த தகவலை சொன்னாள் மித்ரா.

''எங்க பக்கத்து வீதில இருக்கற, தம்பி 'சார்லஸ்' கூட, போன வாரம் தான் இந்த விஷயத்தை சொல்லிட்டு இருந்தான்; மின் வாரியம் குறிப்பிட்டிருக்கிற தொகையை மட்டும் கொடுத்து, மின் இணைப்பு வாங்கிடணும்னுதான் எல்லாத்துக்கும் ஆசை... ஆனா நடக்கணுமே''சித்ராவின் குரலில் விரக்தி; மின்சாரம் திரும்ப வந்தது.


'டீல்' பேசிய ஊழியர்''புதுசா வந்திருக்கிற கலெக்டரு, சின்சியரா இருக்காராம். செய்தித்தாள், 'டிவி'ல வர்ற, மக்கள் நலன் சார்ந்த பிரச்னைக்கு, உடனடியா நடவடிக்கை எடுக்க, துறைசார்ந்த அதிகாரிகளுக்கு, உத்தரவு பறக்குதாம்'' என்றாள், சித்ரா உற்சாகம் பொங்க.

''இப்படியே கலெக்டர் தொடர்ந்து செயல்பட்டா, மக்களுக்கு நல்லது; ஒரு ரேஷன் கடைல நடந்த முறைகேடு தொடர்பான புகார், அவரோட கவனத்துக்கு போனதாம். பல்லடம் அருகே ஒரு ரேஷன் கடைல, இறந்து போனவரோட கார்டை ரத்து செய்யாம, ஊழியரே, பொருட்களை எல்லாம் சுட்டுட்டு இருந்திருக்காரு... இறந்தவரோட மகனுக்கு விஷயம் தெரியவர, விஷயம் வெளியே கசியாம இருக்க 'டீல்' பேசி முடிச்சிட்டாராம், அந்த ஊழியரு'' என்று மித்ரா விவரித்தாள்.

சித்ராவின் மொபைல் போன் ஒலிக்க, ''ஹலோ… 'மலர்விழி' அக்காவா; ஒருநாள், உங்கள பார்க்க வர்றேங்க்கா'' எனக் கூறிவிட்டு, இணைப்பை துண்டித்தாள்.


தப்புக்கு தண்டனை''சிட்டி போலீஸ்ல, புதுசா வந்திருக்கற பெண் அதிகாரி கண்டிப்பானவரா இருக்காங்களாம். கமிஷனர் அலுவலகம் பக்கத்துல இருக்கற ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல வேலை பாக்குற ஏட்டம்மாவை 'பிளாக் மெயில்' பண்ணி பணம் பறிக்க, ஒரு மாத பத்திரிகையோட நிருபர் முயற்சி பண்ணியிருக்காரு. 'ஆடியோ வாய்ஸ்' ஆதாரம் பெண் அதிகாரிகைக்கு போக, அந்த நிருபர் மேல, 'கேஸ்' போட்டு, கம்பி எண்ண வச்சுட்டாங்க,'' என்ற மித்ரா நகைத்தாள்.

''இதே மாதிரிதான் மித்து, பல்லடத்துல இருக்க ஒரு டாக்டர், தன்னை 'பிளாக் மெயில்' பண்ணி பணம் பறிக்க ஒரு யுடியூபர் முயற்சிக்கிறதா சொல்லி, ரூரல் விவகாரத்தை கவனிக்கிற போலீஸ் அதிகாரிட்ட, ஆதாரத்தோட புகார் கொடுக்க தயாராகியிருக்காரு. இதை தெரிஞ்சுகிட்ட அந்த யுடியூபர், டாக்டர்கிட்ட மன்னிப்பு கேட்டு, அவரை 'கூல்' பண்ணீட்டாராம்' என்றாள் சித்ரா, விழிகள் விரிய.

''சிட்டில, வடக்கு மற்றும் மதுவிலக்கு ஸ்டேஷன்ல, வேலை பார்க்க பலருக்கும் ஆசையாம். ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்களின் சிபாரிசை வாங்கிட்டு வந்து வரிசைல நிக்கிறாங்களாம்,'' என்று, கூடுதலாக தகவல் சொன்னாள் சித்ரா.''அது, வளம் கொழிக்கிற ஸ்டேஷன் போல,'' என கூறி சிரித்தாள் மித்ரா.


'சுருட்டிய' போலீஸ்''முன்னாடி இருந்த, சிட்டி பெரிய போலீஸ் அதிகாரியோட வீட்டுக்கு தேவையான பொருட்கள வாங்கி தர்றது மொதக்கொண்டு, 'ஆல் இன் ஆல்' மாதிரி எல்லா வேலைகளையும் ஒற்றர் படைய சேர்ந்த ஒரு எஸ்.ஐ., அந்தஸ்திலான அதிகாரி செய்து கொடுத்திருக்காரு. பெரிய அதிகாரிக்கு தெரியாம, அவரோட கணக்குலேயே, தன்னோட வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிப் போட்டிருக்காரு. இந்த விஷயம் தெரிய வர்ற நேரத்துல, பெரிய அதிகாரி, 'டிரான்ஸ்பர்' ஆகிட்டாரு. தன்னோட இருப்பை அதே இடத்துல தக்க வைக்க, செல்வாக்குள்ள தொழில்துறையை சேர்ந்த ஒருத்தரோடு சிபாரிசுல காய் நகர்த்திட்டு இருக்காராம் அந்த போலீஸ்காரர். இந்த விஷயம் தெரிஞ்சு, பெரிய அதிகாரி ரொம்பவே 'டென்ஷன்' ஆகிட்டாங்களாம்,'' என்ற சித்ராவின் முகத்திலும், 'டென்ஷன்'.

''அக்கா, 'நீங்க 'சபாபதி'யோட கடைலதாேன அரிசி வாங்குறீங்க' எனக் கேட்டாள் மித்ரா.'ஆமா... அதுக்கென்ன இப்போ' என்று ஆச்சர்யமாக கேட்டாள், சித்ரா.


இதுவா, தான, தர்மம்!''போலீஸ் ஜீப்பை பார்த்தாலே, அரிசிக்கடை வீதில இருக்கற கடைக்காரங்க அலர்றாங்க,'' என 'புதிர்' போட்டாள் மித்ரா.''நீ என்ன சொல்றேனு எனக்கும் தெரியும். சிட்டிக்குள்ள வேல செய்ற சில போலீஸ்காரங்க, தங்களோட சொந்த பணத்துல நெறைய ஏழைகளுக்கு கொரோனா நிவாரணப் பொருள் வாங்கி கொடுத்திருக்காங்க. ஆனா, தெற்கு பக்கமாக இருக்கற ஸ்டேஷன்ல வேல பாக்குற சில போலீஸ்காரங்க, அரிசி கடைல இருந்து, காசு கொடுக்காமலேயே நிறைய பொருட்களை அள்ளீட்டுப் போய் தான, தர்மம் பண்ணியிருக்காங்க'' என்றாள், புதிரை விடுவித்த மகிழ்ச்சியுடன் சித்ரா. 'சரி... புண்ணியம்லாம் போலீசுக்கில்லை... அரிசிக்கடை உரிமையாளர்களுக்கு தான்'' என்றாள் மித்ரா, புன்னகைத்தவாறே.


அமுக்கிய அதிகாரி''காளைக்கு பேர் போன ஊர், போலீஸ் ஸ்டேஷன்ல, வாகன தணிக்கையின் போது, சட்ட விரோதமா கொண்டு வந்த மதுபாட்டில்களை ஒரு அதிகாரி பிடிச்சிருக்காரு. பாட்டிலை மட்டும் கணக்கு காட்டிட்டு, பறிமுதல் பண்ண பெரிய தொகையை, மொத்தமா அமுக்கிட்டாராம். இவரு மேல ஏற்கனவே, இந்த மாதிரி புகார் இருக்காம்''

''அந்த 'சண்முகன்' தான் காப்பாத்தணும். அதே மாதிரி, லிங்கேஸ்வரர் ஊர்ல, ஜெயில்ல இருந்தவரோட வங்கி கணக்குல இருந்து, 4 லட்சம் ரூபா சுருட்டிய போலீஸ்காரரை சஸ்பெண்ட் செஞ்சாங்கள்ல. இந்த விவகாரத்துல அதிகாரிகள் லெவல்ல இருக்கறவங்களுக்கும் தொடர்பு இருக்கும்னு சொல்லி, சில பேரு புகாரு அனுப்பியிருக்காங்களாம்'' என்றாள் மித்ரா.

''மாவட்ட எஸ்.பி., ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் நடக்குற கட்டப்பஞ்சாயத்து, சேவல் சண்டை, மது விற்பனைன்னு எல்லாத்தையும் கண்காணிக்கறதுக்குனு சிறப்புக்குழு அமைச்சிருக்காரு. கல்லா கட்ற போலீஸ்காரங்க, அதிகாரிங்க மிரண்டு போயிருக்காங்க.உள்ளூரு வி.ஐ.பி.,ங்க, கட்சிக்காரங்க சிலரு, தங்களுக்கு வளைஞ்சு போகாத அதிகாரிங்க மேல, வேணும்னே புகார் அனுப்பறாங்களாம். இதையும் கண்காணிக்குதாம், அந்த சிறப்புக்குழு'' என்று, மூச்சுவாங்க பேசினாள் சித்ரா.


'ஆனந்தம்' இல்லை''விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரும்னு, முதல்வர் சொன்னதும் , இலைக்கட்சிக்காரங்க தயாராகிட்டாங்க'' என, அரசியலுக்கு தாவிய சித்ரா, ''மாநகராட்சில 41, 56வது வார்டு சார்பில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கூட்டினாங்க. இதுல, ஆனந்தமான எம்.எல்.ஏ.,வுக்கும், சிவனின் பேர் கொண்ட நிர்வாகிக்கும் அழைப்பு விடுக்கலையாம்'' என்று சித்ரா கூறியதுமே, ''சிட்டிக்குள்ள அவங்களுக்கு வேலை இல்லைனு நெனச்சிருக்கலாம்'' என்றாள் மித்ரா.

''திருமுருகநாதர் குடிகொண்டிருக்கற ஊர்ல இருக்கற பேரூராட்சி அலுவலகத்துல தற்காலிக அடிப்படையில, பல வருஷமா வேலை பாத்துகிட்டு இருந்த ஒரு பெண் ஊழியரை, வேலைய விட்டு நிறுத்திட்டாங்களாம்.ஏற்கனவே தலைவரா இருந்த இலைக்கட்சியை சேர்ந்த ஒருத்தரு, பதவில இல்லாட்டியும், நிர்வாகத்துல தலையிடறதை வழக்கமா வச்சிருக்காரு.அவருக்கு ஆதரவா அந்த ஊழியரு இருந்ததால தான், ஆளுங்கட்சிக்காரங்க அழுத்தம் கொடுத்து வேலைய விட்டு துாக்கிட்டாங்கன்னு பேசிக்கிறாங்க. ஆனா, அந்தம்மா மேல, லஞ்சப்புகார் அதிகரிச்சதாலா துாக்கிட்டதா நிர்வாகத்தரப்பு சொல்லுது...பக்கத்து தெரு 'கவிதா'வுக்கு காய்ச்சலாம். கொரோனா டெஸ்ட் பண்ணியிருக்காங்களாம்'' என, தகவலைப் பகிர்ந்தாள் சித்ரா.''கொரோனால்லாம் இருக்காது, விடுக்கா...

நல்ல ஊர்ல இருக்கற ரேஷன் கடைல, ஆளுங்கட்சி தெற்கு வி.ஐ.பி.,யின் நெருங்கிய சொந்தக்காரர் ஒருத்தரு, ரொம்ப தலையிடறாராம். அப்பப்போ, ரேஷன் கடைல, ரெய்டு பண்றது, மண்டல அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்திலயே கலந்துக்குறாருனா பார்த்துக்கயேன்'' என்றாள் மித்ரா, ஆச்சர்யத்துடன்.வீட்டுக்கதவை யாரோ தட்ட, திறந்தாள் சித்ரா. 'அக்கா…இங்கே ரவின்னு யாராவது இருக்காங்களா?'' என, கூரியர் ஊழியர் கேட்க, சரியான முகவரி சொல்லி அனுப்பினாள் சித்ரா.


வசூல் வேட்டை''காங்கயத்துல, கரித்தொட்டி ஆலைகளுக்கு ரெய்டு போன அதிகாரிங்க, ஆளுங்கட்சிக்காரங்களோட அழுத்தம் காரணமாக, வெறும் ரெண்டு ஆலைக்கு மட்டும் 'சீல்' வைச்சுட்டு கிளம்பிட்டாங்களாம். அந்த ஊர்ல இருக்க ஆளுங்கட்சிக்காரங்க சிலரு, ரெய்டு பயத்தை காண்பிச்சே, மத்த ஆலைகள்ல, வசூல அள்ளிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''கட்சித்தலைமை தான் இதைக் கண்டுக்கணும்'' என்ற மித்ராவிடம், 'இன்னொரு காபி போட்டுக்கொடுக்கவா' எனக் கேட்டாள் சித்ரா. 'சரீக்கா... வேலை இருக்குனு சொல்லாம சொல்றீங்க... நான் கெளம்பறேன்'' என்று கூறி புறப்பட்டாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X